எதற்காக பிறப்பு?



உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67:2)

உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள்பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும் (3:186). 


பாவமின்றி மனிதன் வாழ்வது சாத்தியமா?

அடிப்படையான ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வானவர்கள் இல்லை. பாவமே செய்யாத படைப்பாக அவர்கள்தான் படைக்கப்பட்டு உள்ளார்கள். பாவமின்றி மனிதன் என்றால் வானவர்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். பெரிய மாகானாக இருந்தாலும் கூட அவரும் எதாவது ஒரு நேரத்தில் சிறு பாவமாவது செய்து இருப்பார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமுடைய மக்கள் பாவம் செய்பவர்கள்தான். நீங்கள் ஒரு பாவத்தையும் செய்யாவிட்டால் அல்லாஹ் வேறு ஒருகூட்டத்தை படைப்பான். அவர்கள் பாவம் செய்து விட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பார்கள்"


17. பாட்டன் சொத்து பேரனுக்கே!!


எங்கோ இருந்த இப்ராஹிம் (அலை) அவர்களை மக்காவை  நோக்கி அல்லாஹ் அனுப்பினான், இப்ராஹிம்(அலை) சந்ததியையும் குடியமர்த்தினான். ஏன்? அல்லாஹ் எதை செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். மக்கா நகரங்களின் தாய் என்று சிறப்பித்து கூறப்படுகிறது. பிற மதத்தவர்கள் உலகத்தில் உள்ள எந்த பள்ளிவாசலுக்கும் செல்லலாம், ஆனால் மக்காவை தவிர! அல்லாஹ்ஒரு விஷயத்தில் இவ்வளவு முக்கியத்துவம் காட்டுகிறான் என்றால் அதில் ஏதோ உள்ளது? அது என்ன?



மனித இனம் இங்கே உருவானது, அங்கே ஆபிரிக்காவில் உருவானது என்று ஒவ்வொருவரும் ஒரு வாதத்தை முன் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ் முதல் மனிதனை பூமியில் வசிக்க செய்த போது அவர்கள் இறைவனை வணங்கி இருப்பார்களா இல்லையா? ஆம் கண்டிப்பாக வணங்கி இருப்பார்கள். அப்படி என்றால் அவர்கள் வசித்த இடத்திற்கு அருகே அவர்களுக்கே என வழிபாட்டு தலம் அவசியம்தானே?

குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (3:96)

இப்ராஹிம்(அலை) அவர்கள் காலத்திலேயே சிலை வணக்கமும், அதற்கென்று இடமும் இருந்ததை வரலாறுகளில் அறிகிறோம். எனவே இது முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை குறிப்பிடுவதாகவே படுகிறது. (குறிப்பு 1)

இஸ்மாயில்(அலை) அவர்களை மக்காவில் குடியமர்த்திவிட்டு செல்லும்போது இப்ராகிம்(அலை) அவர்கள், "“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்..."  (14:37) என்று  கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.

இஸ்மாயில் (அலை) வளர்ந்த பின்னேதான் இருவரும் சேர்ந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப காபாவை உயர்த்திக் கட்டினார்கள். ஆனால் இங்கே 14:37 வசனத்தில் இப்ராஹிம்(அலை) குழந்தை இஸ்மாயிலை விட்டுவிட்டு செல்லும் போதே "சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே.." என்று கூறுவதை கவனித்தால் முன்பே அங்கே அல்லாஹ்வின் வீடு இருந்திருக்க வேண்டும் என்றே படுகிறது. எனவேதான் அரபு மொழிக்கும், மக்காவிற்கும் சம்பந்தம் இல்லாத இப்ராஹிம்(அலை) அவர்களை முதல் வீடான மக்காவை நோக்கி இறைவன் அனுப்பி இருக்கிறான் என்றே படுகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே இனமாக இருந்தனர், காலபோக்கில் குலமாகவும், கோத்திரமாகவும் அமைத்தோம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக என்கிறான் அல்லாஹ். இன்றும் பிரிந்து கிடக்கும் நம்மை ஹஜ் பயணம் மூலம் மக்கா ஒன்று சேர்க்கிறது. ஆரம்பத்திலும் பிரிந்து போகும் சமுதாயத்தவர்கள் ஒன்றிணைய மக்கா ஒரு தாயாக விளங்குகிறது. அன்றும் பிரிந்து போகும் மக்களை ஆண்டுக்கு ஒரு  முறையோ ஆயுளுக்கு ஒரு முறையோ சேர்க்க மக்கா ஒரு இணைப்பு புள்ளியாக விளங்கி இருக்க கூடும்.

இப்ராஹிம்(அலை) அவர்கள் இஸ்மாயில்(அலை) அவர்களுடன் சேர்ந்து அழித்து போன "முதல் வீடை" மீண்டும் உயர்த்தி கட்டினார் என்றே படுகிறது. அவர் மூலம் ஹஜ் மீண்டும் ஆரம்பித்தது. ஆகவே ஆரம்ப மனித இனத்தை போலவே அதில் இருந்து விலகி சென்றவர்களும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப கைலாச மலை, காசி, ஜெருசேலம் என்று வருடத்திற்கு ஒரு முறை யாத்திரை செல்லும் பழக்கத்தை கொண்டு வந்திருக்கலாம்.  இறைவனை மக்கேஸ்வர் என்கிறது ஆரியம். மக்கேஸ்வர் என்றால் மக்காவின் கடவுள் என்று சர் முனீர் வில்லியம்ஸ் என்பவர் தனது சம்ஸ்கிருத அகராதியில் கூறுகிறார். ரிக் வேதம் 3-29-4, "இறைவனின் வீடு பூமியின் நட்ட நடுவே இருக்கிறது" என்கிறது. (குறிப்பு 2) மக்கா பூமியின் மையம் என்பது நாம் முன்பே அறிந்ததே!!

சரி நாம் இப்போது கதைக்கு வருவோம். அரும்பாடு பட்டு கட்டிய வீட்டின் நிலை சில ஆயிரம் வருடத்திற்கு பின்பு என்ன ஆனது தெரியுமா? கொஞ்சம் கொஞ்சமாக அல்லாஹ்வின் வீடு ஆக்கிரமிக்கப்பட்டு சிலைகள் புகுந்தன. சிலைகளை ஒழிக்க வந்த இப்ராஹிம்(அலை) அவர்கள் மறு சீரமைத்த அல்லாஹ்வின் வீட்டில் இப்போது 360க்கும் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டது. அதில் இப்ராஹிமுக்கும் கூட சிலை வைக்கப்பட்டதுதான் உச்சகட்ட வேதனையான விஷயம். மக்கள் நிர்வானமாக காபாவை வளம் வந்தனர், நேர்ச்சை என்கிற பெயரில் மனகேடானவற்றை அரங்கேற்றினர். மூட நம்பிக்கை பரவி ஓங்கியது, ஆக அல்லாஹ்வின் வீடு அல்லாஹ்வுக்கு இல்லாமல் போனதுதான் மிச்சம். ஒரு இறைவனை மட்டும் வழிபட வேண்டும் என்கிற நபிகள்(ஸல்) கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் ஊரை விட்டே விரட்டப்பட்டார். 

அல்-குர்ஆனில் அல்லாஹ், "காபிர்களை கொல்லுங்கள்" என்று வெறுமனே சொல்லவில்லை. மக்கா மறுபடி வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டி, "காபிர்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறி 4 மாதம் அவகாசமும் தந்தான், அது ஒருவகையான எச்சரிக்கை!! நம்முடைய அரசும் நாம் சில குறிப்பிட்ட தவறுகளை செய்தால் "கொன்று விடுவதாக" (அதான் பாஸ்.. மரண தண்டனை) எச்சரிக்கிறது. அதற்காக கொலைவெறி பிடித்த அரசு என்றா கூறுவோம்?

 எச்சரிக்கைக்கு பிறகும் வீம்புக்கு இருபவர்களை, "கண்டவுடன் வெட்டுங்கள்" என்கிறான். சட்டங்களை கடுமையாக இருக்க சொல்வதன் நோக்கம், "வெறுப்பை பரப்புவது இல்லை". "மீண்டும் மக்கள் தவறு செய்யாமல் இருக்க அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு வழிதான் அது. 


ஆனால் இதை புரிந்து கொள்ளும் மன நிலையில் எல்லாம்  இஸ்லாத்தின் எதிரிகள் இல்லை. குரானை களங்கப்படுத்த என்னென்ன செய்ய முடியுமோ, எவ்வளவு திரித்து கூற முடியுமோ அவ்வளவு செய்கின்றனர். நம்மவர்களும் அந்த மாய வலையில் விழுந்து விடுகின்றனர். தூய இஸ்லாம் என்றால் என்ன என்பதை அறிந்து இருந்தால் அவன் தீவிரவாதியாகவும் ஆக மாட்டான், இஸ்லாத்தில் இருந்து சாமானியனாக விலகியும் நிற்கமாட்டான். 

எங்கேயும் சரி கடுமையான ரூல்ஸ் இல்லாவிட்டால் அங்கே ஒழுங்கு இருக்காது. இப்ராஹிம்(அலை) பிறகு மக்காவை நிர்வகிப்பதில் கடுமை காட்டாததால் மக்கா வீழ்ந்தது, ஆகவே மீண்டும் நபிகள்(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் மீட்டெடுத்தான். எல்லா சிலைகளும் நபிகள்(ஸல்) அவர்களால் உடைக்கப்பட்டன, மீண்டும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே என்றாகியது வரலாறு. மக்கா நம்முடையது, அது ஒரு சிவன் கோவில், அதில் சிவன் சிலைகள் வைக்கபட்டு இருந்தன என்று சிலர் கூறி வருகின்றனர். நபிகள்(ஸல்) அவர்கள் அவர்களிடம் இருந்து மக்காவை பறித்துக் கொண்டதாக புலம்பவும் செய்கின்றனர். 

அதனால்தான் சொல்கிறோம் பாட்டன் சொத்து பேரனுக்கே!! உலகில் இறைவனை வழிபட நமது பாட்டன் காலத்தில் மக்காவில் கட்டப்பட்ட முதல் வீடு, பேரன்களுகாகிய முஸ்லிம்களுக்கே சொந்தம். நமது பாட்டனார் இப்ராஹிம்(அலை) அவர்களும் இஸ்மாயில்(அலை) அவர்களும் சேர்ந்து மறு சீரமைத்த காபா பேரன்களாகிய முஸ்லிம்களுக்கே சொந்தம். இடையில் வந்து சிலைகளை வைத்து ஆகிரமித்தவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவேதான் மீண்டும் புதிய புதிய குழப்பம் வந்துவிடக் கூடாது என அல்லாஹ் "கடுமையான வார்த்தைகளால்" எச்சரிக்கிறான். எனவே நம்முடையஉள்ளத்தை தீனுல் இஸ்லாத்தை நோக்கி விசாலமாக அல்லாஹ் ஆக்குவதற்கு அவனிடம் பிரார்த்திப்போம். அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்! அவனுக்கே எல்லா புகழும்.!! 


ஈத் முபாரக்!!!


(அல்லாஹ் போதுமானவன். முற்றும்.)


Reference: 
1. அல்-குரான்
2. நூல்:மறுப்பக்கம், ஆசிரியர்: சபியா நூர். குயின் பப்ளிகஷனஸ்  

குறிப்பு 1: பக்கம் 168-170
குறிப்பு 2: பக்கம் 170-171



















16. முஸ்லிமின், "இஸ்லாமோ-போபியா"

நாம் மஹரிப் தொழுவதற்கு  பள்ளிவாசல் போகா விட்டாலும் நமக்கு முன்பே நின்று கொண்டு, "பாய்,   என்னோட குழைந்த நாடு ராத்திரி அடிக்கடி பயத்துல அழுவுது கொஞ்சம் ஓதி விடுங்க பாய் என்று உரிமையோடு தேடி வருபவர் பலர். அவர்களுக்கு என்று ஏகப்பட்ட தெய்வங்கள் இருகின்றனவே.. இருந்தும் அல்லாஹ்வின் தயவு தனக்கும் வேண்டும் என்கிற நினைப்பு இவர்களுக்கும் இருப்பது ஏன்?

நீங்கள் என்றாவது பக்கத்தில் காசிக்கு செல்ல விரும்பியது உண்டா? கிறிஸ்தவர்களின் புனித நகரமான வாட்டிகன் சிட்டிக்குள் நுழைய ஆர்வம் காட்டியதுண்டா? அவர்களே விரும்பி கூப்பிட்டாலும், அது அவர்களுடைய வழிபாட்டு இடம்,  நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று இருப்போம். இப்ராஹிம்(அலை) வரலாறும், நமது நபிகள் நாயகம் உபதேசங்களும் நம்மை அவ்வாறு உருவாக்கி இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் நம்முடைய ஆலயத்தை பற்றி இப்படியா நினைகிறார்கள்?

இல்லவே இல்லை. பாய், நாங்க உங்க பள்ளி வாசலுக்குள் வரலாமா? வந்தா ஒன்னும் சொல்ல மாட்டீங்களே? என்று யாரவது கேட்பதை நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு என்று தெருவுக்கு தெரு சிறு கோவில்களும், பிரபலமான பெரிய கோவில்களும் உண்டு. என்றாலும் ஏன் நம் பள்ளிவாசல் மீது இவ்வளவு ஆர்வம்? நாம் அவர்களை அவ்வபோது அன்புடன் வர அனுமதிக்கவே செய்கிறோம். இருந்தாலும் சிலரது விருப்பம் இன்னும் பெரிதாக உள்ளது. பாய் மக்காவுக்கு வரனுமுன்னு ஆசையாக  இருக்கு, ஆனா உங்க ஆளுங்க விட மாட்டேன் என்கிறார்களே ஏன்? என்று வருத்தம் கலந்த தோணியில் கேட்பதை பார்க்கிறோம்.

ஆம், உண்மைதான் மக்காவுக்கு மட்டும் நாம் யாரையும் அனுமதிப்பது இல்லை. ஏன் இப்படிசெய்கிறீர்கள்? விரும்பி கேட்கும் எங்களை மத நல்லிணக்கத்தை கருதி விடலாமே? மறுப்பது ஏனோ? என்று கேக்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் யார் எடுத்த முடிவு இது? என்று குரானை தேடி  சூரா தவ்பாவில் "மக்கா நகரம் முஸ்லிம்களுக்கே" என்று அழுத்தமாக அல்லாஹ் கூறுவதை பார்க்கலாம்.

