10. ஈமான் பாட்டரியை சார்ஜு செய்வது எப்படி?

"அம்மா இன்னைக்கு காலையில ஒங்களுக்கு ஏதாவது வேலை இருக்குதா? எங்கயாவது போக வேண்டி இருக்குதா?" பீடிகை போட்டாள் குல்தும்.

"ஒன்னும் இல்ல குல்தும். ஏன் என்ன ஆச்சு?" - இது பரீதா 

"அம்மா.. இங்க பக்கத்து தெருவுல இன்னைக்கு காலையில வாரந்திர பெண்கள் ஹலக்கா இருக்கு. இன்ஷா அல்லாஹ் உங்கள கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்"

"நான் வரல குல்தும். எனக்கு எல்லாம் அது சரிபட்டு வராது"

"ஏம்மா? ரொம்ப நல்ல இருக்கும்மா. மொத்தமா 2 மணி நேரம். முதல் அரைமணி நேரம் குரான் ஓதுவோம், அப்புறம் அதோட தமிழ் மொழியாக்கத்தை படிப்போம். அப்புறம் இன்னொரு அரைமணி நேரம் யாரவதுஒன்னு ரெண்டு பயான், வீடியோ பயான், வினாடி, வினா அப்படி இப்படின்னு பிரயோஜனமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்."

"இல்லம்மா ஒரு மணி உங்கப்பாவுக்கு சுட சுட சாப்பாடு ரெடி பன்னனும், மனுஷன் பசி தாங்க மாட்டார். இல்லாட்டி சத்தம் போடுவார்"

"ஏம்மா அவரு என்ன சின்னபுள்ளய கவனிச்சுகுற மாதிரி இல்ல சொல்றீங்க.. எப்பவாச்சும் ஒருநாள் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டாரா?"

"உனக்கு என்ன சொலிட்டு போயிடுவ, பின்னாடி நான் இல்ல உங்கப்பாகிட்ட பாட்டு வாங்கனும்" 

"நான் அப்பாவ சமாளிச்சுகிறேன். எப்பவாவதுதான் இது மாதிரி சான்ஸ் கிடைக்கும். யூஸ் பன்னிக்க வேண்டாமா?  போர் அடிக்கும்னு நினைக்குறீங்களா? 

அம்மா..இது ரம்ஜான் மாசம், அதனால நீங்க செய்யுற ஒவ்வொரு நன்மைக்கும் அல்லாஹ் 10 மடங்குல இருந்து 700 மடங்கு வரை அதிகப்படுத்திக் கொடுப்பான். நீங்க இதையே அடுத்த மாசம் பன்னுனீங்கன்னா 700 க்கு பதிலா 10, 20 இப்படித்தான் கிடைக்கும். இது ஜாக்பாட் மாசம்மா.. 

வேலை இல்லம்மா ஒரு நிமிஷம் கிடைச்சா கூட அதுல ஒரு சுபஹானல்லாஹ் சொல்லலாம். ஞாபகம் இருந்ததுன்னா வேலை நேரத்தில் கூட சுபஹானல்லாஹ், அல்ஹதுளில்லாஹ், அல்லாஹு அக்பர்ன்னு தஸ்பிஹ் செஞ்சுகிட்டே இருக்கலாம்.. "

"அடியே குல்தும்.. நானெல்லாம் அந்த காலத்துல நபில் தொழ ஆரம்பிச்சேன்னா குறைஞ்சது 2 மணி நேரம் ஆகும். நீ எல்லாம் சின்ன புள்ள இப்ப வந்து எனக்கு அட்வைஸ் பன்னுற"

"அம்மா...    எல்லாம் சரிதான். ஒரு சின்ன அமல் இருந்தாலும் தொடர்ந்து செய்யுற அமல்தான் அல்லாஹ்வுக்கு ரொம்ப பிடிக்கும் அப்படீன்னு ரசுல்லாஹ்(ஸல்) அவங்க சொல்லலி இருக்காங்க.."

"என்னடி நீ தொழுகற, நோன்பு வைக்குற அப்படீன்னு அலட்டிக்குற. நான் 10 வயசுலேயே 30 நோன்பு வச்சுருக்கேன் தெரியுமா? ஒரு வாரத்துல ஒரு குரானை ஓதிடுவேன் தெரியுமா? "ஹ்க்கும். நான் கேட்காதா பயானா நீ கேட்டுட போற? எங்கப்பாவே ஒரு ஹஜரத்தாக்கும்."" 

"யம்மா.. நீங்க உங்களளோட பழைய கதைய சொல்றது நிறுத்துங்கம்மா.. அப்படீன்னா இப்ப ஏன்மா நோன்பு வைக்கல? ஒரு வேலை கூட தொழுகறது இல்லை? உங்களுக்கு பிடிக்கலன்னா சாக்கு போக்கு ஆயிரம் சொல்ல முடியும். உங்களுக்கு வர இஷ்டம் இல்லைன்னு நினைக்குறேன்."

