இயற்கை மார்க்கம் இஸ்லாம்




தற்போது 700 கோடி பேரை கொண்டுள்ள இந்த பூமி  பல் வேறு நாடுகளையும் அதில் பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் பின்பற்றுவோரை உள்ளடக்கி உள்ளது. பூமியில் வாழும் காலநிலை, இடத்திற்கு ஏற்ற தட்ப வெட்ப நிலைக்கேற்ப மனிதர்களுடைய நிறமும், உணவு பழக வழக்கங்களும், உடைகளும் மாறுவதும் ஆச்சிரியமான ஒன்று அல்ல. மக்கள் அனைவரும் மொழிகளை கொண்டும், நிறங்களை கொண்டும் வேறுபட்டு இருந்தாலும் இவர்கள் அனைவருமே ஒரே ஒரு ஜோடியில் இருந்து தான் படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது அறிவுக்கு புலப்படுகிறது.  

அல்லாஹ் கூறுகின்றான்: மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ( 49:13)

700 கோடி பேர் உள்ள இந்த பூமியில் அநேகருக்கு ஒத்த உருவ அமைப்பும், ஒரே பெயரும் இருந்தால் குழப்பம்தான் மிஞ்சும். அதனாலேயே இன்னாருடைய பேரன் , பேத்தி என்று குடும்பத்தையோ, வாழ்ந்த இடத்தை கொண்டோ இல்லை வேறு சில அடிப்படையில் ஏற்பட்ட கிளைகள்/கோத்திரங்கள் மூலமாக,   ஒருவரை ஒருவர் எளிதாக  பிரித்து அறிகிறோம்.ஒரே ஜோடியில் இருந்து பிறந்த மக்கள் என்றால் அங்கே பல மதங்கள் என்கிற சித்தாந்தத்திற்கு வேலை இல்லை. எனவே நிறம், மொழி, உணவு, குடும்பத்தை அடிப்படையாக கிளைகள், கோத்திரங்கள்  அப்பாற்பட்ட எந்த பிளவுகளையும் நாம் பார்க்க முடியாது. இதை இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:22)

றைவன் எந்த ஒரு மதத்தையும், மக்களிடையே பிளவுகளையும் ஏற்படுத்தவில்லை.  ஒரு சாரார் தமது சமூகத்துடைய விருப்பு வெறுப்புகளுக்கு முரணாக வேறு ஒரு சமூகத்து கருத்துகளை ஏற்கவோ, முக்கியத்துவமோ கொடுத்தால் அது அந்த சமூகத்துக்கு மன வலியை ஏற்படுத்துவதை நாம் பார்க்கிறோம். தனது இனமோ, மதமோ, மொழி பேசுபவர் எண்ணிக்கை குறைந்துவிடும் எனவும் இதனால் மற்றவர்களுக்கு பெருமையும் தமக்கு சிறுமையும் ஏற்படுமோ அச்சமடைந்து போவதையும் பார்க்கிறோம். இதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்:

மனோ இச்சைகளை மார்க்கங்களாக பின்பற்றுவோர் பெரும்பான்மையினராக இருந்தாலும் சரி சிறும்பான்மையினராக இருந்தாலும் சரி இறைவனுடைய பார்வையில் அது பிழையானது என்றால் அதற்கு மேலே அதை முன்மொழிவதோ, அதை நேசிப்பதோ இறைவனை உண்மையாக நேசிப்பவருக்கு அழகல்ல. எந்த ஒரு விஷயத்திலும்  எது சரி எது பிழை என்கிற குழப்பம் ஏற்படலாம் அதற்கு தீர்வு அறிவின் அடிப்படையில் அமைய வேண்டுமே அன்றி என்னுடைய மூதாதை பின்பற்றினார்கள் அதனால் பின்பற்றுகிறோம் என்று சொல்வது மனோஇச்சை என்று குரானிலே இறைவன் சுட்டிக் காட்டுகிறான். மூதாதைகளின் வாழ்கையை கதைகளாகவும், சிறப்புகளையும்  பேசிப் பேசி அவர்களுள் சிலர் சிலருக்கு  கடவுள் ஸ்தானத்தை கொடுத்தும் விட்டனர். முந்தய வேதங்களின் மூலமும், இறுதி வேதம் குரானின் மூலமாகவும் இறைவன் தனது கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களையும், தான் கற்றுத்தராத சடங்குகளையும், செயல்களையும் மனிதர்கள் செய்தால் அதை வன்மையாக கண்டிக்கவே செய்கிறான். 

அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான். (44:8) இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது. (53:23)

இறைவனுடைய கட்டளைகளுக்கு மாற்றமாக மக்கள் நடக்கும் போது அதவே காலப் போக்கில் ஒரு கலாச்சாரமாகவோ, மதமாக ஆகிவிடுகிறது. காலப் போக்கில் மக்கள் தங்களுடைய முன்னோர்களின் வழியை அப்படியே வழி மொழிய வழி மொழிய எதிர்காலத்தில் வரும் சமுதாயத்திற்கு தமது தாய் தந்தையர் செய்யும் நம்பிக்கைகளில் பிடிப்பு ஏற்பட்டு முந்தைய வரலாறுகள் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் போகிறது. 


 ஒவ்வொரு சமுதாயத்தினரும், நாட்டினரும்  தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளினால் பல கொள்கைகளாகவும் கூட்டங்களாகவும் பிரிந்து விட்டிருகின்றனர். அதே போல ஒவ்வொரு சமுதாயமும் தனது கலாச்சாரமே பிறரை கட்டிலும் உயர்வானது என்றும் தனது மொழியே உயர்வானது என்று நினைப்பது சகஜம் என்றாலும் சில சமுதாயம் இப்படிப்பட்ட கொள்கைகளில் பிடிவாதம் காட்டி உயர்வு தாழ்வு மனப்பான்மை  வளர்கிறது, அதற்கு ஏற்றார்போல ஏதாவது ஒரு நொண்டி சாக்குகளை சொல்வதும் வாடிக்கை ஆகிவிட்டது என்றாலும் இந்த நிலைப்பாட்டில் தீவிரம் காட்டும் போது சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டு பிளவுகள் நிரந்தரமாகிறது. 

அல்லாஹ் கூறுகின்றான்: (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (2:213)

மக்களில் பெரும்பான்மையினர் எதை பற்றிய அறிவு அவர்களுக்கு முழுமையாக இல்லையோ அதில் கூட யூகங்களை பின்பற்றுகின்றனர். மனிதர்களுக்கு நல்ல செயலையும் கெட்ட செயலையும் பிரித்து அறிவிக்கும் வழிமுறையை இறைவன் கற்றுக் கொடுத்தான்.  அது மார்க்கம் என்று அறியப்படுகிறது, அதற்கு ஆரம்பம் என்று இல்லை. ஏனென்றால் மனிதன் படைக்கப்பட்டப்போதே அவனுக்கு நன்மை தீமையை அறிவிக்க வழிமுறையையும் இறைவன் அருளிவிட்டான். தன்னுடைய வழிகாட்டுதல்களை வரிசையாக எல்லா சமூகத்திற்கும் ஒவ்வொரு தூதர்கள் மூலம் அருளினான் என்றாலும் ஏற்பவர் ஏற்றனர், மறுத்தவர் அதை பொய்ப்பித்தனர்.  

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். (15:10பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும். (23:44)

இந்த இறைவனின்  கட்டளைகளுக்கு கட்டப்படுதல் ஒவ்வொரு படைப்பிற்கும் கட்டாயம் ஆகும், இதையே இஸ்லாம் என்ற அரபி மொழியில்  நாம் அழைகிறோம். இது மதம் என்று நினைபவர்களுக்கு மதம் ஆகும், மார்க்கம் (வழிமுறை) என்று நினைபவர்களுக்கு மார்க்கம். 

மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். (30:47)

ஆக மனிதர்கள் எத்துனை பிளவுகளாக இருந்தாலும் எத்துனை நிறங்களாகவும், மொழிகள், நாடுகள் என்று பிரிக்கப்பட்டு இருந்தாலும்  படைத்த ஒருவனுக்கே அடிபணிய வேண்டும் என்பது விளங்காமல் போனதால் தான் இருக்கும் குலமே உயர்ந்தது தன்னுடைய கொள்கையே  ஆதியானதாக இருக்க முடியும் என்கிற யூகத்தின் அடிப்படையில் பிரிவுகளை நியாயப்படுத்திகிறான். அதனால் ஒன்று குலம் ஒருவனே தேவன் என்கிற சித்தாந்தம் அடிபட்டு மனிதர்கள் தன்னுடைய மூதாதை, இனம், நாடு என்று குறுகிய வட்டத்திற்குள் சிந்தனையை சுருகிக் கொள்கின்றனர். இவர்களை பற்றி இறைவன் கூறுகிறான்:

அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? .... அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள். (30:9)

பல சமூகத்தை சேர்ந்த இறை மறுப்பாளர்களும் தமக்கு முன் வந்த இறைதூதர்களை இது தங்கள் முன்னோர்கள் வழி பின் பற்றி மறுத்ததை அல்லாஹ் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றான்:

மூஸா(அலை)முடைய சமுதாய மக்கள் கூறினார்கள்: ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள். (28:36)

ஹுதுடைய சமுதாய மக்கள் கூறினார்கள்: (அதற்கு) அவர்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார். (11:53)

நூஹுடைய சமுதாய மக்கள் கூறினார்கள்: அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள். (7:70)

ஸாலிஹ்(அலை)முடைய சமுதாய மக்கள் கூறினார்கள்: அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ 
அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்”  என்று கூறினார்கள். (11:62)

ஷுஐப் உடைய மக்கள் கூறினார்கள்: (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (11:87)


அல்லாஹ் இந்த உலகத்திற்கு ஒவ்வொரு பகுதிக்கும் என 1,24,000 இறைதூதர்களை வெவ்வேறு காலக் கட்டத்திலும் வெவேறு மொழிகளிலும் அனுப்பினான். வரலாறுகளை மறந்து போன மக்கள் எங்களுக்கான தூதர்கள் யார் என்று கேட்கிறார்கள்,  இறைவன் எல்லோருடைய வரலாறுகளையும் சொல்லாமல் குறிப்பிடத்தகுந்தவர்களை பற்றியதை குரானில் அறிவிகின்றான். அதனால் எங்கள் முன்னோருக்கு யாரும் வரவில்லை என்று யாரும் இறைவனை குற்றம் பிடிக்க முடியாது. தகவல் தொடர்புகளாலும், வாகன போக்குவரத்து சுருங்கிப் போன இந்த உலகிற்கு இறைவன் சொல்லிக் கண்பிகிறான்: பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள் என்று.

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள். (40:78)  

இஸ்லாமியர்களும் மூதாதையர்களை பின்பற்றவில்லையா என்கிற கேள்வி எழுவது இயற்கையானதே என்றாலும்  குருட்டுத்தனமாக பின்பற்றுவதில்லை. ஒரு முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த ஒரே காரணத்திற்காக பிள்ளை முஸ்லிம் ஆகிவிடமாடான். அல்லாஹ்வையும், அவன் தூதர்களையும் நம்ப வேண்டிய முறைப்படி நம்பினால் ஒழிய அவர் முஸ்லிம் ஆகிவிட மாட்டார்.

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர். (2:133)

இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது என்று நினைப்பவர்களுக்கு பதிலை இறைவன் இவ்வாறு தருகிறான்: 
“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும். (46:9

நல்ல முடிவு பயபக்தி உடையவர்களுக்கே. குரானிலே அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பார்த்து நீங்கள் இப்ராஹிமுடைய மார்க்கத்தையே பின்பற்றுமாறு கூறுகிறான். அந்த இப்ராஹீம் தனது சமுதாய மக்களிடம் இவ்வாறு பேசியதாக குரான் கூறுகிறது:


அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, 

அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.

(அதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)

(அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.

 அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.

“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”

“நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”

“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”

“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

“மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”  (26:70-84)