அட என்ன இது மற்ற இடங்களுக்கு இல்லாத முக்கியத்துவம் மக்காவுக்கு மட்டும் ஏனோ என்று சிலருக்கு புருவம் உயரலாம். தொடர்ந்து சூரா தவ்பாவை படித்தால், "அவர்கள் மக்காவுக்குள் இருக்க 4 மாதம் அனுமதியுங்கள், அதற்கு பின்னரும் அவர்கள் வெளியேறாவிட்டால் காபிர்களை பார்க்கும் இடத்திலேயே வெட்டுங்கள்" என்ற வசனத்தை பார்க்கும் போது இஸ்லாம் அறியாத முஸ்லிமுக்கும், சராசரி முஸ்லிமுக்கும் இருதய துடிப்பு கொஞ்சம் அதிகமாகலாம்.



"அட இஸ்லாம் வன்முறை மார்க்கம் அப்படீன்னு பத்திரிகையில எழுதுறது எல்லாம் சரியாதான் இருக்குதோ? குரான் முஸ்லிம் அல்லாதவர்களை கொன்றுவிட சொல்கிறது என்று தொலைகாட்சி விவாதத்தில் சொன்ன போது நான் நம்பவில்லை, ஆனா இப்போ அப்படிதானே இருக்கு?

நம்ம ஆளுங்கதானே எங்க பாத்தாலும்  குண்டு வைக்குறாங்க, எங்க பாத்தாலும் தாலிபான், இந்தியன் முஜாஹிதின், ஐ எஸ் ஐ எஸ் அப்படீன்னு ஏகப்பட்டது வேற இருக்கு, பாலஸ்தீனதுல சின்ன குழந்தை முஸ்லீமாக இருந்தால் அதுக்கும் அடிதான்.. அதுக்குதான் நாம் எப்பவும் போல தள்ளி நின்னுக்க வேண்டியதுதான் என்று நமது மனம் நமக்கு இலவச அட்வைஸ் வேறு செய்கிறது. எங்கே பார்த்தாலும் ஒரு இறுக்கமான நிலையில் முஸ்லிம்கள் தள்ளப்பட்டு இருப்பதை மறுக்க முடியாது.

இது எல்லாம் மேற்கத்திய உலகின் சூழ்ச்சி, மீடியா உருவாக்கும் இஸ்லாமோ-போபியா என்று சொல்வதையெல்லாம் நம்மவர்களில் சிலரே காது குடுத்து கேட்க கூட  தயாரக  இல்லை. முஸ்லிம்கள் செய்வது எல்லாம் இஸ்லாமாகிவிடாது.

இஸ்லாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லாரும் சமம், எல்லா இனமும் சமம், எல்லா மொழியும் சமம், நன்மைக்கு நன்மை,  தீமைக்கு தண்டனை" என்பன போன்ற கொள்கைகளை சொல்லும் போது  பல கடவுள் கொள்கையை நேசிபவர்களும், உயர்வு தாழ்வு கற்பிப்பவர்களும், பொருள் சுரண்டல் செய்பவர்களும், மானக்கேடான விபச்சாரத்தை வெளிப்படையாக செய்பவர்களும், தனது மொழியை மட்டும் நேசிபவர்களும், தனது இனமே உயர்ந்தது என்கிற சித்தாந்தத்தில் இருப்பவர்களும் பாதிப்பு அடைவதாகவே உணர்வர், எனவே இஸ்லாத்தை வளர விடாமல் தடுக்க முயல்வர், முடிந்த அளவுக்கு வசதி வாய்ப்புகள் மூலம் இஸ்லாமோ-போபியாவை பரப்புவர், ஆகவே நம் 10 வயது மகன் ஒரு கடிகாரம் செய்தாலும் அது வெடிகுண்டாக இருக்குமோ என்றுதான் நினைப்பர்.

இது எல்லாம் காலத்தின் கட்டயமா என்றால் இல்லை, எப்போதுமே இப்படிதான். இப்ராஹிம் நபி உண்மையை சொன்னதற்காக ஊரை விட்டு வெளியேற வேண்டியதாக போனது, நபிகள் நாயகம் உயிரை காப்பாற்ற மக்காவை விட்டு தப்பி ஓடினார், ஜீசஸ்(அலை) அவர்களை சிலுவையில் அறைய முயன்றனர். இப்படி ஏனென்னவோ நடந்து இருக்கின்றன.. ஆம் அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள், அவை எல்லாம் வரலாறில் இருந்து மறைக்கப்படும், அது பயங்கர வாதமே அல்ல என்பர்.

இப்படிபட்ட சூழ்சிகளில் நம்மவர்களில் சிலர் பயந்து போய்தான் உள்ளனர். ஏற்கனவே பெயர பாத்து வேலை தர யாரும் யோசிக்கறாங்க.. இந்த லட்சணத்துல தீவிரமா அல்லாஹ்-ரசூல்- தொழுகை-தாடி அப்படீன்னு இருந்தா நம்ம எதிர்காலம் கெட்டு போய்விடும், வழியல யாரையாவது பாத்தா சலாம் சொல்வோம், பண்டிகைக்கு பார்த்தா "ஈத் முபாரக்" என்பதோடு நிறுத்திக்க வேண்டியதுதான் என்று சிலர் இருகின்றனர்.  "பயந்தவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது பழமொழி. எனவே இவர்களை இப்படியே விட்டுவிடுவோம். தூய இஸ்லாமை இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைகாவது ஒரு நாள் இன்ஷா அல்லாஹ் புரிந்து கொள்வார்கள்.

சரி நாம் குரான் விஷயத்திற்கு வருவோம். இஸ்லாம் என்றாலே "அமைதி" என்று சொல்லிவிட்டு,  காபிர்கள் மக்காவுக்குள் நுழைந்தால் பார்த்த இடத்திலேயே  வெட்டுங்கள் குத்துங்கள்" என்பது சரியா? என்று உங்களில் சிலருக்கு கேள்வி எழலாம். அதற்கான விடையை அறிய நாம் கொஞ்சம் பின்னோக்கி போவோம்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

15. அது என்ன தியாக திருநாள்?

தொழுகை, நோன்பு, ஜகாத் என்று எதாவது ஒரு இறை கட்டளையை நிறைவேற்ற மனம் நாடினால், மறுகனம் நமக்கு நம்முடைய வேலை பாதிக்கப்படுமே, உடல் பலஹீனமாகிவிடுமே, கைகாசு செலவாகிறதே என்று நினைப்பு வந்து தடுத்துவிடுகிறது. நீயே விரும்பவில்லை என்றால் சாக்கு போக்குகள் ஆயிரம் இருக்கின்றன என உருது கவிதை சொல்வது எத்தனை அழகாக இங்கே பொருந்தி போகிறது. இது போன்று ஹலால், ஹாராம், சுன்னத்து, நபில் என்று எது இருந்தாலும், அதை செய்ய முடியாது என்பதற்கு நம்மிடம் ஒவ்வொரு முறையும் புதிய காரணம் இருக்கவே செய்கிறது.

உண்மையை சொல்லப் போனால் அழிந்துவிடும் இந்த உலகத்துக்காக, உலக விஷயங்களுக்காக எண்ணற்ற தியாகத்திற்கு நாம் ரெடியாக உள்ளோம். ஒருவனுக்கு வேலை கிடைக்கிறது என்றால், பொருள் சம்பாதிக்கவோ, துனையை அடைய வேண்டும் என்றால் உலகத்தின் எந்த மூலைக்கும் செல்லவும், ஓவர் டைம் பார்க்கவும், தழைகீழாக நிற்கவும் நம்மால் முடிகிறது. களைத்துப் போகும் அளவுக்கு உடல் உழைப்பையும், சாப்பிடக் கூட இயலாமலும், சில நேரங்களில் பொருளையும் தியாகம் செய்து விடுகிறோம்.  எதோ ஒன்றை அடைய, இல்லை யாரையாவது திருப்தி படுத்த எந்த தியாகத்தையும் செய்கிறோம். ஆனால்  இறைவன் பற்றிய விஷயத்தில் உள்ள அலட்சியத்தால் அநேக செயல்களில்  மனம் இறங்கி செய்யமுடியாமல் தவிக்கிறோம்.

ஆனால் ஒருவன் நிரந்தர நன்மை பயக்கும் இறைவனின் திருப்தியை பெற ஒருவர் விழைந்துவிட்டால்,  அவருக்கு இறைவனை திருப்தி படுத்த வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்குமே தவிர அதனால் ஏற்பட போகும் இழப்புகளை பற்றி கவலை படுவதாக இல்லை. நம்முடை இப்ராஹிம் (அலை) அவர்களும் அவர் மகன் இஸ்மாயிலும் அப்படிதான் இருந்தார்கள். தங்கள் இன்னுயிரையும் அல்லாஹ்வுக்கு காணிக்கை ஆக்க தயாராக இருந்தார்கள். ஆகவே அல்லாஹ்வும் இப்ராஹிமையும் அவர் மகன் இஸ்மாயிலையும் அல்லாஹ் இன்னொரு சோதனைக்கு உட்படுத்தினான், அதன் மூலம் ஒரு மகத்தானகட்டளையை உலகுக்கு அறிவித்து கொடுத்திருக்கிறான்.


சிலர் இறைவனை திருப்தி படுத்த வேண்டும் என்கிற ஆசையிலோ அல்லது நினைத்தது நிறைவேற வேண்டும் என்கிற நோக்கத்திலோ என்னென்னவோ நேர்ச்சை செய்து கொள்கின்றனர், நெருப்பில் நடப்பது, வாயில் அழகு குத்திக் கொள்வது, சிலுவையில் அறைந்து கொள்வது, உடலை கத்தியால் கிழித்துக் கொள்வது என ஏகப்பட்ட விரைட்டிகள் உள்ளன என்றாலும் அதில் உள்ள எல்லாவற்றிலும் இதயத்தை உறைய செய்வது நர பலி ஆகும்.  இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. அல்லாஹ் இதை இப்ராஹிம் (அலை) மூலம் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருகிறான்.



இப்ராஹிம் (அலை) தன்னுடைய மகனை அறுத்து பலியிடுவதாக கனவு காண்கிறார். நபிமார்களுக்கு ஏற்படும் கனவும் ஒரு வகையான வஹி ஆகும், எனவே அவர் தள்ளாத வயதில் பெற்ற ஒரே மகனையும் பலி கொடுக்க கனவில் வருகிறது.

இன்றும் நடக்கும் அனேக நர பலிகளில் யாரும் பலி கொடுக்கபடுபவரை நிர்பந்தமாகதான் அறுக்கிறார்கள், ஆனால் கனவை கண்ட இப்ராஹிம்(அலை) தனது மகனிடம் கனவை குறித்து உன்னுடைய அபிபிராயம் என்ன என்று ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால் மகனோ தந்தையின் தியாகத்தோடு போட்டி போடும் அளவுக்கு இருக்கிறார்.

"'என்னருமைத் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், சகித்துக் கொள்ப(வர்களுள் ஒரு)வனாக என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார். 
அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (தம் மகனாகிய) இவரை முகம் குப்புற நிலத்தில் கிடத்தியபோது, "யா இப்ராஹீம்! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்'' என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். 
இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.  அல்லாஹ் ஒரு காரண காரியத்துடன் தடுத்து நிறுத்திய இந்த செயல் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான ஒன்றாகும்.

"இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்)அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமேயாகும்..." (அல்குர்ஆன் 006:137).

இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. அல்லாஹ் இதை இப்ராஹிம் (அலை) மூலம் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இந்த பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தான். மதுரையில் கிரானைட் பள்ளத்தாக்கில் நர பலி கொடுக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் சகாயம் ஆய்வு செய்து கொண்டிருகிறார் என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே!

ஒற்றைக்கு ஒற்றையான இஸ்மாயீல் என்ற அந்த ஒரு மகனைத் தம் கையாலேயே அறுக்க தந்தை ஆயத்தமாகிறார். அருமை மகனை இழக்க நேரிடுமே என்கிற தயக்கம் ஏதுமின்றி இறைக்கட்டளையே முக்கியம் எனச் செயல்பட முன்வந்த ஒரு தந்தையின் இந்தத் தியாகத்துக்கு ஈடாக எந்தச் செயலையும் குறிப்பிட்டுச் சொல்லிட இயலாது. இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு இன்னொரு மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களை இன்னொரு மகனாக பரிசளித்தான்.

இது ஒருபுறமிருக்க, ''இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று தந்தையிடம் மகன் கூறி, 'இறைக் கட்டளைக்கு மிஞ்சியது எதுவுமில்லை' என உயிர் துறக்க முன்வரும் மகனார் இஸ்மாயீலின் உயிர்த்தியாகமோ ஈடு இணையற்றது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த தியாகமல்லவோ!

இம்மாபெரும் சம்பவத்தின் தியாக வரலாறு மறுமை நாள்வரை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என இந்த தினத்தை இஸ்லாமிய மரபாக ஆக்கினான் இறைவன்.  நாமும் பக்ரீத்தை "தியாக திருநாள்" என்று கொண்டாடுகிறோம்.

படைத்தவனுக்கு அவனின் படைப்புகள் எப்படி கட்டுப்பட வேண்டுமென்பதை நினைவுறுத்தும் விதமாக செயற்கரிய மகத்தான தியாகத்தைச் செய்த இரு நல்லடியார்களின் தியாகங்கள் பிராணிகளின் பலியின் மூலம் எடுத்து சொல்லப்படுகிறது!


(இன்ஷா அல்லாஹ் நாளை முடியும்)


Reference:
1. அல்குர்ஆன் 037:102-110
2. http://www.satyamargam.com/islam/others/2241-2241.html 

14. ஈமான் பில்டப் ஆக ஜஸ்ட் ஒரு ஹஜ்-உம்ரா!

மக்காவில் அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன, ஈமானில் பலஹீனம் இருப்பதாக உணர்ந்தால் வாங்க போகலாம் மக்காவுக்கு! ஒரு ஹஜ், இல்லை உம்ரா செய்வோம், அல்லாஹ் போதுமானவன்!

நமக்கு இலவசமாகவோ  ஏதாவது கிடைத்தால் அதன் அருமையை உணர்வதில் சிரமம் இருக்கவே செய்கிறது அல்லது ஏதேனும் ஒரு காரண காரியம் இல்லாமல் வெறுமனே எதாவது ஒன்று கிடைத்தாலும் அதை ஞாபகம் வைப்பதில் நமக்கு சிரமம் இருக்கவே செய்கிறது.  

