10. ஈமான் பாட்டரியை சார்ஜு செய்வது எப்படி?

"அம்மா இன்னைக்கு காலையில ஒங்களுக்கு ஏதாவது வேலை இருக்குதா? எங்கயாவது போக வேண்டி இருக்குதா?" பீடிகை போட்டாள் குல்தும்.

"ஒன்னும் இல்ல குல்தும். ஏன் என்ன ஆச்சு?" - இது பரீதா 

"அம்மா.. இங்க பக்கத்து தெருவுல இன்னைக்கு காலையில வாரந்திர பெண்கள் ஹலக்கா இருக்கு. இன்ஷா அல்லாஹ் உங்கள கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்"

"நான் வரல குல்தும். எனக்கு எல்லாம் அது சரிபட்டு வராது"

"ஏம்மா? ரொம்ப நல்ல இருக்கும்மா. மொத்தமா 2 மணி நேரம். முதல் அரைமணி நேரம் குரான் ஓதுவோம், அப்புறம் அதோட தமிழ் மொழியாக்கத்தை படிப்போம். அப்புறம் இன்னொரு அரைமணி நேரம் யாரவதுஒன்னு ரெண்டு பயான், வீடியோ பயான், வினாடி, வினா அப்படி இப்படின்னு பிரயோஜனமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்."

"இல்லம்மா ஒரு மணி உங்கப்பாவுக்கு சுட சுட சாப்பாடு ரெடி பன்னனும், மனுஷன் பசி தாங்க மாட்டார். இல்லாட்டி சத்தம் போடுவார்"

"ஏம்மா அவரு என்ன சின்னபுள்ளய கவனிச்சுகுற மாதிரி இல்ல சொல்றீங்க.. எப்பவாச்சும் ஒருநாள் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டாரா?"

"உனக்கு என்ன சொலிட்டு போயிடுவ, பின்னாடி நான் இல்ல உங்கப்பாகிட்ட பாட்டு வாங்கனும்" 

"நான் அப்பாவ சமாளிச்சுகிறேன். எப்பவாவதுதான் இது மாதிரி சான்ஸ் கிடைக்கும். யூஸ் பன்னிக்க வேண்டாமா?  போர் அடிக்கும்னு நினைக்குறீங்களா? 

அம்மா..இது ரம்ஜான் மாசம், அதனால நீங்க செய்யுற ஒவ்வொரு நன்மைக்கும் அல்லாஹ் 10 மடங்குல இருந்து 700 மடங்கு வரை அதிகப்படுத்திக் கொடுப்பான். நீங்க இதையே அடுத்த மாசம் பன்னுனீங்கன்னா 700 க்கு பதிலா 10, 20 இப்படித்தான் கிடைக்கும். இது ஜாக்பாட் மாசம்மா.. 

வேலை இல்லம்மா ஒரு நிமிஷம் கிடைச்சா கூட அதுல ஒரு சுபஹானல்லாஹ் சொல்லலாம். ஞாபகம் இருந்ததுன்னா வேலை நேரத்தில் கூட சுபஹானல்லாஹ், அல்ஹதுளில்லாஹ், அல்லாஹு அக்பர்ன்னு தஸ்பிஹ் செஞ்சுகிட்டே இருக்கலாம்.. "

"அடியே குல்தும்.. நானெல்லாம் அந்த காலத்துல நபில் தொழ ஆரம்பிச்சேன்னா குறைஞ்சது 2 மணி நேரம் ஆகும். நீ எல்லாம் சின்ன புள்ள இப்ப வந்து எனக்கு அட்வைஸ் பன்னுற"

"அம்மா...    எல்லாம் சரிதான். ஒரு சின்ன அமல் இருந்தாலும் தொடர்ந்து செய்யுற அமல்தான் அல்லாஹ்வுக்கு ரொம்ப பிடிக்கும் அப்படீன்னு ரசுல்லாஹ்(ஸல்) அவங்க சொல்லலி இருக்காங்க.."

"என்னடி நீ தொழுகற, நோன்பு வைக்குற அப்படீன்னு அலட்டிக்குற. நான் 10 வயசுலேயே 30 நோன்பு வச்சுருக்கேன் தெரியுமா? ஒரு வாரத்துல ஒரு குரானை ஓதிடுவேன் தெரியுமா? "ஹ்க்கும். நான் கேட்காதா பயானா நீ கேட்டுட போற? எங்கப்பாவே ஒரு ஹஜரத்தாக்கும்."" 

"யம்மா.. நீங்க உங்களளோட பழைய கதைய சொல்றது நிறுத்துங்கம்மா.. அப்படீன்னா இப்ப ஏன்மா நோன்பு வைக்கல? ஒரு வேலை கூட தொழுகறது இல்லை? உங்களுக்கு பிடிக்கலன்னா சாக்கு போக்கு ஆயிரம் சொல்ல முடியும். உங்களுக்கு வர இஷ்டம் இல்லைன்னு நினைக்குறேன்."

"சாக்கு போக்கு எல்லாம் இல்ல குல்தும். உன்கிட்ட சொல்றதுக்கு என்ன எனக்கு கஷ்டம்?  என்னமோ தெரியல குல்தும் இப்பலாம் முன்ன மாதிரி என்னால இருக்க முடியல..எதையும் செய்ய ஆர்வம் வர மாட்டேங்குது, தொழுவனும், இப்பாதத் செய்யனும்னா மனசுல ஒரு ஈடுபாடு வரமாட்டேங்குது, சில பல நேரத்துல சரி தொழலாம், குரான் ஓதலாம்ன்னு நினைச்சாகூட மறுகனமே அப்பறம் பாக்கலாம்னு நினைப்பு வருது, ஒருமாதிரி வெறுமைதான் இருக்கு குல்தும். ஆமா.. என்னோட இறையச்சம், பாட்டரி குறைஞ்சுதான் போயிடுச்சு போல.."

