மக்காவில் அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன, ஈமானில் பலஹீனம் இருப்பதாக உணர்ந்தால் வாங்க போகலாம் மக்காவுக்கு! ஒரு ஹஜ், இல்லை உம்ரா செய்வோம், அல்லாஹ் போதுமானவன்!
நமக்கு இலவசமாகவோ ஏதாவது கிடைத்தால் அதன் அருமையை உணர்வதில் சிரமம் இருக்கவே செய்கிறது அல்லது ஏதேனும் ஒரு காரண காரியம் இல்லாமல் வெறுமனே எதாவது ஒன்று கிடைத்தாலும் அதை ஞாபகம் வைப்பதில் நமக்கு சிரமம் இருக்கவே செய்கிறது.
ஆம், அதனால்தானோ என்னவோ மனதை உருக்கும் ஒரு நிகழ்வை அல்லாஹ் அரங்கேற்றி அதன் மூலம் ஜம்-ஜம் கிணறை ஏற்படுத்தி இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன். நாம் ஹஜ் செய்யும் போது அன்னை ஹாஜரா என்ன என்ன செய்தார்களோ அவற்றை எல்லாம் நாமும் திரும்ப செய்து, அன்னை அவர்களின் தியாகதை உணர்வு பூர்வமாக உணர செய்கிறோம், இதன் மூலம் அந்த ஸஃபா-மர்வா மலைகளும், ஜம்-ஜம் ஊற்றும் இன்றும் நமக்கு அத்தாட்சியாக விளங்குகிறது.
அங்கே ஏராளமான அத்தாட்சிகளை வைத்துள்ளேன் என்றல்லவா அல்லாஹ் கூறுகிறான். இதனால்தான் யார் யாரெல்லாம் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு இவற்றைபார்க்கும் போது "ஈமானும்" நன்றாக சார்ஜும் ஆகும். அல்லாஹ்வே குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்:
மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன (அல்குர்ஆன் 3:97)
ஆகவே ஈமானில் பலஹீனம் இருப்பதாக உணர்ந்தால் வாங்க போகலாம் மக்காவுக்கு! ஒரு ஹஜ், இல்லை உம்ரா செய்வோம் இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் போதுமானவன்!
அல்லாஹ் நமக்கு அருள் செய்ய வேண்டி, அன்னை ஹாஜர் அவர்களின் செயல்களை முன் வைத்து, ஜம்-ஜம் கிணறை பரிசளித்தான். நட்ட நடு பாலைவனத்தில் இருந்து வரும் அந்த கிணறு 6000-7000 ஆண்டுகளாக இன்று வரை உலகுக்கு நீர் தந்து கொண்டிருக்கிறது.
இப்ராஹிம்(அலை) அவர்கள் மக்காவில் ஸஃபா-மர்வா மலை பகுதியை அடைந்த போது தனது பிரயாணத்தை நிறுத்தினார். பின்னர் தனது மனைவியிடம் சிறிது உணவையும், நீரையும் கொடுத்து விட்டு பதில் பேசாமல் கிளம்பினார். இப்ராஹிம் (அலை) சொன்னார் என்பதற்காக அன்னை ஹாஜர் பச்சிளம் குழந்தையை எடுத்துக் கொண்டு நட்ட நடு பாலைவனத்திற்கு வந்தார், ஆனால் இப்போது இங்கே தனியாக விட்டுவிட்டு கிளம்புகிறாரே ஆடித்தான் போனார். என்றாலும் இப்ராஹிம்(அலை) எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்குமென அவர் அறிவார்.
"நபியே.. இதுவும் அல்லாஹ்வின் கட்டளையா?"
"ஆம்" என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் இப்ராஹிம்(அலை). ஹாஜர் நாயகி அவர்கள் 'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டனா?” என்று கேட்க, அதற்கு இப்ராஹிம் நபியவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு அன்னை ஹாஜர் அவர்கள் “அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.
ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்று மலைக் குன்றின் அருகே அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி திருப்பி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள். "எங்கள் இறைவா! உன் ஆணைப்படி நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன்.
எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும் இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழஙகுவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள்." (அல்குர்ஆன் 14-37)
அன்னை ஹாஜரும், குழந்தை இஸ்மாயிலும் வந்து இறங்கியுள்ள இந்த இடத்தில் குடிக்கவும், உண்ணவும் எதுவுமே இல்லை. தங்கவும் வசதி வைப்பு இல்லாமல் இருந்தது. நாள் செல்ல செல்ல உணவும் நீரும் தீர்ந்தது, குழந்தை இஸ்மாயிலும் தாகத்தால் அழ ஆரம்பித்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அன்னை அங்கும் இங்கும் ஓடினார், ஏதாவது அருகே நீர் கிடைக்குமா என்று பார்க்க, ஆனால் எதுவுமே இல்லை. குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் செல்லாமல் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு ஸஃபா-மர்வா குன்றுகளுக்கு இடையே இங்கும் அங்கும் ஓடினார்.