ஆம், அதனால்தானோ என்னவோ மனதை உருக்கும் ஒரு நிகழ்வை அல்லாஹ் அரங்கேற்றி அதன் மூலம் ஜம்-ஜம் கிணறை ஏற்படுத்தி இருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.  நாம் ஹஜ் செய்யும் போது அன்னை ஹாஜரா என்ன என்ன செய்தார்களோ அவற்றை எல்லாம் நாமும் திரும்ப செய்து,  அன்னை அவர்களின் தியாகதை உணர்வு பூர்வமாக உணர செய்கிறோம், இதன் மூலம் அந்த ஸஃபா-மர்வா மலைகளும், ஜம்-ஜம் ஊற்றும் இன்றும் நமக்கு அத்தாட்சியாக விளங்குகிறது. 

அங்கே ஏராளமான அத்தாட்சிகளை வைத்துள்ளேன் என்றல்லவா அல்லாஹ் கூறுகிறான். இதனால்தான் யார் யாரெல்லாம் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு இவற்றைபார்க்கும் போது "ஈமானும்"   நன்றாக சார்ஜும் ஆகும். அல்லாஹ்வே குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்:
மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன  (அல்குர்ஆன் 3:97) 
ஆகவே ஈமானில் பலஹீனம் இருப்பதாக உணர்ந்தால் வாங்க போகலாம் மக்காவுக்கு! ஒரு ஹஜ், இல்லை உம்ரா செய்வோம் இன்ஷா அல்லாஹ்!  அல்லாஹ் போதுமானவன்!


அல்லாஹ் நமக்கு அருள் செய்ய வேண்டி, அன்னை ஹாஜர் அவர்களின் செயல்களை முன் வைத்து,  ஜம்-ஜம் கிணறை பரிசளித்தான். நட்ட நடு பாலைவனத்தில் இருந்து வரும் அந்த கிணறு 6000-7000 ஆண்டுகளாக இன்று வரை உலகுக்கு நீர் தந்து கொண்டிருக்கிறது. 

இப்ராஹிம்(அலை) அவர்கள் மக்காவில் ஸஃபா-மர்வா மலை பகுதியை அடைந்த போது தனது பிரயாணத்தை நிறுத்தினார். பின்னர் தனது மனைவியிடம் சிறிது உணவையும், நீரையும் கொடுத்து விட்டு பதில் பேசாமல் கிளம்பினார்.  இப்ராஹிம் (அலை) சொன்னார் என்பதற்காக அன்னை ஹாஜர் பச்சிளம் குழந்தையை எடுத்துக் கொண்டு நட்ட நடு பாலைவனத்திற்கு  வந்தார், ஆனால் இப்போது இங்கே தனியாக விட்டுவிட்டு கிளம்புகிறாரே ஆடித்தான் போனார். என்றாலும் இப்ராஹிம்(அலை) எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்குமென அவர் அறிவார்.

"நபியே.. இதுவும் அல்லாஹ்வின் கட்டளையா?" 

"ஆம்" என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் இப்ராஹிம்(அலை). ஹாஜர் நாயகி அவர்கள் 'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படி கட்டளையிட்டனா?” என்று கேட்க, அதற்கு இப்ராஹிம் நபியவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அதற்கு அன்னை ஹாஜர் அவர்கள் “அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். 

ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்று மலைக் குன்றின் அருகே அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி திருப்பி, பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி இந்த சொற்களால் பிரார்த்தித்தார்கள்.   "எங்கள் இறைவா! உன் ஆணைப்படி நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். 

எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்) எனவே இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும் இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழஙகுவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள் என்று இறைஞ்சினார்கள்." (அல்குர்ஆன் 14-37) 

அன்னை ஹாஜரும், குழந்தை இஸ்மாயிலும் வந்து இறங்கியுள்ள இந்த இடத்தில் குடிக்கவும், உண்ணவும் எதுவுமே இல்லை. தங்கவும் வசதி வைப்பு இல்லாமல் இருந்தது. நாள் செல்ல செல்ல உணவும் நீரும் தீர்ந்தது, குழந்தை இஸ்மாயிலும் தாகத்தால் அழ ஆரம்பித்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அன்னை அங்கும் இங்கும் ஓடினார், ஏதாவது அருகே நீர் கிடைக்குமா என்று பார்க்க, ஆனால் எதுவுமே இல்லை. குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் செல்லாமல் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டு ஸஃபா-மர்வா குன்றுகளுக்கு இடையே இங்கும் அங்கும் ஓடினார். 


ஒருபக்கம் ஸஃபாவைக் மீது ஏறி யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா, ஏதாவது உதவி கிடைக்காதா, தன் பிள்ளையின் தாகம் தீராதா என்று பார்க்கிறார், யாரையும் காணவில்லை, எனவே ஸஃபாவிலிருந்து இறங்கி மர்வா மலை மீது ஏறி இந்த பக்கமாவது யாராவது தென்படுகிறார்களா என பார்க்கிறார், பாவம் இந்த பக்கமும் யாரையும் காணவில்லை. 

குழந்தை இஸ்மாயிலின் நிலை தாகத்தால் மிகவும் பரிதாபகரமாக இருந்தது. பசிக் கொடுமையிலும், வெயில் கொடுமையிலும், மகனின் கையறு நிலையை பார்க்க முடியாத தவிப்பு அது, அவர் அல்லாஹ்வை நம்பியே அங்கு தங்குவதற்கு ஒப்புக்கொண்டார், அவருடைய சோதனையையும் சகித்துக் கொண்டார். இப்படி நடையும் ஓட்டமாக என்ன செய்வதென்று அறியாமல் ஏழு முறை ஓடி விட்டார்கள். ஆனாலும் அல்லாஹ்வின் உதவியை அவர்கள் காண முடியவில்லை, எனவே குழந்தையை காண வந்தார்கள். அங்கே அல்லாஹ்வின் உதவியை கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். அது என்ன? 


அன்னை ஹாஜர் அவர்களுக்கும்,குழந்தை இஸ்மாயில் வர்களுக்கும் உதவிட இஸ்மாயில் அருகே ஒரு ஊற்று பீறிட்டு கிளம்பியது,  உடனே அன்னை ஹாஜர் அவர்கள் அதை ஒரு தடாகம் போல் கையால் அமைக்கலானார்கள். அதை தம் கையால் இப்படி ஓடிவிடாதே! நில் நில் என்று சைகை செய்து சொன்னார்கள். அதுவே ஸம்ஸம் என்று பெயர் பெற்றது. இந்த தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது. 

இந்நிலையில் யமன் நாட்டைச் சேர்ந்த ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒருவகைப் பறவையைக் கண்டு அந்த இடத்தை அடைந்த போது, "அட என்ன ஆச்சரியம்,  நாம் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே" என்று வியப்புடன் பேசிக்கொண்டார்கள். அக்குலத்தார் இஸ்மாயீலின் அன்னை அவர்கள் அத்தண்ணீரின் அருகே இருக்க கண்டு, அவர்கள் முன்னே சென்று “நாங்கள் உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்க, அதற்கு அவர்கள் “ஆம் அனுமதியளிக்கிறேன். ஆனால் அந்த கிணறின் உரிமை எங்களுக்கே" என்றார். அம்மக்களும் சரி என்று சம்மதித்தனர். இப்படியாக அல்லாஹ் அவன் நாடிய படி மக்களையும் சேர்த்து அதை வசிக்கும் இடமாக மாற்றினான். அல்லாஹ் நாடியதை செய்பவனாக இருக்கிறான். இன்னும் அவனுடைய நாட்டம் பல அவ்வூரில் நிறைவேற வேண்டி இருந்தது. 

அங்கே குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார்கள். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர்கள் அரபு மொழியை கற்றுக்கொண்டார்கள்.  அவர்கள் வாலிபரானபோது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார்கள். பருவ வயதை அவர்கள் அடைந்தபோது அவர்களுக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்த சிறிது காலத்திற்கு பின் இஸ்மாயீலின் தாயார் அன்னை ஹாஜர் இறைவனடி சேர்ந்தார்கள். (அல்லாஹ்விடம் இருந்து வந்தோம், மீண்டும் அவனிடமே செல்பவர்களாக இருக்கிறோம்)

நெடு காலத்திற்கு பிறகு, ஹஸ்ரத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னை ஹாஜர் அவர்களையும், மகனையும்  பார்க்க நாடி மக்காவுக்கு புறப்பட்டார்கள். 

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

-----------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு 1: ஜம்-ஜம்  கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்ட இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.

இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் தினமும் சுமார் 30 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 30 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள். மக்காவில் மட்டுமின்றி மதீனாவின் புனிதப்பள்ளியிலும் இலட்சக்கணக்கான மக்களின் குநீராக ஜம்ஜம் நீர் தட்டுப்பாடு இல்லாமல் தாராளமாக வினியோகம் செய்யப்படுகிறது.

பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு குறைந்த ஆழம் கொண்டதாகும். அருகில் ஏரிகளோ, கண்மாய்களோ, குளம் குட்டைகளோ இல்லாமல் இருந்தும் அந்தக் கிணற்றில் இருந்து தினமும் 30 லட்சம் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வேண்டிய அளவுக்கு வழங்கப்பட்டும் அங்கு நீர் வற்றிப் போகவில்லை என்பது மிகப்பெரிய அற்புதமாகும்.

Reference:

1. http://www.mailofislam.com/nabi_ismail_alaihissalam.html 

13. புரியாவிட்டாலும் குரானை பின்பற்ற வேண்டுமா?

நாம் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதை பற்றி முழுமையாக விசாரித்து , அது நமக்கு ஒத்துவருமா என்று ஆராய்ந்த  பின்னே முடிவு எடுக்கிறோம்.

நமது அரசாங்கம் ஏதாவது ஒரு ஆணை பிறப்பித்தால் உடனே நாம் ஏற்றுக் கொள்வது இல்லை. அதில் நமக்கு தெளிவு இல்லாவிட்டாலோ, அல்லது அதில் நமக்கு ஏதேனும் பாதகம் இருப்பதாக தெரிந்தால் நீதி மன்றத்தில் "ஸ்டே" வாங்குகிறோம், போராட்டம், ஊர்வலம் என்று நமது எதிர்ப்பை காட்டுகிறோம்.  இது சரியான அணுகுமுறைதான் என்றாலும் இதை எல்லா இடங்களிலும் நாம் சாத்தியப் படுத்த முடியுமா? என்றால் முடியாது என்றே அடித்து சொல்லலாம். ஏன் முடியாது என்று உங்களில் சிலர் ஆச்சிரியப் படலாம். ஏனென்றால் நாமே இதை பல நேரங்களில் நம்மிடம் இப்படி நடந்து கொள்வதை விரும்புவது இல்லை என்பதுதான் நிஜம்.

உதாரணத்துக்கு உங்கள் குழந்தைக்கு உணவில் பாகற்காயை சேர்த்து கொடுக்கிறீர்கள். யாருக்குதான் அந்த பாகற்காய் பிடிக்கும்? கண்டிப்பாக சாப்பிட மாட்டேன் என்பார்கள், வலுகட்டாயமாக சாப்பிடத்தான் வேண்டும் என்று நிர்பந்தித்தால், நாம் அவர்களுக்கு ஏதோ துன்பத்தை, பாதிப்பை ஏற்படுத்தியது போல அழுவார்கள்.

கொஞ்சம் பெரியவன் என்றால் அவனுக்கு அதன் நன்மைகளை எடுத்து சொல்வோம், ஆனால் அவர்கள் சாப்பிடுவார்கள் என்று கிராயாண்டி இல்லை.. சிறிய பையனாக இருந்தால், அவனிடம் "பேச்சுவார்த்தை" நடத்துவது பிரயோஜனம் இல்லாதது, வலுகட்டாயமாக அவனுக்கு ஊட்டுவோம்.

நான் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொண்ட பின் தான் செய்வேன், என்னுடைய அறிவுக்கு ஏற்புடையதாக இருந்தால்தான் செய்வேன், எனக்கு அதில் பாதிப்பு இல்லாமல் இருந்தால்தான் செய்வேன் என்று நம் பிள்ளைகள் சொன்னால் அதை நாம் ஏற்ப்பது இல்லை.

மாறாக நம்முடைய ஒவ்வொரு கருத்துக்களையும் இது போல அலசி, செய்யலாமா வேண்டாமா? இது எனக்கு பிடித்திருக்கிறதா? பாதிக்கிறதா? என்று ஆராய்ந்து கொண்டிருந்தால் நமது BP கொஞ்சம் எகிறி போய்விடுகிறது.
நான் சொல்வதை நீ செய், கேள்வி கேட்காதே! உனக்கு தெரியாதது எனக்கு தெரியும் என்றுதான் சொல்வோம் இல்லையா? எனவேதான் எல்லாவற்றிற்கும் நாம் அறிவியல் விளக்கமும், நன்மை-தீமை ஆராய்ச்சி எல்லாம் செய்து கொண்டிருக்க முடியாது.

எப்படி நம் பிள்ளைகள் அறிவிற்கு எட்டாதது என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளதோ அது போன்று நம் அறிவிற்கு எட்டாதது என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அரசாங்கமும், சட்டங்களும் மனிதர்களால் அவர்களின் அறிவுகேற்ப உருவாகின்றவை, மனிதனுடைய அறிவு வளர வளர பழைய சட்டங்களின் மீது விமர்சனங்கள் எழுந்து புதிய சட்டங்கள் தேவை படுகின்றன. இதே அணுகு முறையை நாம் அல்லாஹ்வின் மீது காட்டலாமா? என்றால் கூடவே கூடாது என்பதே பதில். ஏன்?

நாம் நம்முடைய குறைந்த அறிவு கொண்டு அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை அலசி ஆராய்வதால் அதில் நமக்கு சில சமயம் குறைகள் இருப்பது போலவும், பாதகம் இருப்பது போலவும், காலத்திற்கு ஒவ்வாதது போலவும் தெரிகிறது. ஆனால் உலகனைத்தையும் படைத்தது வளர்த்து, பக்குவப் படுத்தும் நாயனாகிய இறைவன் பூரண ஞானம் மிக்கவன், அவனுடைய அறிவில் குறை இருப்பது சாத்தியமே இல்லை. அதற்காக அறிவியலை நாம் புறகணிக்க சொல்கிறோம் என்பது இதன் அர்த்தம் இல்லை, அல்லாஹ் படைத்ததில் எவ்வாறு புரிந்து கொண்டானோ அதுவே அறிவியல் ஆகும். ஆகவே எல்லாவற்றையும்படைத்து அதைபுரிந்து கொள்ள ஆற்றல் கொடுத்த அல்லாஹ்வை ஏற்று எக்கலாத்துக்கும் அவனுடய சட்டங்களுக்கும், வழி காட்டுதல்களும், சரியானதாகவும், மனித குலத்திற்கு நன்மை அளிக்க கூடியதாகவும் இருக்கும் என்பதை விளங்கிவிட்டால் போதும்,  நம்முடைய மனம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணியும்.