"அதனால்தான்மா சொல்றேன்..  இந்த மாதிரி இடத்துக்கு அடிக்கடி போனா ரெண்டோறு பயான் கேப்போம்..நம்மள சார்ஜ் பண்ணது போல இருக்கும். அதுக்கப்புறம் இன்னும் அதிகம் அதிகம் அமல்கள் செய்ய ஆர்வம் பிறக்கும். நல்லா கேட்டுக்குங்க நம்ம சார்ஜு எப்பவுமே ஹய்யா இருக்காது, நபிகள்(ஸல்) அவர்களே சொல்லி இருக்கார் மனுஷனோட ஈமான் எப்பவுமே ஒரு மாதிரி இருக்காது அல்லாஹ் ரசூல் பத்தி கேட்கும் போது கூடும், நடுவுல கேப்பு விட்டோமுன்னா ஈமான் குறையும். இது எல்லாருக்கும் இருக்குற நார்மலான ஒன்னுதான், அதனால அலட்டிக்க தேவை இல்லை..நாமலாவே  சில நல்ல விஷயங்களை தேடி கேட்டு, படித்து மறுபடி சார்ஜு பண்ணிக்க வேண்டியதுதான். 

நாமளாகவே நம்மள சார்ஜு பன்னிக்க முடியாத பட்சத்துல வெளியில நடக்குற இந்தமாதிரி வாரந்திர பெண்கள் ஹல்கா, ஜும்மா பயான் எல்லாம் நமக்கு கிடைச்ச சான்ஸ். விடக் கூடாது.. ஆம்பளைங்க வெளியில போறாங்க நாலு பெற சந்திக்கறாங்க, நாலு நல்ல விஷயத்தை கேக்குறாங்க.. நம்மளுக்கு நாமலே எதாவது செய்யாட்டி நம்ம ஈமான் சைஸு கட்டெரும்பாதான் போகும்... வாங்கம்மா யாரும் யாருக்கும் பயான் பன்னுறது இல்ல.. நமக்கு தெரிஞ்ச விஷயத்தை மீண்டும் மீண்டும் படிகறதுனால, கேக்குறதுனால, மறுபடி ரெப்ரெஷ் பன்னதுமாறி இருக்கும். ஒருத்தர ஒருத்தர் ஞாபக படுத்திகிறது நல்லது.. அப்பதான் ஒருத்தர் சறுக்கினா இன்னொருத்தர் ஞாபகப்படுத்த முடியும்."

"ஹ்ம்ம்.. நீ சரியாதான் சொல்லுற குல்தும் .. நான் தனியாவே எத்தன வருஷதுக்குதான் நோன்பு வைக்க முடியும்? தோழா முடியும்? ஒரு சப்போர்ட்டும் இல்ல. அப்புறம் என்னோட எல்லா அமலும் குறைஞ்சு போயிடுச்சு.. அப்புறம் நீங்க எல்லாம் பிறந்தீங்க.. வீட்டு வேலை சரியா இருந்துகிட்டே  இருக்கு. ரொம்பதான் மாறிடுச்சு குல்தும்...

"ஏய்.. நீயே குல்தும்  உங்கப்பாகிட்டாயே கேளு. அவரு விட்டா  நான் வரேன்"

(அல்ஹம்துலில்லாஹ் என்று மனதுக்குள் எண்ணியவாறு தனது அப்பாவை நோக்கி சென்றாள் குல்தும்)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

=======================================================================

Reference:
-------------
"(ரமளானில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மையும் அது போன்ற 10 மடங்கு முதல் 700 மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும்" என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1945) 

9. அழகிய பிரார்த்தனை

அதிகாலை 4 மணி.

குல்தும் எழுந்து சால்னாவையும், சாதத்தையும் சுட வைத்தாள்.  சிக்கன் கேரேவி இருந்தும் சாப்பிட ஆர்வம் இல்லாமல் "தேமே" என்று விழுங்கிக் கொண்டு இருந்தாள். ஆம் வீட்டில் இத்தனை பேர் இருந்தும் எத்தனை நாள்தான் தனியாக  எழுந்து நோன்பு வைப்பது? இருந்தாலும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று அவளாகவே சொல்லிக் கொண்டாள்.  அல்ஹம்துலில்லாஹ்  என்றால், "அல்லாஹ் போதுமானவன்" என்று அர்த்தம்.

எப்பொழுது எல்லாம் மனகஷ்டம் மேலிடுகிறதோ அப்பொழுதெல்லாம் இறைவன் பக்கம் திரும்புவது நம்பிக்கையாளர்களுக்கு பலன் தரும் ஆகவே குரானை படிக்கலாம் என  தனது மொபைலை எடுத்தாள். அதில் உள்ள தமிழ் குரானை வாய்சை அழுத்தினாள். முதல் வசனமே அவளுடைய மனதிற்கு ஆறுதலாக இருந்தது;
(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், தான தர்மங்கள் செய்வோராகவும், ஸஹர் நேரத்தில் மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர். (3:17)

உடனே கண்களை மூடி திருக்குரானில் அல்லாஹ் கற்றுத்தந்த பிரார்த்தனைகளை கேட்க்க ஆரம்பித்தாள்:

# (“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” (14:40) “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. (14:41) 

# “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (3:8) 

# “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக!
(இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.(46:15)

சுபுஹ் தொழுதுவிட்டு எல்லோரையும் எழுப்பிவிட்டு எல்லோருக்காகவும் டீ தயாரித்துக் கொண்டிருந்தாள். "ட்ரிங்.. ட்ரிங்" - குல்துமின் போன் ஒலித்தது எடுத்து அட்டண்ட் செய்தாள், எதிர் முனையில் தோழி பல்கீஸ்.

