# என் பெயர் இஸ்லாம்

 
ஸலாம்(அமைதி) என்னும் வேர் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது என் பெயர். எனக்கு இன்னொரு பெயரும் உண்டு, ஆம் - அது கீழ்படிதல் ஆகும். என்னை ஏற்றவருக்கு வாழ்க்கை நெறியையும் மன அமைதியை அளிப்பேன். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என சொல்லி ஆரம்பம் செய்கிறேன்..


# வாழ்க்கையை இறைவன் வீணுக்காக படைக்கவில்லை என்கிறேன். மனிதர்களிடம் அன்பு காட்டுபவன் இறைவனின் அன்பை பெறுவான் என்கிறேன். இறைவனின் கட்டளைக்கு செவி சாய்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் நீதமாகவும், நடுநிலையுடன் இருக்க சொல்கிறேன்.


 வேடிக்கை என்னவென்றால்...

அடக்குமுறையை ஏவுவதாக என்னை குற்றம் பிடிபவர்கள்தான் என் மேல் அடக்குமுறையை திணித்துவிட்டு வசதியாக மறந்துவிடுகின்றனர். குரானை எரிக்கின்றர்கள். ஹிஜாபை தடுகின்றார்கள். ஆம் என்னை வெறுக்கும் இவர்கள்தாம் மேற்கத்திய நாடுகளுக்கு நான் ஒரு அபாயம் என ஓயாமல் அவதூறு பரப்புகின்றனர். நான் என்னை பற்றி சிறிது பேச ஆசைப் படுகிறேன்.
# என்னை பொறுத்தவரை - நல்ல மனிதன்தான் நல்ல முஸ்லிம் ஆக முடியும். திருட்டு, கொலை போன்ற பெரும்பாவங்களில் இருந்து நான் அவனை காக்கிறேன். கல்வியை கட்டாயம் ஆக்குகிறேன். மனிதர்களை சமமாக பாவிக்க சொல்கிறேன். பார்க்கும் ஒவ்வொருவரையும் புன்னகைக்க சொல்கிறேன். புன்னகை கூட தர்மம் என்கிறேன் – இது எந்த வகையான அடக்கு முறை நீங்களே கொஞ்சம் சொல்லுங்கள்? 

# நான் தூய்மையையைத்தான் போதிக்கிறேன் – ஆம், புகை, மது, மாதுவில் இருந்து விலகி இருக்க சொல்கிறேன். அண்டை வீட்டுக்காரனின் உரிமைக்கு செவி சாய்க்க சொல்கிறேன். தூய்மையான உணவை பெறவும், நேர்மையான சம்பாத்தியத்தையும் கடமையாக்குகிறேன். சுத்தம் நம்பிக்கையில் சரிபாதி என்பது என் கட்டளை!

# என்னை கவனியுங்கள் - நான் பொறுப்பற்றவனாக இருந்தால் என்னை உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர்  பின்பற்றுவார்களா? நான் அனைவருக்கும் நன்மையை அறிந்து நேர்மையுடன் நடக்க உந்து சக்தியாகவும் ஊக்கமளிப்பவனாகவும் இருக்கிறேன். என்னுள் நுழைந்தவன் நீதி தவற மாட்டான். நீதி தவறினால் அவனை என்னுள் நான் அனுமதிப்பதில்லை. ஆம் நேர்வழியும், வழிகேடும் சமமாகாதே!  

# உரிமைகளை காக்கிறேன் – ஆம், எதிர்வரும் பெண்ணை கூட மதிக்க சொல்கிறேன்.. அவர்கள் மீது கண்கள் மேய்வதை தடுக்கிறேன். உயிரையும், உடமையையும் வாலிபத்தால் வீணாக்கிவிடுவதில் இருந்து காக்கிறேன். அன்னையின் காலுக்கடியில்தான் சொர்க்கம் என தாய்மையை போற்றுகிறேன். மனைவியை அன்பு கொள் ஏன ஏவுகிறேன். அவளுக்கு சொத்து முதல் கணவன் மேல் வரை நியாயமான உரிமைகளை தருகிறேன்.  

# அன்பை போதிக்கிறேன் – ஆம், விலங்குகளிடம் கூட அன்புடனும் அரவணைப்பையும் காட்ட சொல்கிறேன். யாரேனும் சண்டை பிடித்தால் மூன்று நாட்களுக்கு மேலேயும் பேசாமல் இருப்பதையும் கண்டிக்கிறேன். அண்டை வீட்டார் பசித்திருக்க வயிறை நிரப்புவதை வெறுக்கிறேன். ஏழைகள் வாழ்வு உயர ஏழை வரியை ஏவுகின்றேன். மனம் போல் வாழ்க்கை வாழ்வதை தடுக்கிறேன். படைத்தவனிடமே உங்கள் மீட்சியை ஆகிகொளுங்கள் என்கிறேன். செவி தாழ்த்திக் கேளுங்கள்! கேட்பவர்கள் யாரேனும் உண்டா? 