எனவேதான் நாம் தினமும் "நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக, (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல." என்று தொழுகையில் பிராத்தனை செய்கிறோம். இதன் மூலம் நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படக் கூடியவர்களாக ஆகக் கூடும். நமக்கும், முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் முன் மாதிரியான இப்ராஹிம் நபி இதை நன்றாக விளங்கி இருந்ததனால்தான் அல்லாஹ்விடம் எந்த நிலையிலும் குறுக்கு கேள்வியும், வாக்குவாதமும் செய்ய வில்லை.  எத்தகைய அழகிய முன்மாதிரி இது. அல்ஹம்துலில்லாஹ்!



உங்கள் குழந்தையை முதல் நாள் பள்ளியில் விட்டுவிட்டு வந்த போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது? நம்மை காணாது அவன் அழுவானா? அழுதால் எப்படி சமாளிப்பார்கள்? என்றெல்லாம் மனதுக்குள் எவ்வளவு யோசித்திருப்போம்.

ஒவ்வொருமுறையும் தொட்டில் கட்டும் போது அது ஸ்டிராங்காக இருக்கிறதா இல்லையா என்பதை எத்தனை முறை சரி பார்த்து இருப்பீர்கள்? உணவு போஷாக்காக இருக்கிறதா என்று எத்தனை ஆராய்ந்து இருப்பீர்கள்? இப்படி குழந்தையின் மீதுள்ள பாசத்தினால் அக்கறை காட்டுகிறோம்.

ஆனால் இப்ராஹிம் நபிக்கு "மக்காவுக்கு" கிளம்பு என்று அல்லாஹ்வின் கட்டளை  வந்தாகிவிட்டது. கிளம்பிவிட்டார். நட்ட நடு பாலைவனத்திற்கு சிறு கைக்குழந்தையோடு சென்று என்ன செய்ய போகிறேன்? அவனுக்கு கஷ்டமாக இருக்குமே, அவர் குழந்தை மேல் அக்கறை காட்டவில்லையா? இது எப்படி சாத்தியம் என்று யாரும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ் எதை சொன்னாலும் அது சரியாகவே இருக்கும், அது என்னுடைய மகன் இஸ்மாயிலுக்கும் சரியானதாகவே இருக்கும் என்று கட்டுப்பட்டார். ஆம்,கட்டுப்படுதலைதான்(submission)  இஸ்லாம் என்கிறோம், கட்டுப்படுபவரைதான் முஸ்லிம் என்கிறோம். நாம் எந்த அளவு இஸ்லாத்தில் இருக்கிறோம் என்பற்கான அளவுகோல் என்னவென்றால், "நாம் எந்த அளவுக்கு அவனுக்கு கட்டுப்படுகிறோம்" என்பதே!

இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம், அதே வேளையில் பூமியில் யாரேனும் குழப்பம் செய்தால், அவர்கள் அதை விட்டு நீங்கும் வரை போர் செய்ய அறிவுறுத்துகிறது. ஒரு கட்டத்தில் அல்லாஹ் குர்ஆனில் ஏன் போர் செய்யப்படவேண்டும் என்று குறித்து இறக்கிய வசனம் எல்லா இடங்களுக்கும் பொருந்தும். இங்கே பலருடைய எண்ண ஓட்டம் எல்லாம் எப்படி 1400 வருடங்களுக்கு முந்தயஅல்லாஹ்வின் வேதம் எல்லா காலத்துக்கும் சரியாக இருக்கும் என்று இருந்தால் கீழே உள்ள வசனம்தான் அதற்கான பதில்.

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)

அல்லாஹ் ஒன்றை செய்யுமாறு கட்டளை இட்டுவிட்டால், does it  make any sense!(அது சரியாக இருக்குமா? இருக்காதா?) எப்படி சாத்தியப்படும்? என்று எதிர் கேள்வி கேட்பதும், வாதிடுவதும் ஷைத்தானின் குணம்.அவன் அவ்வாறு செய்ததனால்தான் அவனை அல்லாஹ் வெளியேற்றினான். இப்ராஹிம் நபி கட்டுப்பட்டார், அல்லாஹ் அவருக்கு "இறைவனின் தோழன்" என்னும் உயர் பதவியை அளித்தான்!

இப்ராஹிம் நபி அவர்கள் மேலே நம்மை போல யோசிக்க ஆரம்பித்து இருந்தால், ஷைத்தான் இடையில் புகுந்து குழப்பி இருப்பான், ஆனால் கேள்வி கேட்காது கட்டுப்படக் கூடிய இப்ராஹிம் அவர்கள் எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று அன்னை ஹாஜர் அவர்களையும், குழந்தை இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு மக்காவுக்கு கிளம்பி விட்டார்கள். வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம்..


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)




12. தண்ணியில்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஓகேவா?


மனிதனுக்கு இந்த உலகில் இறைவன் அளிக்கும் செல்வங்களில் சிறந்த செல்வம் "மக்கட் செல்வம்". ஆம், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பிள்ளை பாக்கியம் இல்லாவிட்டால் மனிதன் எதையோ இழந்தவன் போலாகிறான்.

இப்ராஹிம் நபி - அன்னை சாரா தம்மதிக்கு குழந்தை இல்லை. இருவரும் இறைவனிடம் தங்களுக்காக ஒரு பிள்ளையை எதிர்பார்த்து இருந்தனர். காலம் செல்ல செல்ல அவர்களுக்கு மிகவும் வயதாகியும் விட்டது, எனினும் குழந்தை இல்லை, ஆனாலும் அல்லாஹ்வுடைய விதி இது என்று பொறுமையாக இருந்தனர்.

நபி இப்ராஹிம் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்விடம்  பிரத்தனை செய்தார்கள் அல்லாஹ் எனக்கு வாரிசுகளை கொடுப்பாயாக என்று மனம் வருந்தி துஆ செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது சாரா அம்மையார் அவர்களை கண்டு மனம் வருந்தி அவர்களின் அடிமை பெண்ணானா அன்னை ஹாஜரா அம்மையாரை அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார்கள்.

சமுதாயத்தில் சிலர் சில நேரம் ""மலடி", "மலடன்" என்று அருவெருக்கத்தக்க பெயர்களை சொல்லி ஏளனம் செய்வதும், வசைபாடுவதும் இல்லாமல் இல்லை. ஒருவன் பிள்ளை பெறுகிறான் என்றால், அதற்கான ஏற்பாடை அல்லாஹ் கொடுத்ததனால் பெறுகிறான், இதில் அவனுக்குஎந்த சிறப்பும் இல்லை.

ஒருவனுக்கு அல்லாஹ் குழந்தை வழங்க வில்லை என்றால், அதற்கு அந்த மனிதன் என்ன செய்ய முடியும்? அல்லாஹ் நாடாததற்கு, அல்லது அல்லாஹ் ஏற்படுத்திய இந்த சோதனைக்கு அவர்களை ஓரம் கட்டுவது எங்கனம் முறையாகும்?


அவர் இப்ராஹிம் நபியை அழைத்து, "நபியே என்னை அல்லாஹ் மலடாக்கிவிட்டான் என்பதுபோல் தெரிகிறது ஆதலால் இந்த பெண்ணின் மூலம் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று தனது பணிப் பெண்ணான அன்னை ஹாஜிராவை இப்ராஹிம் நபிக்கு மணம் செய்து கொடுத்துவிட்டார்கள். இப்ராஹிமுக்கு இறைவன் "இஸ்மாயில்" என்னும் மகனை அன்னை ஹாஜர் மூலம் அருளினான். பொறுமைக்கு அல்லாஹ் அழகிய ஒரு கூலியை தந்தான். அவர் மூலம் வந்தவர்தான் நமது இறுதி இறைதூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள். மிக்க மகிழ்வுற்று இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக  இப்ராஹிம் அவர்கள் குழந்தை இஸ்மாயிலுடன் வசித்து வந்தார். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது.

சொல்படி கேட்காத அரசு அதிகாரிகளை, "உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர் செய்துவிடுவேன்" என்று உயர் அதிகாரிகள் மிரட்டுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். போய் தான் ஆக வேண்டும் என்றால் அங்கே தங்குவதற்கான ஏற்பாடை அறிந்துவிட்டுத்தான் செல்வோம், குறைந்த பட்சம் தங்குவதற்கு ஒரு லட்ஜாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம்தானே? இல்லாவிட்டால் எதிர்த்து சண்டை போட்டுவிடுவோமா? இல்லையா?

                                                 (Image courtesy: www.themuslimtimes.org)


இங்கே அல்லாஹ்வின் தூதர் இப்ராஹிமுக்கு மக்கா என்னும் இடத்திற்கு போக வேண்டி அல்லாஹ்வின் கட்டளை வந்து இருந்தது. அது அப்பொழுது தண்ணீருக்கும் வழி இல்லாத பொட்டல் காடாக, பாலைவனமாக இருந்தது.

நட்ட நடு பாலைவனத்திற்கு சிறு கைக்குழந்தையோடு சென்று என்ன செய்ய போகிறேன்? என்ற எண்ண ஓட்டங்கள் எல்லாம் இப்ராஹிம் மனதில் ஓடி இருந்திருக்குமா இல்லையா?

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


Reference:

http://www.qsiakp.com/2014/06/blog-post_2151.html


11. பொறுமைக்கு ஒரு அழகிய முன் மாதிரி


ஞானம் மிக்க அல்லாஹ் நேரடியாகவே சுவனத்தை மட்டும் படைத்தது எல்லா மனிதர்களையும் அங்கே போட்டிருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. "சும்மா கிடைக்காது சுவர்க்கம், சம்பாதித்து வாருங்கள், பெற்றுக் கொள்ளுங்கள்  என்று அல்லாஹ் கூறுகிறான் என்பதை முன்பு பார்த்தோம்.

நீங்கள் கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அதில் கடைசி கேள்விக்குதான் கோடி ரூபாய் பரிசு, ஆகவே எனக்கு கடைசி கேள்வி மட்டும் கேளுங்கள் என்று கேட்டு பரிசை நோகாமல் வென்று விட முடியுமா என்றால் இல்லை என்று எல்லருமே சொல்வர், ஆகவே ஒவ்வொரு கஷ்டமான கேள்வியை தாண்டிதான் கடைசி கேள்விக்கு "கோடி ரூபாய்" பரிசு இருக்கிறது. உலகத்திலேயே இப்படிதான் என்னும் போது நிரந்தர சுவனத்தை நாம் பெற்றுக் கொள்ள அல்லாஹ் அல்-குர்ஆனில் நம்மிடம் கூறுகிறான் தெரியுமா?

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? (2:214)

பிரச்சனை என்னவென்றால் நம்மில் சிலருக்கு, சோதனை என்ற வார்த்தையை கேட்டவுடன் முகம் சுருங்கி விடுகிறது. மாறி மாறிஅவை நம்மை தாக்கும் போது என்னுடைய வாழ்வு இப்படி ஆகிவிட்டதே.. என நம்மில் சிலர் தினமும் அழுது கூட புலம்புகிறார்கள்.  இங்கே சில விஷயங்களை புரிந்து கொள்வது நலமாக இருக்கும்.

பிறந்தது முதல் இப்போது வரை எனக்குஎதுவுமே கிடைக்கவில்லை, நான் வாழ்கையில் மகிழ்ச்சியை பார்த்ததே இல்லை என்று சொல்ல முடியுமா? என்று கேட்டால் இல்லவே இல்லை என அடித்து சொல் முடியும். பல நேரங்களில் சந்தோஷமாக இருந்து இருக்கிறோம், விளையாடி இருக்கிறோம், நிம்மதியில் திளைத்திருகிறோம், நிறைய விஷயங்கள் நாம் நினத்தபடியும் நடந்தே இருக்கிறது, கல்வியை பெற்று இருக்கிறோம், பிள்ளைகளை பெற்று இருக்கிறோம், வீடுகளை கட்டியிருக்கிறோம் இன்னும் இது போல ஏராளம், இதை மறுக்கவே முடியாது. இனியும் எதிர்காலத்தில் எதுவுமே இல்லை, கிடைக்காது என்றெல்லாம் சொல்லவே முடியாது. அப்படியென்றால் என்ன அர்த்தம்?



நமக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்திருகிறது. இன்பமும் எப்போதும் நிலையானது அல்லது துன்பமும் எப்போதுமே நிலையானது அல்ல என்பதுதான் அர்த்தம். உண்மையில் சொல்லப் போனால் இன்பத்தில் திளைத்திருந்த நாம், கஷ்டம் வரும் போது "மட்டும்" இடிந்து போய் விடுகிறோம். அதுதான் யதார்த்தமான உண்மை. அல்லாஹ் நம்மை சோதிக்கும் போது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவனே சொல்லிக் காட்டுகிறான்: 

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (2:156)


ஆகவே, பொறுமையாக அல்லாஹ்வின் சோதனையை, விதியை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தால்நமக்கு பாதி மனப்  பாரம் காலி. எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கிருபை செய்யவே சோதிக்கிறேன் என்கிறான், இதன் மூலம் சுவனத்தில் உயர் பதவிகளையும், இன்பத்தையும் அளித்திட நாடுகிறான். எனவே நாம் புலம்புதலை விட்டு விட்டு பொறுமையை மேற் கொள்ள முயலலாமே?

அல்லாஹ் கூறுகிறான்: இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (2:157)

எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிக்க மாட்டோம் என்றும்  அல்லாஹ் கூறுகிறான். ஆனால் நாமாக வலிய எதையாவது ஏடா கூடமாக செய்து அதனால் அவன் கோபத்திற்கு ஆளாகி இந்த உலகிலேயே தண்டனையை வாங்கி கட்டிக் கொண்டால் அது அவன் பொறுப்பாக மாட்டான்.
அதுதவிர அல்லாஹ்வின் சோதனைகள் நிச்சயமாக ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வரவே செய்யும், அதை நமது பிரார்த்தனை மூலம் போக்க முயலுவோம், ஒரு வேளை அதற்கான தீர்வை அல்லாஹ் தாமத்திது தரும் போது அல்லது வேறொரு காரணத்திற்காக தீர்வை வழங்காத போது "பொறுமையாக இருக்க வேண்டும்" என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

எப்படி பொறுமையாக கொள்வது என்று யோசிக்கும் போது மனது கொஞ்சம் தடுமாற செய்கிறது, கவலைகள் சில வேளைகளில் நம்மை பதற செய்கின்றன, இதை எப்படி சரி கட்டுவது? என்ற கேள்வி சிலருக்கு எழலாம், ஏனெனில்  நாமாகவே எதையாவது புதிதாக செய்யும் போது கொஞ்சம் சிரமமாக இருக்கும், அதே வேளையில் யாராவது செய்வதை பார்த்தல் இன்னும் கொஞ்சம் நமக்கு தெளிவு கிடைக்கும்.