"அஸ்ஸலாமு அலைக்கும் குல்தும் எப்படி இருக்கீங்க.. உங்க அம்மா வந்து இருக்காங்களா? நான் உங்க வீட்டுக்கு போனத பார்த்தேன்,"

"ஆமா பல்கீஸ்"

"இன்னைக்கு 10 மணிக்கு ஹல்கா இருக்கு. அவுங்களயும் அழைச்சுட்டு வர முடியுமா? இன்னைக்கு ருக்கையா அக்கா வராங்க.."

"ம்ம். இன்ஷா அல்லாஹ்" என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் குல்தும்.

 மனதுக்குள் அவளாகவே சொல்லிக் கொண்டாள், "அல்ஹம்துலில்லாஹ்!"

8. உங்க வீட்ல யார் யாரெல்லாம் நோன்பு?

"டிங் டாங்"

"குல்தும் யாருன்னு பாரு"

"ஏங்க என்னோட அம்மா, அப்பா, தம்பி வந்து இருக்காங்க.. பாருங்க.."

"வாங்க மாமா, வா முஸ்தபா. எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கோம் மாப்பிள்ளை. வேலை எல்லாம் எப்படி போகுது?"

"அல்ஹம்துலில்லாஹ்.. உங்க உடம்பு எப்படி இருக்கு மாமா?"

(இப்படியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். சிறிது கழித்து குல்தும் கேட்டாள்: ஏங்க நீங்க நாளைக்கு நோன்பா?

"பிறகு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு தூங்க போய்விட்டான் சுல்தான். குல்துமின் முகம் கொஞ்சம் சுருங்கித்தான் போய்விட்டது. தனது தம்பியை பார்த்து,

"டேய் முஸ்தபா,  நாளை சஹருக்கு சாப்பாடு வைக்கவா?"

"நான் ஸ்லிம்மாதானே இருக்கேன்.. நான் நோன்பு இல்ல.." என்றான் முஸ்தபா.

"ஏன்டா வைச்சா குறைஞ்சு போயிடுவியா? என்றாள் குல்தும்.

"நீதான் கொஞ்சம் சதையெல்லாம் போட்டிருக்க நீ கண்டிப்பா நோன்பு வைச்சே ஆகணும், 30 நாளு இல்ல 90 நாளு அப்பத்தான் உனக்கு வெயிட்டு முழுசா குறையும்." என்றான் நக்கலாக.

குல்தும் அம்மா இடைமறித்து "டேய் முஸ்தபா.. நீ வைக்குறீன்னா வை.. உன் அக்காவ ஏன்டா கிண்டல் பண்ற.."

குல்தும் விடவில்லை, "தம்பி, நோன்பு வக்குறது நம்ம மேல கடமைடா.. இன்னும் எத்தன நாளு இப்படி விளையாட்டுதனமா இருப்ப?"

"குல்தும். உனக்கு விருப்பம் இருந்தா நீ வை. எனக்கு இஷ்டம் இல்ல... எனக்கு எப்ப இஷ்டம் வருதோ அப்ப பாக்கலாம்.."

"குல்தும்  விடும்மா.. இப்பதான் கேம்பசுல செலக்ட் ஆகி நல்ல கம்பனில்ல பிளேஸ் ஆகியிருக்கான். நோன்பல்லாம் வைச்சுகிட்டா எப்படி வேலை பன்ன முடியும்?" என்றாள் குல்தும் அம்மா.

குல்தும் விடவில்லை.. "ஏன் முடியாது? மொட்ட வெயில்ல சோறு தண்ணி இல்லாம கிரிக்கட் எல்லாம் கலையில இருந்து சாயந்தரம் வரைக்கும் விளையாட முடியுது, வெறும் வயித்துல வேலை செய்ய முடியாதா?"

பொறுமையிழந்து குல்தும் அப்பா சொன்னார்: "ஏன் குல்தும் அவன டார்ச்சர் பண்ணுற.. நீ என்ன இத்தனை நாளு நோன்பு வச்சியா? திடீருன்னு என்ன புது பழக்கம்? முதல்ல உன் வீட்ல உன்னோட புருஷனே நோன்பு வைக்கல.. சின்ன பையன் அவன போய் டார்ச்சர் பணிக்கிட்டு இருக்க.. போ போய் தூங்கு.. சீக்கிரம் எந்திரிகனும்ல..  நீ மட்டும்தான் நாளைக்கு நோன்பு. போன தடவ மாதிரிசஹருக்கு தூங்கிட்டு பட்னியா எல்லாம் நோன்பு வைக்காத.."

சுருக்கென்று இருந்தது குல்துமுக்கு.. "சரிப்பா நான் தூங்க போறேன், நீங்க படுத்து தூங்குங்க" என்று இடத்தை காலி செய்தாள்.

"ம்ம்.. வர வர இந்த பிள்ளைங்களுக்கு என்ன ஆகுதுன்னே தெரிய மாட்டேன்குது.. 5 வேளை தொழுதே ஆகனும், 30 நாள் முழுசும் நோன்பு வைச்சே ஆகனும் அப்படீன்னு பிடிவாதம் வர ஆரம்பிச்சுருச்சு..அப்பறம் நம்மகிட்டயே வந்து அத பண்ணனும் அது ஹலால், இத பண்ணக் கூடாது இது ஹராம் அப்படி, இப்படீன்னு நமக்கே வந்து பயான் பண்ணுறாங்க..

சர்தான்.. தொழுவுற, நோன்பு வைக்குற பயலுக எல்லாம் அப்படியே ஒழுங்காவா இருக்கனுங்க.. வர வர ரொம்ப ஓவராதான் போறாங்க..."

"அட.. நீங்க மறுபடி ஆரம்பிச்சுடீங்களா.. படுத்து தூங்குங்க.."- இது குல்தும் அம்மா பரீதா.

...........