ஒருபக்கம் ஸஃபாவைக் மீது ஏறி யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா, ஏதாவது உதவி கிடைக்காதா, தன் பிள்ளையின் தாகம் தீராதா என்று பார்க்கிறார், யாரையும் காணவில்லை, எனவே ஸஃபாவிலிருந்து இறங்கி மர்வா மலை மீது ஏறி இந்த பக்கமாவது யாராவது தென்படுகிறார்களா என பார்க்கிறார், பாவம் இந்த பக்கமும் யாரையும் காணவில்லை.
குழந்தை இஸ்மாயிலின் நிலை தாகத்தால் மிகவும் பரிதாபகரமாக இருந்தது. பசிக் கொடுமையிலும், வெயில் கொடுமையிலும், மகனின் கையறு நிலையை பார்க்க முடியாத தவிப்பு அது, அவர் அல்லாஹ்வை நம்பியே அங்கு தங்குவதற்கு ஒப்புக்கொண்டார், அவருடைய சோதனையையும் சகித்துக் கொண்டார். இப்படி நடையும் ஓட்டமாக என்ன செய்வதென்று அறியாமல் ஏழு முறை ஓடி விட்டார்கள். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியை அவர்கள் காண முடியவில்லை, எனவே குழந்தையை காண வந்தார்கள். அங்கே அல்லாஹ்வின் உதவியை கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். அது என்ன?
அன்னை ஹாஜர் அவர்களுக்கும்,குழந்தை இஸ்மாயில் வர்களுக்கும் உதவிட இஸ்மாயில் அருகே ஒரு ஊற்று பீறிட்டு கிளம்பியது, உடனே அன்னை ஹாஜர் அவர்கள் அதை ஒரு தடாகம் போல் கையால் அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி ஓடிவிடாதே! நில் நில் என்று சைகை செய்து சொன்னார்கள். அதுவே ஸம்ஸம் என்று பெயர் பெற்றது. இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது.
இந்நிலையில் யமன் நாட்டைச் சேர்ந்த ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு அந்த இடத்தை அடைந்த போது, "அட என்ன ஆச்சரியம், நாம் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே" என்று வியப்புடன் பேசிக்கொண்டார்கள். அக்குலத்தார் இஸ்மாயீலின் அன்னை அவர்கள் அத்தண்ணீரின் அருகே இருக்க கண்டு, அவர்கள் முன்னே சென்று “நாங்கள் உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்க, அதற்கு அவர்கள் “ஆம் அனுமதியளிக்கிறேன். ஆனால் அந்த கிணறின் உரிமை எங்களுக்கே" என்றார். அம்மக்களும் சரி என்று சம்மதித்தனர். இப்படியாக அல்லாஹ் அவன் நாடிய படி மக்களையும் சேர்த்து அதை வசிக்கும் இடமாக மாற்றினான். அல்லாஹ் நாடியதை செய்பவனாக இருக்கிறான். இன்னும் அவனுடைய நாட்டம் பல அவ்வூரில் நிறைவேற வேண்டி இருந்தது.
அங்கே குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார்கள். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர்கள் அரபு மொழியை கற்றுக்கொண்டார்கள். அவர்கள் வாலிபரானபோது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார்கள். பருவ வயதை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்த சிறிது காலத்திற்கு பின் இஸ்மாயீலின் தாயார் அன்னை ஹாஜர் இறைவனடி சேர்ந்தார்கள். (அல்லாஹ்விடம் இருந்து வந்தோம், மீண்டும் அவனிடமே செல்பவர்களாக இருக்கிறோம்)
நெடு காலத்திற்கு பிறகு, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னை ஹாஜர் அவர்களையும், மகனையும் பார்க்க நாடி மக்காவுக்கு புறப்பட்டார்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
-----------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு 1: ஜம்-ஜம் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்ட இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் தினமும் சுமார் 30 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 30 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள். மக்காவில் மட்டுமின்றி மதீனாவின் புனிதப்பள்ளியிலும் இலட்சக்கணக்கான மக்களின் குநீராக ஜம்ஜம் நீர் தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக வினியோகம் செய்யப்படுகிறது.
பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு குறைந்த ஆழம் கொண்டதாகும். அருகில் ஏரிகளோ, கண்மாய்களோ, குளம் குட்டைகளோ இல்லாமல் இருந்தும் அந்தக் கிணற்றில் இருந்து தினமும் 30 லட்சம் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வேண்டிய அளவுக்கு வழங்கப்பட்டும் அங்கு நீர் வற்றிப் போகவில்லை என்பது மிகப்பெரிய அற்புதமாகும்.
Reference:
1. http://www.mailofislam.com/nabi_ismail_alaihissalam.html