ஞானம் மிக்க அல்லாஹ்  திருமறையில் ஏராளமான நிகழ்சிகளை சொல்லிக் காட்டுகிறான். அதில் நமக்கு ஏராளமான முன் மாதிரிகளும், படிப்பினைகள் இருக்கவே செய்கிறது. சாமணியர்களாகிய நமக்கு சுவனத்தை வழங்க அல்லாஹ் இவ்வளவு தூரம் சோதிக்கத்தான் வேண்டுமா என்று யாரும் எண்ணாதிருக்க வேண்டியோ என்னவோ, சுவர்க்கம் வாக்களிக்கப்பட்ட நபிமார்களுக்கே கடும் சோதனைகள் இருக்கவே செய்தது, அவ்வகையான சோதனைகள் வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா என்று யோசித்தாலே நெஞ்சம் திகிலடைகிறது.

இன்னும் சற்று நாளில் தியாக திருநாள் பக்ரீத் கொண்டாட போகும் நமக்கு, அதை கொண்டாட காரணமாக இருந்த இப்ராஹிமுக்கு அல்லாஹ் சோதனைகள் வழங்கியதையும், அதில் அவர் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்தல்... இப்ராஹிமை அல்லாஹ் தோழனாக எடுத்துக் கொள்ள சரியான நபர்தான் என இன்ஷா அல்லாஹ் உங்கள் உள்ளமே உரக்க சொல்லும்.

அல்லாஹ் இப்ராஹிமை வெறுமனே தோழனாக ஆக்கிக் கொண்டால் அதை கேட்பவர் யாரும் இலர், எனினும் அந்த பதவியை இப்ராஹீம் அடைந்து இருக்கிறார் என்றால் ஏதோ ஒன்று அவரிடம் இருக்கிறது, நிச்சயம் அது நமக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத்தான் இருக்கும். அது என்ன?

(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)




10. சோதனைகள் புயலாய் வீசும் போது...

வாழ்க்கையே வெறுமையாக உள்ளது, மனசு சரியில்லை, எதையோ யோசித்துக்கொண்டு ரொம்ப தூரம் போகிறேன், அங்கு சென்ற பின் ஏன் இங்கு வந்தோம் காரணம் புரியாமல் திகைக்கிறேன் என்று சொல்வதை பார்க்கிறோம். சிந்தனை ஓட்டம் முழுவதும் அவர்களுடைய பிரச்சனையை சற்றிக் கொண்டிருக்கும் போது காரணம் மனம் அவர்களிடம் இல்லை.


சிலருக்கு உடல் பாதிப்பு , சிலருக்கு குழந்த இன்மை, இன்னும் சிலருக்கோ பணப் பற்றாக்குறை என இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. பிரச்சனை இல்லாமல் வாழ்கை இல்லை என அனைவருக்கும் தெரியும்தான், அதற்காக யாருக்குதான் பிரச்சனையோடு வாழ பிடிக்கும்? உங்களுக்கு "சுகர்" என்று டாக்டர் "இனிப்பான" செய்தி சொல்லும் போது அது எவ்வளவு கசப்பாக நமக்கு தெரிகிறது?

பிரச்சனையை சரி செய்யவும் முடியாது, வசதி வாய்ப்பு இல்லவே இல்லை என்னும்போதும், இப்படியே எப்படி? அடுத்து என்ன நடக்குமோ கவலை தொண்டையை அடைக்கும் போது பலர் இடிந்துதான் போகின்றனர். நிச்சயமாக எழுத்துக்களால் விவரிக்க முடியாத வலிதான் அது.


அதீத கவலையினால் சிலருக்கு உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கோ மனநிலைகெடுகிறது. இன்னும் சிலர் கவலையை போக்க வழி தெரியாமல் மது, சிகரெட், போதை, கட்டுபாடற்ற உணவு உண்ணுதல், ஊர் சுற்றுதல் என வாழ்க்கையை தடம் புரள செய்கின்றனர்.

இன்னும் சில பெண்களோ வேலைகளை சரிவர செய்ய முடியாமலும்,   குழந்தைகளை கவனிக்க முடியாமலும்,  சண்டைகளினால் உறவுகளுக்குள் இருக்கும் இணக்கத்தையும் தொலைத்து விடுகிறார்கள். எனவே கவலையை குறைக்க வேண்டும் என்றால் அதில் சரியான அணுகுமுறை வேண்டும்.



இந்த கவலை, சோகம் எல்லாம் புரிந்து கொள்கிற வகையில் புரிந்து கொண்டால் குறையும். கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் பிரச்சனை தீராதுதான், ஆனால் சிலருக்கு அழுவதனால் ஒரு நிம்மதி(?!) இருப்பதாக நினைத்துக் கொண்டு தனிமை கிடைக்கும் போதெல்லாம் இன்ஸ்டால்மெண்டில் அழுது கொண்டு இருப்பர். இப்படி செய்பவர்களில் பெண்களே அதிகம் என்பதை மறுக்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும் போது, கவலைகளால் அதிகம் சோர்ந்து போவது பெண்களாக இருகின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பிரச்சனையை டீல் பண்ணுகிறார்கள். பெரும்பாலும் கவலையை கண்டு ஓடுவது ஆண்களுடைய பழக்கம் என்றால், கவலை இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்பது போல், "அழு" சீரியல்களை இழுத்து போட்டு பார்த்துக் கொண்டு, "கவலை" அடைந்து அடைந்து "நிம்மதி" அடையும் சில பெண்களை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை.  இந்த அழுகை நிம்மதி, ஒரு தற்காலிகமானதே, ஆனால் நிரந்தரமான நிம்மதி அல்லவா நமக்கு வேண்டும்?


சிலர் ஒரு படி மேலே போய், "யா அல்லாஹ் எனக்கு ஏன் இப்படி சோதனை?" என்று சிலர் அழுது புலம்பவும் பார்க்கிறோம். உங்களுக்கு பிறந்தது முதல் இறப்பது வரை பிரச்சனையே வராது என்ற உறுதி மொழியை யாருக்கும் அல்லாஹ் தரவில்லையே.. மாறாக அவனே திருமறையில் கூறுகிறான்.


நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)



வெறுமனே சோதிப்பேன் என்று சொல்லாமல் அதற்கு தீர்வு என்ன என்பதையும் அவனே சொல்லியும் காட்டி விடுகிறான். ஆம், "பொறுமையாக" இருப்பதுதான் அது.  விரும்பிய திருமணம் எல்லோருக்குமே வாய்ப்பது கிடையாது, வளர்ந்த பின் எல்லாருக்குமே சொந்தமாக ஒருவீடு, நல்ல வேலை கிடைத்துவிடுவது இல்லை. நோயே இல்லாத நிலையில் இருந்துவிட முடியாது, எல்லாருமே ஐம்பது வயது கூட தாண்டி வாழ்ந்து விட முடியாது என ஏகப்பட்ட "முடியாதுகள்"  உள்ளன, எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிட்டாலும் மனிதனுக்கு அது நிறைவை தந்துவிடாது என்பதை இறைவன் அறிவான். எல்லோருக்கு எல்லாவற்றையும் இறைவன் கொடுத்விட்டால் உலகத்தின் அன்றாட செயல்களில் பாலன்ஸ் போய்விடும்.


பாலன்சுடன் அல்லாஹ்வால் படைக்க முடியாதா என்றால் அல்லாஹ்வால் முடியும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. இறைவன் நமக்கு கொடுத்துள்ள இந்த பூமி  இப்படிதான் இருக்கும், சுவனத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். இது சுவர்க்கமும் அல்ல, எனவே வெறுமனே அழுது புலம்புவதில் அர்த்தமே இல்லை. நேரடியாகவே சுவனத்தை மட்டும் படைத்தது எல்லா மனிதர்களையும் அங்கே போட்டிருக்கலாம், ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. மாறாக இதை நீங்கள் சம்பாதித்து வாருங்கள். பிறகு பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறான்.


சுருக்கமாக சொன்னால், "சும்மா கிடைக்காது சுவர்க்கம்" என்பதுதான இதன் அர்த்தம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)

9. நான் கடவுள்

அல்லாஹ் எந்த ஒரு பாவத்தையும் மன்னித்து விடுவான், இணை வைப்பதை தவிர - என்று அல்குரானில் அல்லாஹ் கூறுவதை பார்க்கிறோம். இணை வைக்காதீர்கள் என்கிற கட்டளையை குர்ஆனில் திரும்ப திரும்ப பார்க்கலாம். அது என்ன இணை வைப்பு? 

இறைவன் ஒருவனே என்றால், வணக்கத்துக்கு உரியவன் அவன் ஒருவன் மட்டுமே என்றாகிறது. இது ஏக தெய்வ வழிபாடு. எனவே இறைவன் ஒருவனே என்று மனதார ஒப்புக் கொண்டு விட்டு நீயும் கடவுள், நானும் கடவுள், என் பக்கத்துக்கு வீட்டுக்காரன் தெய்வத்திற்கு ஒப்பானவன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதுதான் இணை வைப்பு. அதாவது இறைவனுடைய இடத்தை நாம் பலருக்கு பங்கு போடுகிறோம் - இறைவனுக்கு இணையாக இன்னொன்றை எடுத்துக் கொள்கிறோம் என அர்த்தம். 

எந்த ஒரு நாட்டிலாவது இரண்டு பிரதமர்களை பார்கிறோமோ? இரண்டு ராஜாக்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்ய முடியுமா? சாமானிய மனிதர்களே தங்கள் கண்ணியத்திற்கு இழுக்கு என்னும் போது, படைத்த இறைவன் மட்டும் அட்ஜஸ்ட் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.  இறைவன் தன்னை உதாசீனப்படுத்திவிட்டு இன்னொரு கடவுளை எடுத்துக் கொள்வதையோ அல்லது இறைவனுடைய சிம்மாசனத்தில் அவனை கொஞ்சம் தள்ளி உட்கார சொல்லிவிட்டு அருகே யாரையாவது அமர சொல்வதை  மிகவும் வெறுக்கிறான். என்றாலும் இஸ்லாம் தவிர ஏனைய மக்கள் இதை பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. 

அதுவும் இறைவனை குறைத்து மதிப்பிடுவது இன்னொரு மனிதனின் அறிவற்ற குணாதிசயம். நமது வள்ளுவரே தன்னுடைய ஒரு திருக்குறளில், "தெய்வத்தால் ஆகா(து) எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்(619)" என்று தெய்வத்தின் ஆற்றலை குறைத்தும் மதிப்பிடுகிறார். 

மக்கள் இன்னும் என்னவெல்லாம் கூறுகிறார்கள் என பாப்போம்: 

  • நான் கடவுள்.
  • குருவே தெய்வம்.
  • கணவனே கண் கண்ட தெய்வம் 
  • குழந்தையும் தெய்வமும் ஒன்று.
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 
  • வணங்குவதற்கு தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
  • வான் உறையும் தெய்வம் - வையத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவர் இந்த வான்தெய்வத்துக்கு ஒப்பாக வைத்துத் தொழப்படுவர்.

என்பன போன்ற வாசகங்கள் அன்றாடம் மக்கள் பயன்படுத்துகின்றனர். 

அப்படிப்பட்ட ஒருவன் தான் நம்ரூத் என்னும் அரசன், நானே கடவுள் என்று பிரகனப் படுத்தி இருந்தான். இப்ராஹிம் நெருப்பு குண்டத்தில் வீசப்பட்டும், அவரை நெருப்பு தீண்டாததை கேள்வியுற்ற நம்ரூத் இப்ராஹிமை அழைத்தான். 

"இப்ராஹிமே.. உன்னுடைய இறைவன் யார்?"

"எவன் பிறப்பையும் இறப்பையும் கொடுகிறானோ அவனே இறைவன்" - இது இப்ராஹிம்.

" அப்படி என்றால் என்னாலும் பிறருக்கு பிறப்பையும்இறப்பையும் வழங்க முடியும். யாரங்கே இரண்டு மரண தண்டனை கைதிகளை என் முன் கொண்டு வாருங்கள்..." என்றான் அரசன் நம்ரூத்.

(ஒருவனை கொன்றுவிட்டான், இன்னொருவனை நீ பிழைத்து போ.. உனக்கு உயிர் கொடுக்கிறேன்" என்று சொல்லி அவனை விடுதலை செய்தான்,)



"பார்த்தாயா.. இப்ராஹிம். நான் உயிரை எடுத்ததையும், கொடுத்ததையும்.." என்றான் ஏதோ சாதித்தவனாக.

(இதுதான் உயிர் கொடுக்கும் விதமா? புதிசாலியிடம் விவாதிக்கலாம். அடி முட்டாளிடம் விவாதிக்க முடியுமா? எனவே இப்ராகிம் இன்னொரு கொடுகிப் பிடி கேள்வியை போட்டார்)

"அப்படியா அரசே.. என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கில் உதிக்க செய்கிறான்.. நீ அதை மேற்கில் உதிக்க செய்" என்றார் இப்ராஹிம்.

(அவ்வளவுதான்.. திக்கு முக்காகி போனான் நம்ரூத். இப்படித்தான் இன்றும் பலர் இணைவைப்பு செய்து கொண்டு தங்களை  "தங்கள் செயல் சரி" என்று விவாதித்துக் கொண்டு இருகின்றனர். இப்ராஹிம் போன்ற இளைஞர்கள் நிறைய உருவாக வேண்டும்.) 

ஊரையும் எதிர்த்தாகி விட்டது, அரசனையும் பகைத்துக் கொண்டாகி விட்டது. மக்கள் அனைவரும், இப்ராஹிமின் தந்தை உட்பட எல்லோரும் சத்தியத்தை ஏற்க்கவில்லை, இனி இந்த ஊரில் இருந்து பிரயோஜனம் இல்லை,  எனவே தன்னுடைய பிரச்சாரத்தை வேறு ஊரில் தொடங்க எண்ணி, இப்ராஹிம் லூத்தையும், தன்னுடைய மனைவி சாராவையும் அழைத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறினார். 