படுக்கையில் குல்துமிற்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தாள். குல்துமின் காதுகளில் அந்த குரான் வசனம் ஓடிகொண்டே இருந்தது.

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3













7. செவிக்கு பூட்டு

குல்தும் தனது கனவனிடம் கூறினாள்:  என் தாத்தா கூட எந்த ஒரு கடமையான நோன்பு, கடமையான தொழுகை மட்டும்தான் செய்வார். நான் கூட ஒரு தடவ ஏன் தாத்தா ஹல்ரத்தா  இருந்துகிட்டு என்ன விட கம்மியா இபாதத் செய்யுறீங்கலேன்னு கேட்டேன். அவரு சிரிச்சுகிட்டே என்ன தெரியுமா சொன்னாரு? 

"ஒவ்வொருதற்குக்கு ஒவ்வொரு அளவுகோல் இருக்கு. எல்லாத்தாலையும் எல்லா இபாததுக்களையும் செஞ்சுட முடியாது. சிலருக்கு நோன்பு வைக்கறது ஈஸி, சிலருக்கு குரான் ஓதுறது, சிலருக்கு  தகஜ்ஜத். சிலருக்கு அதிகமா தான தர்மங்கள் செய்ய பிடிக்கும், யாருக்காவது தாவா செய்யணும்னா சொல்லு இன்ஷா அல்லாஹ் நான் ஓடி வருவேன். நான் கடமையான வணக்கத்தை செய்வதோடு சில பல சுன்னத்தான , நபிலான  வணக்க வழிபாடுகளை செய்கிறேன், உன்னுடைய அளவுக்கு நான் இல்லாவிட்டாலும்,  மிகவும் குறைவாக செஞ்சு தவறான முன் உதாரணமாகவும் மாட்டேன். 

நான் என்ன சொல்ல வரேன்னா .. வணக்க வழிபாடுல நான் உன்ன விட பெரிசு, நீ என்ன விட சிறுசுன்னு எல்லாம் நினைக்க கூடாது. இப்படி நினைக்குறது மனசுல ஒரு superiority Complex  ஐ ஏற்படுத்தும். அடுத்தவனை இளக்காரமா பார்க்க கூடிய மனநிலை  வரும் கூடவே, பெருமையும் வந்துவிடும். பிறகு மற்றவர்களை மதிக்க தெரியாமல் போய் விடும். யாருடைய பேச்சுக்கும் செய்வி சாய்க்க முடியாம நஷ்டமடைய வேண்டியாகிவிடும். வணக்க வழிபாடானாலும் சரி, வசதி வாய்ப்பு  ஆனாலும் சரி, நான் உன்னவிட பெரிசாக்கும் அப்படீன்னு நினைச்சா போச்சு.. அவ்வளவுதான்.. அல்லாஹ் கேவலபடுத்தி  வெளிய அனுப்பிடுவான். 

அல்லாஹ் மனுஷன படைக்குறத்துக்கு  முன்னாடி ஜின் இனத்தை நெருப்பால படைச்சான். அதுல ஒருத்தன்  அல்லாஹ்வை வணங்கி மிக நல்ல பேரு எடுத்து  மலக்குமார்கள் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டான். அவன்தான் இப்லீஸ். அளவுக்கு அதிகமான வணக்கம் அவனுக்கு தலை கனத்த தவிர எதையும் தரல. அல்லாஹ் மனிதனை முதன்முறையா படைக்கும் போது  அவனுடைய கர்வம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் இருந்து தடுத்திடுச்சு.. நான்  நெருப்பினால படைக்கப்பட்டவன், வெறும் களிமனால  படைக்கப்பட்ட ஆதமுக்கு சுஜுது செய்ய முடியாதுன்னு அல்லாஹ்க்கிடையே  வாக்கு வாதம் செய்தான். பெருமைக்கு உண்மையான சொந்தக்காரன் அல்லாஹ்  மட்டும்தானே...   "

குல்தும் சொன்னாள்: அதே போல inferiority Complex ஐயும் வர விடக்கூடாது. அது  உங்ககிட்ட உள்ளத  பற்றாக்குறையாக காமிக்கும், அதே தேவை இல்லாம பொறாமை, திருப்தி அடையாத நிலைமையை  ஏற்படுத்தும். பாத்திங்களா அதனாலதான் என் தாத்தா உங்களுக்கு உபதேசித்தது பிடிக்காம போயிடுச்சு, superiority complex போலவே , யாருடைய அறிவுரையையும் உள்ள எடுதுக்கவிடாது. ஆக முன்னதும் வேண்டாம், பின்னதும் வேண்டாம்.  

அதனால திருப்பியும் சொல்றேன், அவன்  என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் அப்படீன்னு எல்லாம் அலட்டக் கூடாது. 

அல்லாஹ் என்ன சொல்றானோ அத தவறாம செய்யணும், அல்லாஹ் என்ன அளவுகோல் வச்சு இருக்கானோ அத குறைக்காம செய்யணும், 

அத அல்லாஹ்வுக்காக மட்டும் செய்றேன் அப்படீன்னு நிய்யத்து மனசுல இருக்கனும். அல்லாஹ்வுக்கு முன்னால நான் எப்படி அப்படீன்னு மட்டும்தான் சிந்திக்கனும்.

 நான் சொல்றது சரிதானே?"

சுல்தான் மெல்ல புன்னகைத்தான்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

  

6. நஷ்டத்தில் இல்லதா மனிதன் யார்?

