12. ஹேய் மனிதா! ஐயம் வைடிங்! - இது இப்லிஸ் ஸ்டைல்


பல்கிஸ் கூறினாள்: "அல்லாஹ் மனிதனை படைக்கிறப்ப வானவர்கள் கேட்டாங்க, " ஏற்கனவே தனிச்சையா முடிவெடுத்து நடக்கும் ஜின் வம்சத்தினர படைச்ச அவுங்க,   பூமியில ரத்தம் சிந்தி குழப்பக் காடாக ஆக்கிடிட்டு இருக்காங்க... இந்த நிலையில அவுங்கள மாதிரியே இன்னொரு இனம் எதுக்கு? நீ சொல்லுறபடி நடக்கவும்,  உன்ன வணங்குறத்துக்குத்தான் நாங்க இருக்கோமே அப்புறம் இந்த மனுஷங்க எதுக்கு?" அப்படீன்னு அல்லாஹ்கிட்டாயே பணிவா கேட்டாங்க".

வானவர் மற்றும் ஜின் இனங்களை விட உயர்வா ஒரு படைப்பை அல்லாஹ் படைக்கிறான்னா அதுல எதாவது காரணம் இருக்கும், அவனுக்கு எல்லாம் தெரியும். அல்லாஹ்வோ, "உங்களுக்கு தெரியாதது எல்லாம் எனக்கு தெரியும்" சொன்னான் ஒரு வானவர்களுக்கும் மனுஷனுக்கும் டெஸ்டும் வச்சு, வானவர்களை தன்னோட வாயாலேயே, "இறைவா! நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” அப்படீன்னு சொல்ல வச்சான்.

மனித, ஜின் தன்னோட கட்டளைகளுக்குஅடிபணிந்து இருக்கணும் நினைக்கிற அல்லாஹ்,  இந்த அகில உலகத்தையே மனித, ஜின் வர்கத்திற்காகத்தான் படைச்சதா அல்லாஹ் சொல்லுறான். அதுதான் அல்லாஹ் மத்த எல்லா படைப்பினங்களை விட நம்ம இரண்டு இனத்துக்கு கொடுத்த கண்ணியம். மேலும் இந்த ஜின் இனத்தை காட்டிலும் மனித இனத்தை இன்னும் ஒரு படி மேலையே வச்சான். அல்லாஹ் பல சோதனைகள தந்து சோதிப்பான், இதுல யார் யாரெல்லாம் வெற்றி அடையுறாங்களோ அவங்களுக்காக பரிசா சொர்கத்தையும் படைச்சு வச்சு இருக்கான்.

ஆதம் (அலை) அவுங்களை  தன்னோட கையினாலேயே படைச்சுட்டு  வானவர்களையும், ஜின் இனத்தை சேர்ந்த இப்லீசையும் ஆதமிற்கு சுஜுது செய்ய சொன்னான். ஆனா இப்லீஸ் மட்டும் மறுத்துட்டான். பல நல்ல அமல்கள் எல்லாம் செஞ்சு உயர்ந்த அந்தஸ்தையும் அன்பையும் அல்லாஹ்கிட்ட வாங்கி இருந்தாலும், மனுஷன அற்பமான களி மண்ணுல இருந்து படைக்கப்பட்டான், என்னைய நெருப்பினால படைச்ச, நான் மனுஷன விட உசத்தி அப்படீன்னு பெருமையினால அல்லாஹ்கிட்டாயே தர்க்கம் செஞ்சான். அதுக்கு தண்டனையா கடுப்பான அல்லாஹ் அவனை வெளிய அனுபிட்டான். அப்பறமும் இப்லீஸ் விடவில்லை,  தன்னுடைய இந்த இழி நிலைக்கு காரணமான மனிதனை அவனோட உயர் நிலையில இருந்து தள்ளவும், தன்னோட முடிவு சரி அத நிருபிக்க அல்லாஹ்கிட்டயே சான்ஸ் கேட்டான். பாருங்க அவன் குடுத்த ஸ்டேட்மண்ட...

“நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான். 
“பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்;  ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்து வோர்களாகக் காண மாட்டாய்” (என்றும் கூறினான்). 7:16 -17.