(இன்ஷா அல்லாஹ் தொடரும்...)


Reference:
1. https://www.youtube.com/watch?v=XMceWzDbno0 
2. https://upload.wikimedia.org/wikipedia/commons/2/22/Nimrud_stele.jpg

8. என் வாழ்க்கை, என் இஷ்டம்


வாலிப வேகம் என்றால் என்ன ? எப்படி இருக்க வேண்டும்? எதாவது அளவு கோள் இருக்கிறதா? வாலிப வேகத்துக்கு முன்மாதிரியாக இப்ராஹிமை முன்பு உதாரணம் கூறினோம், அப்படி என்றால் இளைஞர்கள் அனைவரும் சிலை உடைக்க கிளம்புங்கள் என்று அர்த்தமா?

இப்ராஹிம் செய்தார்  என்றால் அவர் அந்த மக்களுக்குள் ஒருவராக இருந்தார், அவர் தந்தை சிலைகள் செய்பவராக இருந்தார். படைத்த ஒரு இறைவனை வழிபடாமல் மனம் போன போக்கில் மரங்களையும், கற்களையும், முன்னோர்களையும் இறைவனுடைய ஸ்தானத்தில் வைப்பதை இப்ராஹிம் எதிர்த்தார், அவர் எதிர்த்தாலும் கூட அம்மக்கள் மீண்டும் மீண்டும்அவரை அவர்கள் தெய்வங்களை வணங்க அழைத்தனர், ஆதலால் வெகுண்டெழுந்தார்.

நம் பெற்றோர் முஸ்லிம் அதனால் நாமும் முஸ்லிம் அதனால் இப்ராஹிம், நபிகள் நாயகம் போன்றவர்களின் உண்மையான நோக்கங்களையும், போராட்ட குணங்களையும் நம்மை போன்ற தலைமுறை முஸ்லிம்களால் சரிவர  புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால்தான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு இருக்கும் வேகம் தலைமுறை முஸ்லிமிற்கு இருப்பது இல்லை.

நம்மவர்களில் யாராவது தொப்பி, தாடி, பள்ளிவாசல் என மாறினால், முதல் எதிர்ப்பு வீட்டிலேயே வருகிறதா? இல்லையா? ஓவராக பண்ணுகிறான் என்று லேபில் குத்துகிறார்களா இல்லையா? முதல்ல படி அப்புறம் தொழு என்றும், இப்படி இருந்தாய் என்றால் உனக்கு வேலை கிடைக்காது, பொண்ணு கிடைக்காது என்று இலவச அட்வைஸ் வேறு கிடைக்கும். 
விடாபிடியாக இஸ்லாத்தை பின்பற்றினால் அவரை கண்டு சக முஸ்லிமே "இவன் அவனாக இருப்பானோ" என ஓட்டம் பிடிப்பதை அவ்வப்போது நாம் பார்க்கிறோம். இதுதான் நம்முடைய முஸ்லிம்கள்  நிலை. அல்லாஹ்-ரசூல் சொன்ன படி வாழ்கையை அமைத்துக் கொள்ளுதலை பார்த்து சிலர் மீது சிலருக்கு வெறுப்பும், ஏளனமும் ஏன் வருகிறது? 
அதே முஸ்லிம் இளைஞன் "என் வாழ்க்கை, என் இஷ்டம்"  என்று கோஷம் போட்டுக் கொண்டு தப்பு தண்டா எதாவதுசெய்தால் சமூகம் எப்படி நடந்து கொள்கிறது?  
  • மேற்கத்திய உலகம் என்றால், "டீன் ஏஜ் நடக்குது, அப்படிதான் இருப்பார்கள்" என்று சமாளிக்கிறது.   
  • நம்ம ஊராக இருந்தால்..   "வயசு பசங்க அப்படிதான் முன்ன பின்ன இருக்கும், போக போக சரியாகிடும், ஒரு கால் கட்டு போட்டா சரியாயிடும் என்று சொல்லி சமாளிகிறது.


இந்த சமுதாயத்திற்கு உண்மையிலேயே தேவையான இளமை வேகம் எது? ஜாலியாக இருப்பது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றனவா? இல்லவே இல்லை. அநீதிகளை எதிர்ப்பதாக்கட்டும், உடல் உழைப்பாகட்டும் அதுதான் தேவையான இளமை வேகம்.    எது நல்லது எது தவறு என்பதை யார் முடிவு செய்வது?

எனக்கு எது சரி என்று படுவது என்னால் தள்ளப்பட்டு கீழே விழுந்தவனுக்கு இல்லை. எனக்கு தவறு என்று படுவது என் மகனுக்கு தவறு என்று படாது. எல்லோரையும் ஒரே முடிவுக்கு வர வைப்பது எப்படி? யார் எது சரி எது தவறு என்பதை முடிவு செய்வது? நான் அல்லது நீங்கள் முடிவு செய்தால் குழப்பம்தான், ஆனால் படைத்தவன் சொன்னால் சரியாக இருக்கும்தானே.. அதனால்தான் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டும். அதற்குதான் இப்ராஹிம், நபிகள் நாயகம் வந்தார்கள்.



ஒரு இளைஞன் இஸ்லாத்தை பின்பற்றுகிறான் என்றால்....

அவன் உலகத்தை விட்டுவிட்டு பள்ளிவாசலிலேயே இருந்து விடபோவதும் இல்லை. குரானிலேயேஎல்லா நேரத்தையும் இழந்துவிடப் போவதும் இல்லை.  பயங்கரவாத செயல்களை செய்யப் போவதும் இல்லை. இஸ்லாத்தைதை புரிந்து கொள்ளாமையால் வரும் அறியாமை இது. சைத்தான் அப்படிப்பட்ட தோற்றத்தை, படபடப்பை ஏற்படுத்துகிறான்.

நேரம் எப்படியும் கழியக் கூடியது, சும்மா அமர்ந்து இருந்தால் கூட கழிந்து விடும். ஒருவன் இளைஞன் தீன் படி நடக்கிறான் என்றால்  அவன் நண்பர்களுடன் அரட்டை, டீவியில் நேரம் போவதற்கு பதில் தொழுகையில் நேரம் செலவழிக்கப்படும். குமுதம், ஆனந்த விகடன் படிப்தற்கு பதில் குரான் படிக்கப்படும். அதற்காக செய்தித்தாளை பார்க்காமல், கல்வி கற்காமல், வேலை வெட்டி செய்யாமல், குழந்தை குட்டிகளை கவனிக்காமல் இருந்துவிடப் போவது இல்லை.

இன்னும் சொல்ல போனால் மானக்கேடான செய்திகளை படிப்பதில் இருந்து இஸ்லாம் அவனை தடுக்கும், படிப்புநன்றாக வரும் பட்சத்தில் நன்றாக படித்து நல்ல ஹலாலான வழியில் சம்பாதிக்க இஸ்லாம் தூண்டும், சினிமா, மது, சீட்டில் பணம் செலவழியாமல் ஸதகா, ஜகாத், பிறருக்கு உதவுவது என இஸ்லாம் செய்ய வைக்கும். சமுதாயமும் உயரும், நாடும் உயரும். இல்லாவிட்டால் முஸ்லிமுக்கு 2.5% இட ஒதுக்கீடு வேண்டும் என இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் நம்மவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்து கொண்டு இருப்பர்.


நாம் சொல்ல வருவது என்ன?  

எல்லா ஜீவராசிக்களும்தன் பிறக்கின்றன, அடுத்த தலைமுறைக்கு வித்திடுகின்றன, இறுதியில் இறந்து போகின்றன. நம்முடை பிறப்பின் நோக்கம் நாம் டாக்டராகவோ, இஞ்சினியராகவோ, பிசினஸ்மேன்னாகவோ இருப்பதற்காக இல்லை, கல்யாணம் செய்வது குழந்தை குட்டி பெறுவது இல்லை. வீடு வாசல், கார், வேலை, கல்யாணம், குழந்தைகள் எல்லாம் தேவை. அவற்றை தேட ஓடி உழைக்க வேண்டும், இஸ்லாம் தடுக்க வில்லையே, அதே சமயம் அல்லாஹ்வை வணங்குவது கடமை. ஆகவே உலக தேவைகளுக்கே முன் உதாரணம் கொடுத்து நாம் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற தவறினால் மறுமை வாழ்வு கேள்விக்குறிதான். முஸ்லிம்கள் இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றினால் முஸ்லிம் சமுதாயத்துக்கும் சரி, நாட்டுக்கும் நன்மையே. எப்படி?

அல்லாஹ்வுக்கு பயப்படுவதால்...

  • லஞ்சம் வாங்காதவனாக, லஞ்சம்  கொடுக்காதவனாக, 
  • கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்யாதவனாக, 
  • அண்டை வீட்டு பெண்ணை நோக்காதவனாக,
  • அண்டை வீட்டாருக்கு உதவுபவனாக, 
  • வயோதிக பெற்றோரை கவனிப்பவனாக, 
  • மனைவியை மட்டும் நேசிப்பவனாக, 
  • ஒழுங்காக வருமான வரி ஒழுங்காக செலுத்துபவனாக, 
  • இஸ்லாம் பெயரில் தவறுகள் நடப்பதை களைபவனாக,
  • நாட்டை உண்மையாக நேசிப்பவனாக 

முஸ்லிம் இளைஞன் இருப்பான். அப்படிதான் இருந்தார் வாலிபர் இப்ராஹிம்.

அல்லாஹ் - ரசூல் எவ்வாறு தேவைகளை நிறைவேற்ற கற்று கொடுத்து இருகிறார்களோ அவ்வாறு தேவைகளை நிறைவேற்றும் போது அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும், நம் செயல்களில் பரக்கத்தும் கிடைக்கும். நிறைய கதை பேசிவிட்டோம், சரி இனி மீண்டும் இப்ராஹிம் கதைக்குள் நுழைவோம்..


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

7. அக்னி நெருப்பும் அஞ்சாத நபியும்..

சிலைகளை  உடைத்த வாலிபர் இப்ராஹிமுக்கு என்ன தண்டனை தரலாம் என ஊர் பெரியவர்கள் கூடி பேசினர், அதில் நெருப்பு குண்டத்தில் போட்டு எரித்து கொல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

நெருப்பு குண்டமும் தயார் செய்யப்பட்டு காவு வாங்குவதற்கு இப்ராஹிமிற்கு முன்பு தக தக வென்று எரிந்து கொண்டு இருந்தது. அவரை உள்ளே தள்ளிவிட்டனர். நெருப்பு அவரை சூழ்ந்து கொண்டது, ஊர் மக்கள் முகமெல்லாம் சாதித்த வெறியில் திளைத்தது..

நல்ல தலைவர்களோ, நல்ல அதிகாரிகளோ, உண்மை சொல்ல வந்த சாட்சிகளோ, உண்மையை உலகுக்கு சொல்லும் நிருபர்களும் அவ்வப்போது கொல்லப்படுவதை அன்றாடம் நாளிதழ்களில் பார்க்கிறோம். அவர்கள் எல்லாம் தாங்கள் செய்யும் வேலைகளில், போராட்டங்களில் அபாயம் உண்டு என்பதை அறியாதவர்களா? தெரிந்தும் ஏன் இறங்கி போராடுகிறார்கள்? தான் கொண்ட கொள்கைக்காக, நீதி நேர்மைக்காக, பிறருக்காக  போராடுகின்றனர், அப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நன்மைக்காக கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.


எப்படி சிலருக்கு செல்வ வளத்தை கொடுத்து சோதிக்கிறானோ அது போல சிலருக்கு துர் மரணத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலையை கொடுத்தான் சோதிக்கிறான். அல்லாஹ் நாடினால்தான் யாருக்கும் நன்மையையும் நிகழும், தீங்கும்  நடக்கும், அல்லாஹ்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவர்களுக்கு கொடுத்து சோதிக்கவும் செய்கிறான், பிறர் நம் மீது தீங்கு செய்வதையும் சோதனைக்காக அனுமதிக்கிறான்.

சரித்திரத்தில் எந்த நபியும் சாமானியமாக ஏகத்துவத்தை போதிக்க முடிந்தது இல்லை, வீட்டை விட்டு, ஊரை விட்டு துரத்தப்பட்டனர், கற்களாலும், ஆயுதங்களாலும் தாக்கப்பட்டனர், சொந்த பந்தங்களை பேணுவது அசாதாரணமான நிலை, வஞ்சகம், போர், கொலை மிரட்டல்கள்களுக்கு ஆளாவது என பல்வேறு நிலைகளைத் தாண்டிதான் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதை நிலை நிறுத்தினர். சரித்திரத்தில் இப்படி எத்தனையோ நிகழ்வுகள் அரங்கேறியது. அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

நபிகள் நாயகத்தை பல முறை கொள்வதற்கு கொலை முயற்சி நடந்த போதும், நான் அல்லாஹ்வையே நம்புகிறேன் என்னை காப்பாற்ற அவன் போதுமானவன் என்றே சொன்னார்.  அல்லாஹ் ஒவ்வொரு முறையும் காப்பாற்றினான். 
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்த இப்ராஹிம் அதற்காக படைத்தவனிடமே பாதுகாப்பு தேடினார். இறைவனும் இப்ராஹிமை காப்பற்றினான். இதை பற்றி அல்லாஹ் திருகுரானில் இவ்வாறு கூறுகிறான்:
 “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.(அல்-குரான் 21:69)


 இப்ராஹிம் நபியும், முஹம்மது நபியும் மரணத்திற்கு பயந்து அழுது புலம்பவும் இல்லை. தன்னுடைய நிலை இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொள்ளவும் இல்லை. அழுது புலம்புவது, நிராசையாகி போவது நபிக்கு அழகன்று. அப்படி இருக்கையில் இன்னொரு நபியான இயேசு மரணத்திற்கு பயந்து, அழுததாக பைபிள் கூறுவது அவரை கேவலப்படுத்துவதாகும்.  
இப்ராஹிம் நபியை மட்டுமல்ல இயேசுநபியையும் காப்பாற்றி தன்னளவில் வானத்திற்கு உயர்த்திக் கொண்டதாக இறைவன் திருகுரானில் குறிப்பிடுகிறான். ஆனால் கிறிஸ்தவர்கள் இயேசு நபி கொலை செய்யப்பட்டதாக நினைத்துக் கொண்டு இருகின்றனர். பைபிளில் மத்தேயு அதிகாரத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பிதாவின் மீது நம்பிக்கை இழந்து அழுது புலம்பியதாக கூறுகிறது : 

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். ( 27– 46) 

அவர் கர்த்தர் மேல் நிராசையானார் என்றும் கூறுவதிலோ இருந்து இயேசு மரணிக்கவே இல்லை என்பதையும், பைபிள் கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஒன்று என்பதை தெளிவாக அறியலாம். இத்தனைக்கும், தன்னைத்தானே மாய்த்து ரத்த பலி கொடுத்து மனிதர்களுடைய  பாவங்களை போக்கி ரட்சிக்க இயேசு வந்தார் என்று கிருஸ்தவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், இயேசு தெரிந்தே மரணிக்க வந்தார் என்றாகி விடுகிறது. எனவே அவர்  சிரித்தமுகமாக மரணத்தை ஏற்றிருக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் அமைதியாவது காத்திருக்க வேண்டும். ஆனால் பைபிள் அவ்வாறெல்லாம் குறிப்பிடவில்லை.,, மாறாக  அவர் நிராசையாகி அழுது புலம்பினார் என்றும், "ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று கேட்பதும்  கர்த்தரை பார்த்து கேட்டார்  என்றும் கூறுவதில் இருந்து சிலுவையில் இறந்தது இயேசு இல்லை என்பதை தெளிவாக அறியலாம்.