ஏங்க... நாளைக்கு நோன்பு வைப்பீங்களா? அரிசி உங்களுக்கும் சேர்த்து வைக்கவா? - இது அடுப்பறையில் இருந்து சுல்தான் பாய் மனைவி குல்தும்.
சுல்தான் பாய் பதில் ஏதும் சொல்லவில்லை, செய்திதாளில் மூழ்கியே கிடந்தார்... 
"ஏங்க நோன்பு வைக்குறீன்கன்னா சொல்லுங்க.. இல்லாட்டி நான் உங்களுக்கு சாதம் வைக்கல..": மறுபடி அவர் மனைவி உள்ளே இருந்து சத்தம் போட்டார். 
சுல்தான் பாய் பதில் ஏதும் சொல்லவில்லை.. காதில் எதுவும் விழுந்தமாதிரி கூட காட்டிக்கொள்ள வில்லை.
ஏங்க என்னங்க ஆச்சு? ஒண்ணுமே சொல்லமாட்டேங்குறீங்க.. நான் உங்கள ஹல்ரத்துகிட்ட கூட்டிட்டு போனது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்குறேன்.    
"அப்படி எல்லாம் இல்ல."
"அப்புறம் ஏன் இப்படி இடிஞ்சு போய் சோகமாக இருங்கீங்க.. நோன்பு வக்காததுக்கு இறையச்சம் ரொம்ப கம்மி ஆனதுத்தான் காரணம் அப்படீன்னுதாத்தா சொன்னாரேன்னு வருத்தப்படுறீங்கதானே?"
" ஆமா.. அவரு அப்படி என்னைய பாத்து சொல்லலாம்?, நான் நோன்பு வைப்பேன், வைக்காம போவேன் அது என் இஷ்டம்."
"அவரு உங்கள பாத்து என்ன குறையாவா சொன்னாரு? பொதுவாகத்தானே சொன்னாரு.. இத ஏன் பர்சனலா எடுத்துக்கறீங்க? டாக்டர் உங்க ரத்தத்தை டெஸ்டு பன்னி சக்கரை வியாதிக்கு வாய்ப்பு அதிகம்னு சொன்னா, டாக்டர கோபிச்சுப்பீங்களா?"
"அப்படி இல்ல.. இருந்தாலும் என்னோட இயலாமைய, பலவீனத்த யாராவது பேசினா, வருத்தம்தான் வருது குல்தும். அத எப்படி ஒதுக்க முடியும்?  
" இவ்வளவுதானா உங்க பிரச்னை. இங்க பாருங்க நாம செய்யுற எல்லாத்தையும் அல்லாஹ்வுக்காத்தான் செய்யுறோம், அல்லாஹ் தான் கூலி கொடுக்க போறான். ஆக இறையச்சத்த வச்சுதான் அல்லாஹ் கூலி கொடுப்பான். கம்மிய செய்யுற ஒருத்தனுக்கு 700 நன்மையையும், அதிகமாக ஆனாலும் கர்வத்துடன் செய்யுற ஒருத்தனுக்கு ஒரு நன்மை அப்படீன்னு குறைச்சு கூட கொடுத்திடுவான்.
அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் அப்படீன்னு எல்லாம் அலட்டக் கூடாது. அல்லாஹ் என்ன சொல்றானோ அத தவறாம செய்யணும், என்ன அளவுகோல் வச்சு இருக்கானோ அத குறைக்காம செய்யணும், அது அல்லாஹ்வுக்காக மட்டும் செய்றேன் அப்படீன்னு நிய்யத்து மனசுல இருக்கனும். அல்லாஹ்வுக்கு முன்னால நான் எப்படி அப்படீன்னு மட்டும்தான் சிந்திக்கனும். நான் சொல்றது சரிதானே? ஹல்றதுக்கு சொல்லவேண்டிய கடமை இருக்கு சொல்றாரு ஏன்னா அல்லாஹ்வே சொல்லி காட்டுகிறான்: 
'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'(103:1-3) 
"இதுக்காக எதையும் பர்சனலா எடுத்துக்காதீங்க..இங்க யாருமே பர்பக்ட் கிடையாது.என் தாத்தா கூட எந்த ஒரு கடமையான நோன்பு, கடமையான தொழுகை இத மட்டும்தான் செய்வார். நான் கூட ஒரு தடவ ஏன் தாத்தா ஹல்றத்தா இருந்துகிட்டு என்ன விட கம்மியா இபாதத் செய்யுறீங்கலேன்னு கேட்டேன். அவரு சிரிச்சுகிட்டே என்ன தெரியுமா சொன்னாரு? 
          (இன்ஷா அல்லாஹ் தொடரும்) 

5. இறையச்சத்தை வளர்ப்பது எப்படி?

தொழுகை, நோன்பு சிரமாக தெரிவது இறைவனை பற்றிய அச்சம் குறைந்ததுதான் காரணம் எனவே அதை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொன்னார் ஹல்ரத்.

சுல்தான் பாய் கேட்டார்: "ஓகே ஹல்ரத் எப்படி இந்த இறையச்சத்த வளர்ப்பது? நான் என்ன பண்ணனும்?" 

"தொடர்ந்து 30 நாளும் நோன்பு வை, சரியாபோய்டும்" என்றார் ஹல்ரத். 

உடனே குல்தும் இடைமறித்து, " என்ன தாத்தா சொல்றீங்க? அவரே நோன்பு வைக்க முடியலையே ஏன் அப்படீன்னு கேட்கிறார். நீங்க என்னடான்ன.. திருப்பி நோன்பையே வைக்க சொல்றீங்க.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தாத்தா...." 

ஹல்ரத் தொடர்ந்தார்: "இத நான் சொல்லல.. ஞானம் மிக்க அல்லாஹ்வே சொல்றான். அவன் சொல்றது தப்பாகாது. கொஞ்சம் விளக்கமாக சொல்றேன் கேளு. 
புதுசா நோன்பு வைக்குறவங்களுக்கு கொஞ்சம் ஸ்டார்டிங் ட்ரபிள் இருக்கத்தான் செய்யும்.. 
நம்மால முடியுமா? முடியாதா? பயங்கரமா பசிச்சா என்ன பண்றது? மயக்கம் போட்டு விழுந்துடுவோமோ? தொழுகை வேற பண்ணனுமே, இது மட்டுமா பொய் சொல்லகூடாது, அடதவங்க மேல வரம்பு மீற கூடாது, அவன் அப்படி இப்படி அப்படீன்னு புறம் பேச கூடாது. இப்படி பல கூடாதுகள் .. அதிகமாக இத பத்தி யோசிச்சுகிட்டே இருந்தா நோன்பு கஷ்டமாகத்தான் தெரியும்." 