எல்லா ஜின்களும் கெட்டது இல்ல.. ஆனா ஜின்கள்ள யார் யார் இப்லீஸை தலைவரா எடுத்துகிட்டு அல்லாஹ்வை மறுத்து நடக்கறான்களோ அவுங்க எல்லாம்தான்  ஷைத்தான்கள். அவுங்க மனுஷங்களை ஏமாத்தி வழிகெடுப்பதுல இருந்து தப்பிக்க அல்லாஹ் ஏகப்பட்ட ஆலோசனைகளை குரான்ல சொல்லுறான். கேளுங்க சொல்றேன்:
“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா? “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.  “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா? (36:60-62)
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)

ஆக நம்மள வழி கெடுக்க எனென்ன உபாயம் பன்ன முடியுமோ அவ்வளவும் இப்லீஸ் பன்னுவான். நல்ல விஷயத்த வீனானதகவும், வீணானத நல்ல விஷயமாகவும் காட்டுவான். அவனோட வலையில விழுந்திடக் கூடாது. இன்னும் அல்லாஹ் அவன பத்தி எச்சரிக்க சொல்லி நபிகளாருக்கும் கட்டளைகளை ஏவி இருக்கான்.
(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான். (17:53)

அல்லாஹ் குரான்ல நமக்கு குடுத்த எச்சரிக்கைய மீறி நடக்கும் போது, அது நமக்கு ஆபத்தா முடிஞ்சுடும். நம்மள அழிகிறதுக்கு கங்கணம் கட்டிக்கிட்டு அல்லாஹ்வோட அனுமதியோட என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவும் செய்யறான். நாம ஜின் இனத்தை பாக்க முடியாது ஆனா அவன் நம்மள பாக்க முடியும். ஏன் நம்ம மனசுல எதாவது ஐடியாவ கூட அவன் போட முடியும். அல்லாஹ்தான் நம்மளோட எதிரிகள கொண்டு நம்மளையே சோதிக்கிற அல்லாஹ் நமக்கு அவன்கிட்ட இருந்து தப்பிக்க உபாயமும் சொல்லி காட்டுறான்:
ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்)பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள். (22:53)

நம்ம மனசுல வர்ற சிந்தனை எல்லாம் நம்மளோடதுன்னு நாம நினக்கிறோம் ஆனா அது அப்படி இல்ல..  அதுல இப்லீசோட யோசனையும் இருக்கு. அதனாலதான் அல்லாஹ்வே ஷைத்தான்கிட்ட இருந்து தன்னிடம் பாதுகாப்பு கேட்க 114:4 வசனத்துல சொல்லியும் தர்றான்.

ஆக, தொழுகை  இது எல்லாம் அல்லாஹ் நம்மள காப்பாத்திக்க அல்லாஹ் கொடுத்த ஆயுதங்கள்,  நம்மள அல்லாஹ்கிட்ட கொண்டுபோற கொடுத்த மொபைல் கனைக்சன்கள். தொழுவுறது மூலமா அல்லாஹ்வோட கட்டளைகளுக்கு அடிபணிவது மூலமா  நாம அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட அடியான்கள் அப்படீங்கறத செயல்வடிவமா காட்டிகிட்டே இருக்கோம்.  ஒரு நாளைக்கு 5 தடவ ரீசார்ஜ் செஞ்சு அல்லாஹ்வுக்கும் நமக்கும் இருக்குற கனைக்க்ஷன ஆக்டிவா வச்சு இருக்கோம்னு அர்த்தம். ஆக இத செய்ய ஆரம்பிதுவிட்டோமுன்னா எல்லாமே லேசாத்தான் தெரியும்.

இதுவரை தொழதவங்களுக்கு கஷ்டமா ஷைத்தான் காட்டுறான். ஆர்வம் இல்லாத மாதிரியும், சோம்பல் இருக்கற மாதிரியும், இத விட முக்கியமா வேற காரியம் இருக்குற மாதிரியும் அல்லது அல்லாஹ், ரசூல், இஸ்லாம் எல்லாம் ஒரு பயனற்ற, சுவையற்ற விஷயமா அவன் காட்டுறான். ஆக அவன் அல்லாஹ்கிட்ட விட்ட சவால் படி அவன் நம்மள வழிதவற செய்யறான்.. அல்லாஹ்வும் இதபத்தி குரான்லையும், முந்தய வேதங்களையும் எச்சரிப்பு குடுத்திட்டான்... அதனால முழிச்சுக்க வேண்டியது நம்ம பொறுப்பு..." என்று சொல்லி புன்னகைத்தாள் பல்கிஸ்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)