"சாக்கு போக்கு எல்லாம் இல்ல குல்தும். உன்கிட்ட சொல்றதுக்கு என்ன எனக்கு கஷ்டம்?  என்னமோ தெரியல குல்தும் இப்பலாம் முன்ன மாதிரி என்னால இருக்க முடியல..எதையும் செய்ய ஆர்வம் வர மாட்டேங்குது, தொழுவனும், இப்பாதத் செய்யனும்னா மனசுல ஒரு ஈடுபாடு வரமாட்டேங்குது, சில பல நேரத்துல சரி தொழலாம், குரான் ஓதலாம்ன்னு நினைச்சாகூட மறுகனமே அப்பறம் பாக்கலாம்னு நினைப்பு வருது, ஒருமாதிரி வெறுமைதான் இருக்கு குல்தும். ஆமா.. என்னோட இறையச்சம், பாட்டரி குறைஞ்சுதான் போயிடுச்சு போல.."

"அதனால்தான்மா சொல்றேன்..  இந்த மாதிரி இடத்துக்கு அடிக்கடி போனா ரெண்டோறு பயான் கேப்போம்..நம்மள சார்ஜ் பண்ணது போல இருக்கும். அதுக்கப்புறம் இன்னும் அதிகம் அதிகம் அமல்கள் செய்ய ஆர்வம் பிறக்கும். நல்லா கேட்டுக்குங்க நம்ம சார்ஜு எப்பவுமே ஹய்யா இருக்காது, நபிகள்(ஸல்) அவர்களே சொல்லி இருக்கார் மனுஷனோட ஈமான் எப்பவுமே ஒரு மாதிரி இருக்காது அல்லாஹ் ரசூல் பத்தி கேட்கும் போது கூடும், நடுவுல கேப்பு விட்டோமுன்னா ஈமான் குறையும். இது எல்லாருக்கும் இருக்குற நார்மலான ஒன்னுதான், அதனால அலட்டிக்க தேவை இல்லை..நாமலாவே  சில நல்ல விஷயங்களை தேடி கேட்டு, படித்து மறுபடி சார்ஜு பண்ணிக்க வேண்டியதுதான். 

நாமளாகவே நம்மள சார்ஜு பன்னிக்க முடியாத பட்சத்துல வெளியில நடக்குற இந்தமாதிரி வாரந்திர பெண்கள் ஹல்கா, ஜும்மா பயான் எல்லாம் நமக்கு கிடைச்ச சான்ஸ். விடக் கூடாது.. ஆம்பளைங்க வெளியில போறாங்க நாலு பெற சந்திக்கறாங்க, நாலு நல்ல விஷயத்தை கேக்குறாங்க.. நம்மளுக்கு நாமலே எதாவது செய்யாட்டி நம்ம ஈமான் சைஸு கட்டெரும்பாதான் போகும்... வாங்கம்மா யாரும் யாருக்கும் பயான் பன்னுறது இல்ல.. நமக்கு தெரிஞ்ச விஷயத்தை மீண்டும் மீண்டும் படிகறதுனால, கேக்குறதுனால, மறுபடி ரெப்ரெஷ் பன்னதுமாறி இருக்கும். ஒருத்தர ஒருத்தர் ஞாபக படுத்திகிறது நல்லது.. அப்பதான் ஒருத்தர் சறுக்கினா இன்னொருத்தர் ஞாபகப்படுத்த முடியும்."

"ஹ்ம்ம்.. நீ சரியாதான் சொல்லுற குல்தும் .. நான் தனியாவே எத்தன வருஷதுக்குதான் நோன்பு வைக்க முடியும்? தோழா முடியும்? ஒரு சப்போர்ட்டும் இல்ல. அப்புறம் என்னோட எல்லா அமலும் குறைஞ்சு போயிடுச்சு.. அப்புறம் நீங்க எல்லாம் பிறந்தீங்க.. வீட்டு வேலை சரியா இருந்துகிட்டே  இருக்கு. ரொம்பதான் மாறிடுச்சு குல்தும்...

"ஏய்.. நீயே குல்தும்  உங்கப்பாகிட்டாயே கேளு. அவரு விட்டா  நான் வரேன்"

(அல்ஹம்துலில்லாஹ் என்று மனதுக்குள் எண்ணியவாறு தனது அப்பாவை நோக்கி சென்றாள் குல்தும்)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

=======================================================================

Reference:
-------------
"(ரமளானில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மையும் அது போன்ற 10 மடங்கு முதல் 700 மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும்" என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1945)