நீ முதல் முறையா நீச்சல் கத்துக்கும் போதும், சைக்கிள் கத்துக்கும் போதும் கஷ்டமாகதான இருந்துச்சு..படிக்கவும் கஷ்டமாகதானே இருந்துச்சு.. அதுக்காக எதுல எதையாவது செய்யாம இருக்குறோமா? நமக்காக நல்லது நாடி அல்லாஹ் நோன்பை ஒரு பரிசாதந்து இருக்கும் போது நாம அவனுக்காக நம்மள வருத்தி நோன்பு வைக்கும் போது அவன் நம்மள கவனிச்சுகிட்டே இருக்கான் அப்படீங்கற எண்ணம் வந்துகிட்டே இருக்கும்.  
மனசுக்குள்ளயும், உடலுகுள்ளையும் பல போராட்டங்கள் நடக்கும் . பசிக்கும் ஆனா சாப்பிடக் கூடாது, அழகான பொண்ணு எதிருல வரும் ஆனா பாக்க கூடாது, செஞ்ச வேலைல ஏன் பிழை அப்படீன்னு மேனேஜர் கேப்பான் பொய் சொல்ல கூடாது.  ஒரு கோள்மூட்டி பிரச்னை பன்ன வருவான், "ஆனா நாம நான் நோன்பாளி" அப்படீன்னு சொல்லி பொறுமையாக விலகனும்.  மீறி நீங்க தப்பு பண்ணீங்கன்னா ஒங்க நோன்பு ஒடஞ்சிடும்.. அதனாலதான் நபிகளார் சொன்னாரு, "நோன்பு ஒரு கேடயம்". 

அல்லாஹ் பாத்துகிட்டு இருக்கானே நாம செய்யுற தப்புனால நம்ம நோன்பை உடச்சுருவானே அப்படீங்கற நினைப்பு அடிக்கடி வரும், அதனால நாம முடிஞ்சா வரைக்கும் பேணுதலா இருக்க முயற்சி செய்வோம்...இப்படியே நம்ம தினம் தினம் நம்மளையும் அறியாம  செய்யுற சின்ன சின்ன தவறுகளை விழிப்பா இருந்து செய்யாம விட்டு விடுறோம். இப்படிதான் நமக்கு சதா அல்லாஹ் ஞாபகமும், அவனை பற்றிய அச்சமும், அவன் நம்ம கஷ்டத்துக்கு எல்லாம் வீணாக்கிவிடாம அதிகதிகமா நன்மைகளை தருவான் அப்படீங்கற உறுதியான நம்பிக்கையும், அவன் எல்லாத்தையும்  பாத்துப்பான் அப்படீங்கற நம்பிக்கையும் இந்த நோன்புனாலத்தான்  வருது..  

இப்படியே தினம் தினம்ன்னு 30 நாளும் தம் கட்டி இருந்துட்டா" அப்பறம் ரம்ஜானுக்கு அப்பறமும் அப்படியே மெயின்டன் பண்ணிடலாம். சுருக்மாக சொன்னா 30 நாளு நோன்புக்கு அப்புறம்,  நாம ஒரு புது மனுஷன்தான்..  

தப்பு செய்யுற எல்லோரும் ஒரு இந்த வயிதுக்ககாதான் என்னென்னமோ செய்ய வேண்டி இருக்கு அப்படீன்னு சொல்றான்.  அந்த வயித்தையே நாம சொல்ற படி கேட்க வச்சுடுறோம்.. அப்பால நம்ம உடம்பும், மனசும் சொன்ன படி நாம கேட்டுகிட்டு இருந்த நிலைமை மாதிரி, நாம சொல்றபடி அதுக கேக்கும். நாம அல்லாஹ் சொல்றத கேப்போம். அல்லாஹ் நல்லத்தான் சொல்லுவான். 
இப்படி ஒவ்வொருத்தரும் அல்லாஹ் குடுத்த 30 நாள் டிரைனிங்க நல்ல படியா யூஸ் பண்ணா உலகத்துல ஏன் லஞ்சம், லாவண்யம், திருட்டு, பலாத்காரம் எல்லாம் இருக்கபோவுது? இங்கயும் மன நிம்மதியோட சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்,  செத்ததுக்கு அப்பறமும் சந்தோசமான வாழ்க்கை அல்லாஹ் நிச்சயம் தருவான்.  

இப்ப சொல்லு நோன்பு உள்ளச்சத்தை வளர்க்கும்தானே குல்தும்? " என சொல்லி புன்னகைத்தார்.

நீங்க என்ன சொல்றீங்க? ஹல்ரத் சாரி அல்லாஹ் சொன்னது சரிதானே?


4. தொழுகை நோன்பு சுமையாக தெரிவது எதை உணர்த்துகிறது?


"ஏங்க நம்ம மகள் ஆயிஷாவிற்கு உடம்பு சரிஇல்ல உடம்பெல்லாம் கொதிக்குது"
"சரி வண்டி சாவிய எடு, அப்துல் கரீம் டாக்டர் இருப்பாரு பார்த்துட்டு போகலாம்."
.............................................................................................................................
" ஆயிஷாவுக்கு வாயெல்லாம் கசக்குது, உடம்பு தீயா கொதிக்குது டாக்டர்  "
"அப்படியா இந்த தர்மாமீட்டரை பாப்பா வாயில ஒரு நிமிஷம்  வைம்மா." ...
 