சரி நமது இப்ராஹிம் கதைக்கு வருவோம். நெருப்பு இப்ராஹிமை தீண்டாததை கண்ட அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளவே இல்லை. இதை கண்ட சிறுவன் லூத், இப்ராஹிமின் மார்க்கத்தை ஏற்றார், லூத் இப்ராஹிமின் உறவினரும் ஆவார்.

அந்த ஊருக்கு அருகே வாழ்ந்து வந்த நம்ரூத் என்னும் மன்னன் , "நானே இறைவன்" என்று பிரகணப்படுத்தி இருந்தான். நெருப்பு இப்ராஹிமை தீண்டாததை கேள்வியுற்ற நம்ரூத் இப்ராஹிமை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தான். இப்ராஹிமும் அவனை சந்திக்க சென்றார், அங்கேயும் காரசாரமாக விவாதம் நடந்தது... 


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)












6. சக்தி உள்ள சாமி எதுவுங்கோ?

"இப்ராஹிம், நாங்கள் பக்கத்துக்கு ஊருக்கு தெய்வங்களை வழிபட போகிறோம், வருகிறாயா?" என்று அழைப்பு விடுத்தனர் அவ்வூர் மக்கள்.

"இல்லை நான் நலமாக இல்லை நீங்கள் செல்லுங்கள்" என்று இப்ராஹிம் அங்கேயே தங்கிவிட்டார்.

வழிபாடு எல்லாம் முடிந்த பின்னர் அவ்வூர் மக்கள் வந்து பார்த்தபோதுஅவர்கள் சாமி சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு சின்னா பிண்ணமாக இருந்தது.   அய்யய்யோ நமது தெய்வங்களுக்கு என்ன ஆயிற்று எப்படி ஆயிற்று என்று பதறி போனார்கள். எல்லா சாமி சிலைகளும் உடைக்கப்பட்டு இருந்தன, ஆனால் பெரிய சாமி சிலையை தவிர!

யார் இதை செய்து இருக்க கூடும்?  அவர்களுக்கு குழப்பமாக இருந்தது. போதாதற்கு நான்தான் உடைத்தேன் என்று சொல்வது போல கோடாலி ஒன்றும் அதன் கையிலோ அல்லது கழுத்திலோ தொங்கிக் கொண்டு இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியுற்று கிடந்தனர்.

அங்கே இப்ராஹிமின் பெயரும் பலமாக அடிபட்டது, இந்த இப்ராஹிம் ஏற்கனவே நமது சிலைகளை பற்றியும், நமது தெய்வங்களையும் குறை சொல்லுபவராக இருக்கிறார். எனவே அவரிடம் கேட்டால் எதாவது விடை கிடைக்கும் என இப்ராஹிமை அழைத்து வந்தனர்.

"இப்ராஹிமே.. எங்கள் சாமி சிலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு கிடக்கின்றன. இதைசெய்தது நீர் தானே? " என்று கேட்டனர்.

"இந்த பெரிய சாமி சிலைதான் மற்றைய சின்ன சாமி சிலைகளை உடைத்து இருக்கும்" என்றார் இப்ராஹிம் கூலாக.

"என்ன சொல்கிறார் இப்ராஹிம்"  என அனைவரும் இப்ராஹிமையே பார்த்தனர். பெரிய சாமி சிலைக்கு எந்த சேதமும் இல்லை, அது கோடரியையும் தொங்கப்போட்டு கொண்டிருந்தது.

"இந்த சிலை பேசக்கூடியதாக இருந்தால் இந்த சாமி சிலையிடம் கேளுங்கள், உங்களுக்கு அது யார் உடைத்தது என சொல்லக் கூடும்" என்றார் இப்ராஹிம் நக்கலாக.

இந்த பதிலை எதிர்பார்க்காத மக்கள் உறைந்து போய்விட்டனர். இப்ராஹிம் சொல்வது சரியே, சிலைகள் பேசாது, எதையும் கேக்காது, அதற்கு எதாவது தீமை செய்தால் அதை கூட அதனால் தடுக்க இயலாது, இப்படி இருக்கையில் நமக்கு இது நல்லது கெட்டது எதையும் செய்ய முடியவே முடியாது என்பதை விளங்காதவர்களா என்ன? விளங்கிதான் வைத்துதான் இருந்தனர்.

“இப்ராஹிம், இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” என்று இப்ராஹிமை பார்த்து கூறினர்

இதற்காகவே காத்திருந்த இப்ராஹிம்அவர்களை கேள்விகளால் துடைத்தெடுத்தார்:

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள், சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?”





(அவர்கள் என்ன பதில் கூற முடியும்? ச்சே.. நாம்தான் இது சக்தி உள்ள சாமி, அது சக்தி இல்லாத சாமி, சக்தி இருக்கணுமுன்னா திருட்டு சாமி வேணும் அப்படி இப்படீன்னு மூதாதையர் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பின்பற்றினோமே தவிர, எது சரி எது தவறு என்று விளங்கி இருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்த போது "சுர்" என பட்டது.

இந்த ஞானோதயம் எல்லாம் சில நொடிகள்தான், அந்த வெட்கமும், அவமானமும், குற்ற உணர்ச்சியை தூண்டி கோப கனலை காக்க வைத்தது, ஆம் இப்போது அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது யார் சாமி சிலைகளை உடைத்தது என்று.)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


Reference:
1. 21:57-68





5. யாரு உங்க சாமி ?


முஸ்லிம் அல்லாதவர்களிடம் சென்று, "முஸ்லிம்கள் யாரை வணங்குகிறார்கள்?  என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்? 
  • 786
  • பிறை-நட்சத்திரம் 
  • முஸ்லிம்களின் குல தெய்வம் 
  • அரபு நாட்டு மக்களின் கடவுள்
  • நபிகள் நாயகம் அவர்களை வணங்குகிறார்கள்.
  • திடீரென 1400 வருஷத்துக்கு முன்னாள் நபிகள் நாயகம் சொல்லிய கடவுள்

என பல வகையான பதில்களை தருவர். இதுதான் அவர்கள் அல்லாஹ்வை புரிந்து வைத்துள்ள நிலை.  அவர்கள் என்ன பதிலை சொன்னாலும் அதை பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ள நமக்கு நேரம் இல்லை என்பது வருத்தமான விஷயம். இதுதான் நம்முடைய பலஹீனமான மற்றும் யதார்த்த நிலை. ஆனால் இளைஞர் இப்ராஹிமால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நேரே சிலை வணக்கம் புரியும் மக்களிடையே சென்று கேள்விகள் கேட்கலானார்.


"நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?" என்று மக்களிடம் கேட்டார்  இப்ராஹிம்.

"எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம், ஆகவே நாங்களும் இதையே வணங்குகிறோம்"  என்று பதில் தந்தனர். 

"உங்களுக்கு எந்த நன்மையையும், தீமையும் செய்ய முடியாத இவற்றையா வணங்குகின்றீர்கள்? சிந்திக்க மாட்டீர்களா? அவை நீங்கள் சொல்வதை கேப்பதும், இல்லை, உங்களிடம் பேசவும் பேசாதே.. நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்." என்றார் இப்ராஹிம்.

"நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?”  என அந்த மக்கள் ஆஜரை போலவேகோபத்தில் இப்ராஹிமை பொரிந்து தள்ளினார்கள்  
 யாராவது ஒரு முஸ்லிம் அல்லாத சகோதரர் வந்து, "பாய், நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?  அல்லாஹ் யார்?" என்று கேட்டால் பரம்பரை முஸ்லிமான நாம் என்ன பதில்தருவோம்?  இந்த பதிவை தொடர்ந்து படிப்பதை நிறுத்தி விட்டு நீங்கள் மற்றவர்களுக்கு தரப்போகும் பதிலை ஒரு தாளில் முடிந்தால்   எழுதிக்கொள்ளுங்கள் மீண்டும் இந்த பதிவிக்கு வாருங்கள்.


எழுதியாயிற்றா?

முஸ்லிம் தாய்-தந்தைக்கு பிறக்காத இப்ராஹிம் "இறைவன்" யார்? என்ற கேள்விக்கு தந்த பதில், நாம் எல்லாருக்கும் ஒரு அழகிய முன்மாதிரியான பதிலாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.  வாருங்கள் நாமும் இப்ராஹிம்  சிலை வணக்கம் புரியும் மக்களுக்கு விவாதத்தில் என்ன பதிலை கொடுத்தார்  என்பதை பார்போம்.


                             (image courtesy: https://britishmuseumblog.files.wordpress.com)


“அப்படியல்ல! 

எந்த ஒருவன் என்னை படைத்தானோ அவனே என் இறைவன்!

எந்த ஒருவன் எனக்கு உணவு அளிக்கிறானோ அவனே என் இறைவன்!

எந்த ஒருவன் என்னை மரணிக்க செய்கிறானோ அவனே என் இறைவன்!

எந்த ஒருவன் என்னை உயிர்பெற செய்கிறானோ அவனே என் இறைவன்! 

உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்”  - என்று இப்ராஹீம் கூறினார். 




இப்போது சொல்லுங்கள்: எங்களுடைய முன்னோர்கள் வணங்கினார்கள், நாங்களும் வணங்குகிறோம் என்று  சொல்வது சிறந்த பதிலா? இல்லை இப்ராஹிம் சொன்னது சிறந்த பதிலா? நிச்சயம் இப்ராஹிமுடைய பதில்தானே...  


அதனால்தான் அனேக இடங்களில் இப்ராஹிமை குர்ஆனில் அல்லாஹ், இப்ராஹிமை சிறப்பித்து கூறுவதோடு இல்லாமல், இப்ராஹிமுடைய மார்கத்தை பின்பற்றுங்கள் நபிகள் நாயகத்துக்கும், நமக்கும் திரும்ப திரும்ப சொல்லிக் காட்டுகிறான். இந்த ஒரு வசனமே "அல்லாஹ்" என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உருவாக்கி கொண்ட புதிய கடவுள் இல்லை என்பதற்கு சாட்சி.


(நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை. (திருக்குரான் 4:125.) 

சரி நாம் கதைக்குள் மீண்டும் வருவோம்...

நாட்கள் நகர நகர அறிவுபூவமான மற்றும் யதார்த்தமான இப்ராஹிமின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமலும், அவரை தடுத்து நிறுத்த முடியாமலும் ஒட்டு மொத்த ஊரே அவர் மீது மகா கடுப்பில் இருந்தது.  


எரிகிற நெரிப்பில் எண்ணைய் ஊற்றும் படியாக இளைஞன் இப்ராஹிம் ஒரு சம்பவத்தை அரங்கேற்றினார்.. அவ்வளவுதான்  ஊரே ஒன்று சேர  கோபக் கணலை கக்க ஆரம்பித்தது... அப்படி என்ன நடந்தது?


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


Reference:

1. Quran 26; 70-82
2. Quran 21-52-56
3. Quran 16:123, 3:95
4. http://blog.britishmuseum.org/tag/ur/




4. கொலைவெறியில் ஆடிய தந்தை

படைத்த இறைவனை வணங்குவதை விட்டுவிட்டு இவர்களே ஒரு சிலையை படைத்தது அதை வணங்குவதை  சிறுவன் இப்ராஹிம் ஏற்க்கவில்லை,  இறைவன் சிறுவயதிலேயே இப்ராஹிமிற்கு ஞானத்தை அளித்திருந்தான்.   அதனால் சிலைவணக்கம்  புரியும் தனது தந்தையை நோக்கி,

"என்னருமை தந்தையே.. நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?  என்று சிறுவன் இப்ராஹிம் கேட்டார். 
"நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்" என்றார் தந்தை.

"என் அருமைத் தந்தையே!  நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?  
யாதொன்றையும் பார்க்க இயலாத, கேட்க இயலாத இந்த சிலைகலையா நீங்கள் வழிபடுகின்றீர்?  
இவைகள் உங்களுக்கு எந்த வித நன்மையையும் தீமையும் கூட செய்ய முடித்தவை ஆயிற்றே.." என்றார் சிறுவர்.

ஆஜருக்கு கோபம் தலைகேறியது.  இப்ராஹிம் எடுத்து வைத்த எந்த ஒரு வாதத்துக்கும் அழகிய பதிலை தர முடிய வில்லை.
                                         (image courtesy: http://www.crystalinks.com/sumerart.html)

சிறிய பிள்ளை பெரிய பேச்சுக்களை பேசுவதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவது இல்லை. அதுவும் எதைதெய்வம் என்று எண்ணி அவரும் அவர் ஊர் மக்களும் வணங்குகிறார்களோ அதை விமர்சித்தால்  விடுவாரா ஆஜர்?தெய்வ குற்றம் ஆயிற்றே! மேலும் பிழைப்பில் வேறு மண் அள்ளி போடுகிறான் மகன்!

“இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்று கடுமையாக கூறினார் தந்தை ஆஜர்.

உங்களுக்கு வந்திராத ஞானத்தை இறைவன் எனக்கு அருளியுள்ளான். நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன் என்று சிறுவன் இப்ராஹிம் தன்னுடைய தந்தைக்கு அழகிய உபதேசங்களை செய்தார்.

“என் அருமைத் தந்தையே!  
நிச்சயமாக ஷைத்தான், அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன். நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி ஆகிவிடாதீர்கள்.
நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்"
என்று கூறி தனது தந்தைக்கு பாவ மண்ணிப்பும் தேடினார். ஏக இறைவனை நோக்கிய அழைப்பை இறுதிவரை ஆஜர் ஏற்கவே இல்லை.

