அந்தியூர், ஆம்பூர், இரும்பூர், ஈசலூர், உறையூர் என மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு எதாவது ஒரு ".. ஊர்" என்று பெயரிட்டுக் கொள்கின்றனர். அது என்ன "ஊர்"? இடத்தை குறிக்க வேறு வார்த்தை இல்லையா? எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதில் பிற மொழி சொற்கள் இருக்கத்தான் செய்யும். மொழியியல் ஆய்வாளர்கள் சொற்களின் மூலம் எது என்று ஆராய்வர். தமிழுக்கு பிந்தைய மொழியான கன்னட மொழியிலும் பெங்களூர், மைசூர் என "ஊர்" உள்ளது. இந்தியாவை தாண்டி சிங்கப்பூர், கோலாலம்பூர் என்கிற ஊர்கள் பெயர்கள் மலாய் மொழியில் இருப்பதையும் கவனித்தால்...
"ஊர்" என்பது தமிழ் மொழி சொல்தான் என்று குறுகிய வட்டத்துக்குள் நாம் பார்க்க முடியாது, ஏனெனில் தமிழுக்கு அந்நிய மொழியான சமஸ்கிரதம் கூட இடத்தை குறிக்க அல்லது "பூமி" என்பதை குறிக்க "ஊரு" என்று சொல்லுகிறது. "ஊர் என்பது தமிழ் வார்த்தையா? சமஸ்கிருத வார்த்தையா?" என்பது எல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் இவை இரண்டும் இல்லாத வேறு மொழி வார்த்தையாக இருக்கலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.
சமஸ்கிரதம் ஆரியர்களின் வேத மொழி. ஆரியர்கள் என்பவர்கள் யார்? "ஊரு" எந்த மொழி சொல்லாக இருந்தால் நமக்கென்ன? அதை பற்றி நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? அதற்க்கு முன்பு இன்னொரு உதாரணத்தையும் பார்த்துவிடுவோம்.
"அம்மா" என்ற தமிழ் சொல்லுக்கு அரபியில் "உம்மா" என்றும் "அப்பா" என்கிற தமிழ் சொல்லுக்கு "பா(BA)" என்று அரபியில் உள்ளது. நாம் வேண்டுமானால் நீ அரபி, நான் தமிழ், நீ ஹீப்ரு என்று பிரிந்து பிரிந்து சென்றாலும் நம்முடைய ஆதி மூதாதைகள் ஏதாவது ஒரு மூல மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும். எனவேதான் குறுகிய கண்ணோட்டத்தை விட்டு விட்டு சில ஆயிரக்கணக்கானவருஷத்திற்கு பின்னே செல்வோம்..
சமஸ்கிருதம் போற்றும் ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதற்கு பல வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றில் பிரபலமானது ஈரானில் இருந்து வந்தவர்கள் என்பது ஆகும். ஆரியன்-ஈரான் பெயர் ஒற்றுமையும் ஒரு காரணம். இப்போது நாம் ஏன் ஈரானுக்கு போகிறோம்? அதற்கும் இந்த "ஊர்" என்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்க கூடும்?