"ஹ்ம்ம்..101 டிகிரி காய்ச்சல் இருக்குது,சரி இந்த டேபிலட்ட 3 வேளை சாப்பிடு...இன்ஷா அல்லாஹ் குணமாயிடும்"
"ஜசக்கல்லாஹ் டாக்டர் .." 

பீஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர், வண்டி ஸ்டார்ட் பண்ணுகையில் கணவன் மனைவி உரையாடல் ஆரம்பித்தது.
............................................................................................................................. 
 "ஏங்க வண்டீல பெட்ரோல் இருக்கா? போட்டு கடைசியா போட்டு 10 நாள் இருக்குமே.. 
"கவலை படாதடி.. இங்கபாரு சின்னதா ஒரு முள்ளு சிவப்பு பட்டைக்கு மேல காட்டுது..  இன்னும் 10 மைல் தாண்டி ஒரு பங்கு இருக்கு அங்க போட்டுக்கலாம் அது வரைக்கும் வண்டி இழுக்கும்" 

மேலும் சுல்தான் பாய் தொடர்ந்தார்: "பாத்தியா குல்தும் .. மனுஷன் எவ்வளவு அட்வான்ஸா இருக்கான்.. மனுஷனுக்கோ, மத்ததுக்கோ ஏதாவது பிரச்சனைன்னா  ஏன் பிரச்சனைன்னு கரெக்டா சொல்ல  சின்னதா ஒன்னு தெர்மா மீட்டர்ன்னு சொல்றான், உடம்புல வச்ச உடன 101 டிகிரீன்னு சொல்லுது, சின்னதா ஒரு முள்ளு பெட்ரோல் இருக்கா இல்லையான்னு கரெட்டா சொல்லுதது.. பிரச்சன என்னன்னு சொல்லு, பதில அது சொல்லும்" 
 

"ஏங்க உங்களால தொழ முடியல, நோன்பு வைக்க முடியலன்னு சொன்னிங்களே" அந்த பிரச்சனைக்கு காரணம் என்னன்னு சொல்ல ஏதாவது ஈமான் கீமான் மீட்டர்ன்னு நல்லா இருக்கும்ல..?" விந்தையாக ஒரு கேள்வி வைத்தாள் மனைவி குல்தும்.

"(கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்காத சுல்தான் பாய் கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டார்..) 
"அப்படியே வண்டிய என் தாத்தா பரீத் ஹல்ரத் வீட்டுக்கு விடுங்க, அவருகிட்ட உங்க பிரச்சனைய சொல்லுங்க ஏதாவது தீர்வு கெடைக்குதான்னு பார்ப்போம்."

(சுல்தான் பாய் எதுவும் பேசவில்லை.. வண்டி ஹல்ரத் வீடு நோக்கி செல்கிறது)

"அஸ்ஸலாமு அலைக்கும் தாத்தா.. இவரு நோன்பே வைக்க மட்டேன்குறார் தாத்தா, உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு... ஏன்னு கேட்டா ஆர்வம் இல்லை அப்படீங்குறார், என்ன காரணம் அப்படீன்னு சொல்ல அல்லாஹ் ஏதாவது குடுத்திருந்தா நாம நம்மள சரி படுத்திக்கலாம்மே..." என்று மனதில் உள்ளதெல்லாம் படப்பட வென்று கொட்டினாள் குல்தும்.

பரீத் ஹல்ரத் பேச ஆரம்பித்தார்:
 
"இருக்குது குல்தும் அப்படி ஒரு சாதனம் இருக்குது..."
நீங்க குர்பானி கொடுக்கும் போது கூட அந்த கறியோ, ரத்தமோ அல்லாஹ்வ வந்து அடைவது இல்லை, உங்களோட இறையச்சத்ததான் நான் பார்க்கிறேன்னு அல்லாஹ் சொல்றான். இங்க முக்கியமானது இறையச்சம்தான். நம்ம செயல்ல கூட குறைய இருந்தா கூட அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நம்பிக்கை கொண்ட எல்லோருக்கும் இறையச்சம்தான் முக்கியம். இத நீங்க கண்டுபிடிக்க அல்லாஹ் கொடுத்த சாதனங்கள்தான் தொழுகை, நோன்பு, ஜகாத், குர்பானி எல்லாம்... 

அல்லாஹ் குரான்ல சொல்றான்: 
...பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)
 

ஆக, உங்களுக்கு தொழுகை, நோன்பு எல்லாம் கஷ்டமா தெரியவருதுன்னா..   உள்ளச்சம் கம்மி ஆயிடுச்சு அப்படீங்கறதுதான் அது காட்டுது. ஆக உள்ளச்சத்த வளர்துகுங்க.. இன்ஷா அல்லாஹ் எல்லாம் போக போக சரியாயிடும்.." என்று சொல்லி புன்னகைத்தார்.

(இன்ஷா அல்லாஹ் தொடருவோம்)






3. எனக்கு நோன்பு வைக்க ஆசைதான் ஆனா முடியலையே...

ஏங்க... நாளைக்கு முதல் நோன்பு வைப்பீங்களா? அரிசி உங்களுக்கும் சேர்த்து வைக்கவா? - இது அடுப்பறையில் இருந்து சுல்தான் பாய் மனைவி குல்தும்.

சுல்தான் பாய் பதிலே சொல்லவில்லை.. போன ஜும்மாவில் இமாம் கூறிய குரான் வசனத்தை பற்றிய எதோ நினைவில் மூழ்கிவிட்டார்... வாருங்கள் நாமும் அவரின் நினைவோடு சங்கமிப்போம்...

"ஹ்ம்ம்... எனக்கும்  நோன்பு வைக்க ஆசைதான் ஆனா முடியலையே... இப்படி இருக்கும் எனக்கு எனக்கு சுவனம் கிடைக்குமா கிடைக்காதா ? இத தெரிஞ்சுக்க எதாவது முடிஞ்சா  நல்லா இருக்குமே" ... அட நாமும் சில நேரங்களில் இப்படி சிந்திப்பது உண்டு.  