 காலம் செல்ல செல்ல மற்ற மக்களுக்கும் எடுத்து சொல்ல ஆரம்பித்தார்.
இப்ராஹிம் மெல்ல மெல்ல வாலிப வயதை நோக்கி நகர்ந்தார். சிறுவனாக இருக்கும் போதே கொஞ்சமும் பயபடாமல் தந்தையிடம் விவாதித்தார், இப்போது வாலிப வேகம் வேறு.. சொல்லவா வேண்டும்....


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)




Reference:

1. Quran 19:41-48





3. மீண்டும் சிலைகள்...

சில நூட்றாண்டுகளுக்கு முன்பு, "உலகம் உருண்டை" என்று சொன்னதால் கலிலியோ கொலை செய்யப்பட்டார். நீங்கள் செய்த ஒரு அறிவுபூர்வமான செயலுக்காக உங்களை ஊரில் இருந்து தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்தால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்? நமது "ஊர்" ஹீரோவுக்கும் இதுதான் நடந்தது.


ஏன் பாய் தாடி வைக்கல?" என்று கேட்டால், அதுவா.. ஏன் பெண்டாட்டிக்கு பிடிக்கல, என்னுடைய ஆபீசுல என்னைய ஒரு மாதிரி பாப்பாங்க, என்னோட அப்பா இது எல்லாம் ஓவர் அப்படீன்னு சொல்றார் என்று ஏகப்பட்ட சாக்கு போக்குகளை சொல்கிறோம்.  நமக்கு எல்லாம் முன்மாதிரியான நமது "ஹீரோ" என்ன செய்தார் தெரியுமா? ஒட்டு மொத்த ஊரே அவரை வெறுக்க ஆரம்பித்தது, ஏன் பெற்ற தந்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டினார், ஆனாலும் சமரசம் என்ற பேச்சுக்கு அவர் யாருக்கும் இடம் கொடுக்கவே இல்லை. அப்படி என்னதான் நடந்தது அந்த ஊரில்? வாருங்கள் நாமும் சேர்ந்து கதையில் பயணிப்போம்.

நோவாவின் வெள்ளபெருக்கு முடிந்து பல காலம் கழித்து மீண்டும் இறைவன் விரும்பாத ஒரு நிகழ்வு எல்லா ஊர்களிலும் சர்வ சாதாரணமாக மீண்டும் நடக்க ஆரம்பித்தது.  ஆம்.. சுமார் 5000-6000 ஆண்டுகளுக்கு முந்தய அந்த "ஊரில்" எங்கெங்கு பார்த்தாலும் விதவிதமான சிலைகள், அதற்கு பூஜைகள், திருவிழா என பக்திமயமாக இருந்தது.

அந்த ஊரில் "ஆஜர்" என்னும் பெயருடைய ஒருவர் சிலைகளை செய்து வந்தார். விதவிதமான  சிறிய பெரிய சிலைகளை மரத்தாலும், கற்களாலும் செய்து வந்தார். அந்த ஊர் மக்கள் அதை அவரிடம் காசு கொடுத்து வாங்கி செல்வதை சிறுவர் இப்ராஹிம் ஆச்சிரியமாக கவனித்து வந்தார். இருக்காதா பின்னே? ஏனென்றால் சிலைகளை செய்வது தகப்பன் ஆயிற்றே! பொதுவாக சிறுவர்கள் என்றாலே எப்போதுமே விளையாட்டுதனமாகவே இருப்பர், ஆனால் சிறுவன்  இப்ராஹிமுக்கு அவர் மனதில்வேறு மாதிரியான ஆயிரம் கேள்விகள் ஓடின.

அட..  என்ன இது? என்னுடைய தந்தை அவரது சொந்த கையினாலேயே செய்கிறார்.. ஆனால் இந்த மக்கள் இதை கடவுள் என்கின்றனர், இந்த சிலைகளுக்கு பூஜை செய்கின்றனர், எனக்கு அது கொடு இது கொடு கேட்கின்றனர். சிறிது காலம் முன்பு வரை மரமாகவும், கல்லாக இருந்து தன்னுடைய தந்தையால்தான்  உருபெற்ற இந்தசிலைகள் எப்படி இவர்கள் தேவையை நிறைவேற்றும்? என்பதுதான் அவர் மனதில் உதித்த கேள்வி.


                          (Image courtesy: Thanks from http://blog.britishmuseum.org)
அந்த ஊர் மக்கள் செய்வது இருக்கட்டும், என்னுடைய அப்பாவே  இந்த கடவுளை படைத்தது விட்டு அதனிடமே  எனக்கு அது கொடு இது கொடு என்கிறாரே? இது ஒன்றும் அறிவான செயலாக இல்லையே! என பலவாறாக யோசிக்க ஆரம்பித்தார். காலம் செல்ல செல்ல மனதில் சிறிது தெம்பை வர வழைத்து இது பற்றி தன்னுடைய தந்தையிடமே கேட்க முடிவு செய்து அவரிடம் சென்றார்.

"அப்பா.. எனக்கு ஒரு கேள்வி வருகிறது.." என மெல்ல ஆரம்பித்தார். அவருக்கு திருப்திகரமான பதில் கிடைத்ததா?


(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)


Reference :

1. http://blog.britishmuseum.org/tag/ur/
2. Islamic Scriptures (Quran ஸூரத்துல் அன்ஆம்)








2. ஊர் காவலன்



தமிழ், கன்னடம் பேசும் திராவிடர்களும், சமஸ்கிருதம் கொண்ட ஆரியர்களும்  ஆகியவற்றில் இடத்தை குறிக்க "ஊர்" என்கிற சொல்லை பயன்படுத்துகின்றனர். ஆரியர்களின் ஆரம்பம் ஈரானாக இருக்க கூடும் என்பது பலவாறாக நம்மபடுகிற விஷயம் என்பதை பார்த்தோம். இந்த ஈரானுக்கு அருகில் இருந்த ஈராக்தான்  இன்று உலகில் உள்ள பல நாகரீகங்களுக்கு ஆச்சாணி போட்ட இடம், ஏகப்பட்ட தொன்மையான மொழிகளின்  பிறப்பிடமாக  இருக்கலாம். புதிய சொற்களின் பிறப்பிடமாக இருந்திருக்கலாம்.


அதில் இருந்து ஏகப்பட்ட மொழிகள் பிறந்து இருக்கும்.  எனவேதான் இன்றளவும் மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள்  ஈராக்-சிரியா-துருக்கி  சேர்ந்த "மெசபடோமியா-வை  "நாகரீகங்களின் தொட்டில்" என்று அழைகின்றனர். யூப்ரடீஸ் டைகிரீஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதிதான் மெசபடோமியா.



மனிதன் வாழ்வாதாரங்களுக்கு இன்றியமையாதது நீர், ஆறு. எனவே அதன் படுகைகளில்தான் நாகரீகம் வளர்ந்தது.  அதனால்தான் மக்கள் வந்து தங்குவதற்கும், வாழ்வதற்கும், நாகரீகங்கள் உருவாவதற்கும் காரணமாக இருந்தது. இதற்குள்தான் பாபிலோனா நகரம் இருந்தது. அந்த மெசபடோமியாவில் மந்திரம், மாத்ரீகம் போன்றவற்றிற்கு பெயர்போன ஒரு நகரம்தான் "பாபிலோனா" - பண்டைய வாணியல் சாஸ்திரம் பிறந்த இடம்.  மேலும் வரலாற்று சிறப்புமிக்க அராரத் மலைத்தொடர்  யூப்ரடீஸ் ஆறுக்கு அருகே அமைத்துள்ளது. கடல் பிரளயத்திற்கு பிறகு நூஹ் நபியின் கப்பல் தரை தட்டிய இடம்தான் அந்த அராரத் மலைத்தொடர்(ஹூத் மலை). அது என்ன கடல் பிரளயம்?

இந்து-கிருத்தவ-இஸ்லாமிய வேதங்கள் ஒரு மாபெரும் பிரளயத்தை பற்றி பேசுகின்றன. படைத்த இறைவனை வணங்காமல் காலம் சென்ற முன்னோர்களை வணங்கிய குற்றத்தால் இறைவன் கடல் பிரளயத்தை ஏற்படுத்தி அந்த பகுதி மக்களை அடியோடு அழித்தான். அவர்களில் நல்ல சிலரை காப்பாற்றினான், அவர்களில் இருந்து மனித இனம் மீண்டும் தளைத்து என்று கூறுகின்றன. இப்பொழுது நம்ம "ஊர்" கதைக்கு வருவோம்.

அந்த மெசபடோமியாவில் பாபிலோனாவிற்கு அருகே இருந்த ஒரு இடம் "ஊர்"(UR). அதை ஆண்டு வந்த அரசனின் நினைவாக அந்த பெயர் அமைந்தது. இன்றளவில் சரித்திர ஆய்வாளர்கிடையே இந்த "ஊர்" பிரபலம். ஆனால் அதற்க்கு காரணம், இந்த அரசன் இல்லை, பாபிலோனா - ஊர் இடத்தில் சுமார் 4000-5000 வருடத்திற்கு முன்பு ஒரு இளைஞன் பிறந்து வளர்ந்ததால், அந்த "ஊர்"  இன்றளவும் சரித்திர ஆய்வாளர்கிடையே பிரபலம். வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை அவர்தான் நம்முடைய இந்த கட்டுரையின் "ஹீரோ". அவரின் ஆயுதமே பகுத்தறிவுதான், அவருடைய அழகிய வாதங்கள்தான் எதிரிகளை சிதறடித்தன. அவருடைய தியாகங்கள் அவனை மக்களுக்கு இன்றும் படிப்பினை. அவர்  உலகில் மூன்றில் இருவரை வென்றெடுத்தார், இத்தனைக்கும் அவர்  அரசனும் இல்லை, அவரிடத்தில் அரசாங்கமும் இல்லை.

அவர் பெயர் இப்ராஹிம்.




ஆம், பகுத்தறிவு பேசும் பலர் இன்று மக்களை இறைவனிடம் இருந்து தூரமாக்கும் போது, அதை விட அழகிய பகுத்தறிவு பேச்சுக்களால் மக்களை வென்றார். ஆனால் அன்றைய சூழல்அவருக்கு சாதகாமாக இல்லை. நாம் சொல்லும் சொலுக்கு சிலர் மறுப்பு தெரிவித்தாலே நம்மில் பலருக்கு முகம் சுருங்கி போகும் போது, ஒட்டு மொத்த ஊரே ஒரு தனிமனிதனுக்கு எதிராக திரும்பினால் அவர் மனம் எப்படி இருக்கும்?

அவர் தனியாள்தான். ஆனாலும் சிங்கிளாக நின்று உண்மைக்காக அவர்களை எதிர்த்தார். அவருக்கு பேராபத்துக்கள் காத்திருந்தன....


(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)


Reference:

1. http://www.ancient.eu/ur/
2. https://en.wikipedia.org/wiki/Ur
3. https://en.wikipedia.org/wiki/Pur_(Vedic)
4. http://vediccafe.blogspot.com/2012/08/the-sanskrit-connection-uru.html
5. http://wordadayarabic.com/2013/05/02/mother-and-father/
6. https://en.wikipedia.org/wiki/Mesopotamia
7. https://en.wikipedia.org/wiki/Babylon
8. https://en.wikipedia.org/wiki/Babylonia
9. https://en.wikipedia.org/wiki/Abraham_in_Islam




1. இது நம்ம ஊர் கதை


அந்தியூர், ஆம்பூர், இரும்பூர், ஈசலூர், உறையூர் என மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு எதாவது ஒரு ".. ஊர்" என்று பெயரிட்டுக் கொள்கின்றனர். அது என்ன "ஊர்"?  இடத்தை குறிக்க வேறு வார்த்தை இல்லையா? எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதில் பிற மொழி சொற்கள் இருக்கத்தான் செய்யும். மொழியியல் ஆய்வாளர்கள் சொற்களின் மூலம் எது என்று ஆராய்வர்.  தமிழுக்கு பிந்தைய மொழியான கன்னட மொழியிலும் பெங்களூர், மைசூர் என "ஊர்" உள்ளது. இந்தியாவை தாண்டி சிங்கப்பூர், கோலாலம்பூர் என்கிற ஊர்கள் பெயர்கள்  மலாய் மொழியில் இருப்பதையும் கவனித்தால்...

"ஊர்"  என்பது தமிழ் மொழி சொல்தான் என்று குறுகிய வட்டத்துக்குள் நாம் பார்க்க முடியாது, ஏனெனில் தமிழுக்கு அந்நிய மொழியான சமஸ்கிரதம் கூட இடத்தை குறிக்க அல்லது "பூமி" என்பதை குறிக்க "ஊரு" என்று சொல்லுகிறது. "ஊர் என்பது தமிழ் வார்த்தையா? சமஸ்கிருத வார்த்தையா?" என்பது எல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் இவை இரண்டும் இல்லாத வேறு மொழி வார்த்தையாக இருக்கலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.

சமஸ்கிரதம்  ஆரியர்களின் வேத மொழி. ஆரியர்கள் என்பவர்கள் யார்? "ஊரு" எந்த மொழி சொல்லாக இருந்தால் நமக்கென்ன? அதை பற்றி நாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? அதற்க்கு முன்பு இன்னொரு உதாரணத்தையும் பார்த்துவிடுவோம்.

"அம்மா" என்ற தமிழ் சொல்லுக்கு அரபியில் "உம்மா" என்றும் "அப்பா" என்கிற தமிழ் சொல்லுக்கு "பா(BA)" என்று  அரபியில் உள்ளது. நாம் வேண்டுமானால் நீ அரபி, நான் தமிழ், நீ ஹீப்ரு என்று பிரிந்து பிரிந்து சென்றாலும் நம்முடைய ஆதி மூதாதைகள் ஏதாவது ஒரு மூல மொழியைத்தான் பேசியிருக்க வேண்டும். எனவேதான் குறுகிய கண்ணோட்டத்தை விட்டு விட்டு சில ஆயிரக்கணக்கானவருஷத்திற்கு பின்னே செல்வோம்..

சமஸ்கிருதம் போற்றும் ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதற்கு பல வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றில் பிரபலமானது ஈரானில் இருந்து வந்தவர்கள் என்பது ஆகும். ஆரியன்-ஈரான் பெயர் ஒற்றுமையும் ஒரு காரணம். இப்போது நாம் ஏன் ஈரானுக்கு போகிறோம்? அதற்கும் இந்த "ஊர்" என்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்க கூடும்?