11. பொறுமைக்கு ஒரு அழகிய முன் மாதிரி


ஞானம் மிக்க அல்லாஹ் நேரடியாகவே சுவனத்தை மட்டும் படைத்தது எல்லா மனிதர்களையும் அங்கே போட்டிருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. "சும்மா கிடைக்காது சுவர்க்கம், சம்பாதித்து வாருங்கள், பெற்றுக் கொள்ளுங்கள்  என்று அல்லாஹ் கூறுகிறான் என்பதை முன்பு பார்த்தோம்.

நீங்கள் கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அதில் கடைசி கேள்விக்குதான் கோடி ரூபாய் பரிசு, ஆகவே எனக்கு கடைசி கேள்வி மட்டும் கேளுங்கள் என்று கேட்டு பரிசை நோகாமல் வென்று விட முடியுமா என்றால் இல்லை என்று எல்லருமே சொல்வர், ஆகவே ஒவ்வொரு கஷ்டமான கேள்வியை தாண்டிதான் கடைசி கேள்விக்கு "கோடி ரூபாய்" பரிசு இருக்கிறது. உலகத்திலேயே இப்படிதான் என்னும் போது நிரந்தர சுவனத்தை நாம் பெற்றுக் கொள்ள அல்லாஹ் அல்-குர்ஆனில் நம்மிடம் கூறுகிறான் தெரியுமா?

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? (2:214)

பிரச்சனை என்னவென்றால் நம்மில் சிலருக்கு, சோதனை என்ற வார்த்தையை கேட்டவுடன் முகம் சுருங்கி விடுகிறது. மாறி மாறிஅவை நம்மை தாக்கும் போது என்னுடைய வாழ்வு இப்படி ஆகிவிட்டதே.. என நம்மில் சிலர் தினமும் அழுது கூட புலம்புகிறார்கள்.  இங்கே சில விஷயங்களை புரிந்து கொள்வது நலமாக இருக்கும்.

பிறந்தது முதல் இப்போது வரை எனக்குஎதுவுமே கிடைக்கவில்லை, நான் வாழ்கையில் மகிழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று சொல்ல முடியுமா? என்று கேட்டால் இல்லவே இல்லை என அடித்து சொல் முடியும். பல நேரங்களில் சந்தோஷமாக இருந்து இருக்கிறோம், விளையாடி இருக்கிறோம், நிம்மதியில் திளைத்திருகிறோம், நிறைய விஷயங்கள் நாம் நினத்தபடியும் நடந்தே இருக்கிறது, கல்வியை பெற்று இருக்கிறோம், பிள்ளைகளை பெற்று இருக்கிறோம், வீடுகளை கட்டியிருக்கிறோம் இன்னும் இது போல ஏராளம், இதை மறுக்கவே முடியாது. இனியும் எதிர்காலத்தில் எதுவுமே இல்லை, கிடைக்காது என்றெல்லாம் சொல்லவே முடியாது. அப்படியென்றால் என்ன அர்த்தம்?



நமக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்திருகிறது. இன்பமும் எப்போதும் நிலையானது அல்லது துன்பமும் எப்போதுமே நிலையானது அல்ல என்பதுதான் அர்த்தம். உண்மையில் சொல்லப் போனால் இன்பத்தில் திளைத்திருந்த நாம், கஷ்டம் வரும் போது "மட்டும்" இடிந்து போய் விடுகிறோம். அதுதான் யதார்த்தமான உண்மை. அல்லாஹ் நம்மை சோதிக்கும் போது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவனே சொல்லிக் காட்டுகிறான்: 

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)


ஆகவே, பொறுமையாக அல்லாஹ்வின் சோதனையை, விதியை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தால்நமக்கு பாதி மனப்  பாரம் காலி. எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கிருபை செய்யவே சோதிக்கிறேன் என்கிறான், இதன் மூலம் சுவனத்தில் உயர் பதவிகளையும், இன்பத்தையும் அளித்திட நாடுகிறான். எனவே நாம் புலம்புதலை விட்டு விட்டு பொறுமையை மேற் கொள்ள முயலலாமே?

அல்லாஹ் கூறுகிறான்: இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (2:157)

எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டோம் என்றும்  அல்லாஹ் கூறுகிறான். ஆனால் நாமாக வலிய எதையாவது ஏடா கூடமாக செய்து அதனால் அவன் கோபத்திற்கு ஆளாகி இந்த உலகிலேயே தண்டனையை வாங்கி கட்டிக் கொண்டால் அது அவன் பொறுப்பாக மாட்டான்.
அதுதவிர அல்லாஹ்வின் சோதனைகள் நிச்சயமாக ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வரவே செய்யும், அதை நமது பிரார்த்தனை மூலம் போக்க முயலுவோம், ஒரு வேளை அதற்கான தீர்வை அல்லாஹ் தாமத்திது தரும் போது அல்லது வேறொரு காரணத்திற்காக தீர்வை வழங்காத போது "பொறுமையாக இருக்க வேண்டும்" என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

எப்படி பொறுமையாக கொள்வது என்று யோசிக்கும் போது மனது கொஞ்சம் தடுமாற செய்கிறது, கவலைகள் சில வேளைகளில் நம்மை பதற செய்கின்றன, இதை எப்படி சரி கட்டுவது? என்ற கேள்வி சிலருக்கு எழலாம், ஏனெனில்  நாமாகவே எதையாவது புதிதாக செய்யும் போது கொஞ்சம் சிரமமாக இருக்கும், அதே வேளையில் யாராவது செய்வதை பார்த்தல் இன்னும் கொஞ்சம் நமக்கு தெளிவு கிடைக்கும்.

ஞானம் மிக்க அல்லாஹ்  திருமறையில் ஏராளமான நிகழ்சிகளை சொல்லிக் காட்டுகிறான். அதில் நமக்கு ஏராளமான முன் மாதிரிகளும், படிப்பினைகள் இருக்கவே செய்கிறது. சாமணியர்களாகிய நமக்கு சுவனத்தை வழங்க அல்லாஹ் இவ்வளவு தூரம் சோதிக்கத்தான் வேண்டுமா என்று யாரும் எண்ணாதிருக்க வேண்டியோ என்னவோ, சுவர்க்கம் வாக்களிக்கப்பட்ட நபிமார்களுக்கே கடும் சோதனைகள் இருக்கவே செய்தது, அவ்வகையான சோதனைகள் வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா என்று யோசித்தாலே நெஞ்சம் திகிலடைகிறது.

இன்னும் சற்று நாளில் தியாக திருநாள் பக்ரீத் கொண்டாட போகும் நமக்கு, அதை கொண்டாட காரணமாக இருந்த இப்ராஹிமுக்கு அல்லாஹ் சோதனைகள் வழங்கியதையும், அதில் அவர் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்தல்... இப்ராஹிமை அல்லாஹ் தோழனாக எடுத்துக் கொள்ள சரியான நபர்தான் என இன்ஷா அல்லாஹ் உங்கள் உள்ளமே உரக்க சொல்லும்.

அல்லாஹ் இப்ராஹிமை வெறுமனே தோழனாக ஆக்கிக் கொண்டால் அதை கேட்பவர் யாரும் இலர், எனினும் அந்த பதவியை இப்ராஹீம் அடைந்து இருக்கிறார் என்றால் ஏதோ ஒன்று அவரிடம் இருக்கிறது, நிச்சயம் அது நமக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத்தான் இருக்கும். அது என்ன?

(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)