யார் சுவனவாதி, நரகவாதி என்பதை குர்ஆனில் அல்லாஹ் இப்படி கூறுகிறான் :
# ....எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.
# எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.( 2:81-82)


"ஏங்க நோன்பு வைக்குறீன்கன்னா சொல்லுங்க.. இல்லாட்டி நான் உங்களுக்கு சாதம் வைக்கல..": மறுபடி அவர் மனைவி உள்ளே இருந்து சத்தம் போட்டார்.

நம்ம சுல்தான் பாய் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து கவலையுடன் இருந்தார், தனதுமனைவியிடம் பார்த்து,

"அடியே குல்தும்...  
யாராவது குரான் ஹதீஸ் பற்றி பேச ஆரம்பித்தால் போர் அடிக்குது.... . 
அப்படி அவ்வாறு வலுக்கட்டாயமாக அமர வைத்து பேசினால் அவர்கள் மண்டையை மண்டையை ஆட்டிவிட்டு விட்டால் போதும் என எஸ்கேப் ஆகத்தான் தோணுது .....  
சில நேரங்களில் யாரவது தாடிக்கார பாயை பாத்தா...அய்யோ செத்தோம் என்றோ...."கடி" மனிதர்கள் என்றோ.. வாழ்கையை என்ஜாய் பண்ண தெரியாதவர்கள் என்றோ.. 
நாம என்ஜாய் பண்ணுவதையும் தடுக்க வந்தவர்கள் என்றோ.. இப்படி பலவித எண்ணங்கள் மனசுல ஓடுது .. "
எனக்கும் மனசுல எங்கோ ஒரு மூலையில் நோன்பு வைக்கணும், தொழுவனும், நல்ல முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கு.. இருந்தாலும் செயல் படுத்த முடியலையே... ஏன் ?"

குல்தும் பதில் எதுவும் சொல்லாமல்,  ஒரு சிறிய புன்னகையை பதிலாக போட்டுவிட்டு  இடத்தை காலி செய்துவிட்டார்.. 

உண்மைதான்.. நம்ம சுல்தான் பாய் மாதிரி நம்மில் நிறைய பேர் மனதில் வலியோடு கேள்விகளோடு  இருக்கவே செய்கிறோம்.. யாரவது  அல்லாஹ் ரசூல்  பற்றி பேசினால் ஒரு வைகயான குற்ற உணர்ச்சியில் நெளிந்து கொண்டு இருக்கிறோம் ... சரிவர தொழ முடியவில்லை, நோன்பு பிடிப்பது இல்லை. அப்படி பிடித்தாலும் ஒரு வகையான அமைதி இன்மை இல்லாமால்... அந்த இபாதத்தில் ஈடுபாடு இல்லாமால் ... இதுவே இன்னைக்கு கடைசி நாளைக்கு நோ.. என்று சிலருக்கோ.. ரமலான் ஆரம்பித்த அதே நாளில் ரமலான் நோன்பு முடித்தும் விடுகிறது..


குரான் ஹதீஸ் எல்லாம் சொன்னால்  கேட்க நன்றாகவே இருக்கும், ஆனால் செயல் வகையில் அதை நிலை நாட்டுங்கள் என்றால் முடிவதில்லை. அது ஒரு பெரும் சுமையாகவே தெரியம்... 

இதை நிவர்த்தி செய்வது எவ்வாறு??


(இன்ஷா அல்லாஹ் தொடருவொம் )

2. அது என்ன இறையச்சம் ?

இறையச்சம் பெறுவதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதை முந்தய பதிவில் பார்த்தோம்  அது என்ன இறையச்சம் ?

வாப்பா.... ஒங்கள பாக்க மஜீத்துல இருந்து ஒரு ஜமாத்து  வந்திருக்கு  என்று மகன் ஓடி வந்து  சொல்லும் போது நம்ம சுல்தான் பாய் கொஞ்சம் பதறிதான் போய்விட்டார். 

அவசரமாக தனது மனைவி குல்துமை அழைத்து, "அடியேகுல்தும் .. நான் வெளியே போயிருக்கேன்னு சொல்லுடி என்று படப்படக்க சிக்னல் தருகிறார்." இந்த "இறையச்சத்தை" பற்றியா நாம்  பேசபோகிறோம்.. 

இல்லை இல்லை...   இது வேறுவகையானா அச்சம்.! அல்லாஹ் விரும்பாத ஒன்று!
நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும் எனவே இதை கடமையாக்கினேன் என்றல்லவா அல்லாஹ் கூறுகிறான்.

நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.

யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வே இறையச்சத்தால் ஏற்படுகிறது. இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம்.

ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி விட இது வழி வகுக்கும் எனவே இது அல்லாஹ் நமக்கு தரும் ஒரு மாத டிரைனிங்  அப்ப நீங்க தயாரா?


Reference: 

(நோன்பு என்கிற புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் எடுத்தாளப்பட்டது ஆசிரியர் PJA) 

1. எதற்காக நோன்பு நோற்க வேண்டும்?



இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.  அதை பார்போம்.


# பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.
பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். 
மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே பசியை உணர்வதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

# உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா? 
நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.
சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம்.

எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது. நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.


ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறை அச்சம் உடையோர்  ஆகலாம். (அல்குர்ஆன் : 2:183)

ஹ்ம்ம்.. அது என்ன இறை அச்சம்  ? அதை ஏன் அல்லாஹ் கூற வேண்டும் ?

(தொடரும்)


Reference: 

(நோன்பு என்கிற புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் எடுத்தாளப்பட்டது ஆசிரியர் PJA)