என்றாலும்...
இவர்கள் சொல்கிறார்கள் நான் ஒரு பயங்கரவாதியாம், அந்தோ பாவம்! தனி ஒரு மனிதனை கொலை செய்வது அணைத்து மனித இனத்தை கொலை செய்வதற்கு ஒப்பாகும் என நான் சொல்வது இவர்களின் காதுகளை என்று அடையுமோ?

எனது பெயரால் கொலை செய்பவர்களும், குண்டு வைப்பவர்களும் சிலர் உண்டு. அந்தோ பாவம்! அவர்கள் நரக நெருப்பை பயந்து கொள்ள வேண்டாமா? ஒவ்வொரு மதத்திலும் தங்கள் சுய விருப்பங்களை மத மூலாம் பூசி காரியம் சாதிக்கும் சில விஷமிகள் உண்டு. அவர்கள் செயல்களை நான் அனுமதிக்காத போது அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்? என்னுடைய போதனைக்கு தவறான விளக்கம் சொல்வதை கண்டிக்கிறேன்.


# இவர்கள் சொல்கிறார்கள், நான் ஒரு வரம்பு மீறக் கூடியவனாம்! சிறிய திருட்டனாலும், பெரிய பாவமானாலும் பாரபட்சம் இன்றி இன்றும் நீதியை நிலை நட்ட சொல்வதில் என்னை போல வெற்றி பெற்ற மார்க்கத்தை காட்ட முடியுமா? இது இப்படி இருக்க நான் நச்சு செயல்களை கண்டிப்புடன் நசுக்கும் போது போலி மனிதாபிமான கண்ணாடியை இவர்கள் அணிந்து கொள்வது ஏனோ? அந்தோ பாவம்!

# அமைதியை விரும்பும் நான் - அக்கிரமத்திற்கு எதிராக போர் தொடுக்கிறேன். ஆம் போர் என்பது அதர்மத்தை அழிக்கவே! நான் நன்மையை ஏவுகிறேன், தீமையை தடுக்கிறேன் ஆனால் என் பெயரை சொல்லி அறைவேட்காடுகளின் செயலை வைத்து என்னை எடை போடலாகாது.

நான் முழுமையானவன், தெளிவானத்தை பேசுகிறேன், புரிந்து கொள்ள மறுக்கும் மூடனின் செயலுக்கு அவனே பொறுப்பு, அவன் நரக நெருப்பின் எரிகல் ஆவான்! தவிர இறைவன் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் மறுமையில் அனு அளவு கூட தீமை செய்யாது நீதி செய்வான். சர்வ அதிகாரம் பெற்றவன் அவனே! அவனுக்கே எல்லா புகழும்!

ஏன் வந்தேன் என்பதை கேட்பவர் இங்கே உண்டா? – ஆம், நான் எளிமையான வாழ்க்கை திட்டத்தையும் நற்போதனைகளையும் கொண்டுவந்துள்ளேன். நல்லுணர்வு பெறுபவர் உண்டா? – ஆம், நான் கண் மூடித்தனமாக விசுவாசம் கொள்ள சொல்லவில்லை. இறை கட்டளைகளிலும், தூதர் மொழிகளிலும் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து ஆய்வு செய்பவர் இங்கே உண்டா?

நான் இதை சொல்ல உங்களிடம் எந்த கூலியையும் கேட்பது இல்லை – ஆம், மாறாக உங்கள் மனங்களில் உள்ள காயங்களுக்கு இரட்சிப்பையும், மன உறுதியுடன் வாழ சில உபதேசங்களையும் தருகிறேன். நாடு நிலையுடன் ஆராய்பவர் ஆச்சரியத்தில் திளைப்பார் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

# நான் சொல்கிறேன், “எப்போதும் தெளிவான ஒன்றின் பக்கம் தேடி செல்லுங்கள், முழுமையான அறிவு வருவதற்கு முன் கண்மூடித்தனமான முடிவு வேண்டாம்”. அறியாமையும், குருட்டு நம்பிக்கையும் இங்கேயும் குழி பறிக்கும், மரணத்திற்கு பின்னும் குழி பறிக்கும். நல்ல முடிவு யாருக்கு? பயபக்தி உடையவர்களுக்கு அன்றோ?

# பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற குடைக்குள் அழைக்கிறேன்.  இறைவன் மேல் விசுவாசம் கொண்டவர் இதில் முழுமையாக நுழைந்து கொள்ளட்டும், அவர்களுக்கு நான் சுவர்க்கத்தை வாக்களிக்கிறேன்.. அவர்கள் அங்கே துன்பப்படவும் மாட்டார்கள், துயரப்படவும் மாட்டார்கள்.

ஆம் நான்தான் இஸ்லாம் – இறைவனிடம் இருந்து மீண்டும் வந்த ஏகத்துவ கொள்கை – என்னை ஏற்பவருக்கு நான் முன்பு சொன்னது போல “சலாத்தை” தருவேன்- ஆம் சலாம் என்றால் அமைதி! இங்கேயும் அங்கேயும்!


(நன்றி: இது https://www.youtube.com/watch?v=ln2a16xwO2s காணொளியை தழுவி எழுதப்பட்டுள்ளது)