20. நான் ஜும்மா போகத்துக்கு யார் காரணம் பாஸ். நானா? அல்லாஹ்வா?


மணி 12:30

சுலைமானும் சுல்தான் பாயும் பேசிக் கொண்டிருந்தனர்.  "நம்ம மஹல்லா, சொந்தக்காரங்க, குடும்பத்தினர், அப்படீன்னு நம்ம உம்மத் மேல கவலை படனும், அவங்களுக்கு தாவா செஞ்சே ஆகவேண்டும் அப்படி பண்ணாதான். ஜெப் மாதிரி ஆளுங்க உருவாகறத அல்லாஹ் நாடினால் தடுக்க முடியும்." என்று சுலைமான் சொன்னான்:

என்ன சொன்ன..?  அல்லாஹ் நாடினால் ஜெப் மாதிரி ஆளுங்க உருவாகறத தடுக்க முடியுமா? அப்படீன்னா அல்லாஹ் நாடாததுனாலதானே ஜெப் அப்பா ஒரு கிருஸ்தவ பொண்ண கட்டிகிட்டான். ஜெப் இஸ்லாத பத்தி அறியாம இருக்கான்.  அல்லாஹ் நாடாததற்க்கு  ஜெப் அப்பாவோ, ஜெப்பொ எப்படி பொறுபேற்க முடியும்? இல்லை நான் தொழாமல் இருப்பதற்கும் காரணம் நானில்லையே.." என்று இடைமறித்தான் சுல்தான்.

"டேய் சுல்தான்.. நல்லா கவனி..அல்லாஹ் நாடினாதான் யாரும் நேர்வழி பெற முடியும்,  அதே சமயம் மனுஷங்க நேர்வழி பெற அவுங்க முயற்சி செய்யனும். மனுஷங்க அவன் கட்டளைகளுக்கு செவி சாய்க்க முக்கியத்துவம் தரலைன்னா இல்லாட்டி இறைவனை பத்தி தெரிஞ்சுக்க,  விரும்பாத போது மனுஷங்க செயலுக்கு அல்லாஹ் எப்படி பொறுப்பாவான்?

"எனக்கு புரியற மாதிரி இருக்கு.. ஆனா புரியல..சுலைமான்".

"சரி.. நான் உன்னோட  பாஸ் அப்படீன்னு வச்சுக்கோ, உனக்கு நான் இந்த வருஷம் புரோமொஷனும் ஹைக்கும் கொடுக்க விரும்பறேன். ஆனா நீ நான் சொல்லற படியும் கேக்கல.. வேலையும் மட்டமா செய்யற.. இப்ப உனக்கு  புரோமொஷனும் ஹைக்கும் கிடைக்காததுக்கு யார் காரணம்?

"ஹ்ம்ம்.. நான்தான்"

"கரைகட் சுல்தான்.. நல்லா கவனி குரான்ல 4:40ல ஒரு வசனத்துல அல்லாஹ் சொல்றான்: " நிச்சயமாக   அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப் பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்".

ஆக யாருக்கும் அல்லாஹ் அநியாயம் அணு அளவு கூட செய்யமாட்டான் அப்படீங்கறத தெளிவா புரிஞ்சுகிட்டு  9:19 வசனத்துக்கு வா. அநியாயக்காரர்களை நேர்வழியில் செலுத்தமாட்டான் போன்ற பல வசனங்கள் குரான்ல இருக்கு. ஆக பிராப்ளம் இங்க மனுஷங்கதான், அல்லாஹ் இல்லை.

"ஆனா சுலைமான்..  நானாக நல்லா வேலைசெய்யலன்னா  உன்னால என்னைய நல்லா வேலை செய்ய வைக்க முடியாது, ஆனா அல்லாஹ் நாடினால் என்னைய அவன் அவனாகவே நல்லவனா, சொர்கத்துக்கு போகக் கூடியவனா மாத்திட முடியுமே... "

"அல்லாஹ் நாடினா எல்லோரையும் அப்படி பண்ண முடியும்தான், அவன் அப்படி விரும்பல, அவன நீ இப்படித்தான் செய்யனும்னு நாம நிர்பந்த படுத்த முடியாது....நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? +2 எக்சாமுல கவர்மண்டே வந்து ஆளனுப்பி எழுதற எல்லாத்துக்கும் பிட்டு கொடுத்து பாசாக வச்சு, எல்லாருக்கும் கவர்மண்ட் ஜாபு தர்ற மாதிரி இருக்கு.

"ஓகே சுலைமான் பாய்.. அட்லீஸ்ட்.. எல்லோரையும் முஸ்லீமாக ஆக்கி இருக்கலாமே..எல்லாருக்கும் சுவர்க்கம் போற வாய்ப்பு பிரகாசமா இருக்குமுல்ல.."

"அப்படி எல்லாம் இல்ல.. ஒவ்வொருத்தருக்கு அல்லாஹ் ஒவ்வொரு மாதிரி டெஸ்டு தர்றான். ஆரம்பத்துல எல்லோரும் ஒரு கடவுள்தானே வழிபட்டாங்க... போக போக அவங்க தங்களோட முன்னோர்கள் ஞாபகமா சிலைகள் செஞ்சு, அப்படியே கால போக்குல அவைகள அல்லாஹ் ஸ்தானத்தில வச்சு கடைசில புது புது மதங்கள உருவாக்கிகிட்டாங்க.. அவங்களுக்கு புத்தி சொல்ல வந்த பல நபிமார்களையும் புறக்கணிச்சாங்க.. இப்ப இருக்கறவங்க கூட எங்க முன்னோர்கள் எதுல இருந்தாங்களோ அதுலதான் நாங்களும் இருப்போமுன்னு சொல்றாங்க.. சிந்திச்சு பாக்க வேண்டியது அவைகளோட பொறுப்பு இல்லையா?"

"கரக்டுதான்.. முஸ்லிம் அம்மா அப்பாவுக்கு பிறந்தவங்களுக்கு சொர்கத்துக்கு போற சான்ஸு அதிகம்ன்னு நினைக்குறேன் சுலைமான்"

"முஸ்லிம் அம்மா அப்பாவுக்கு பிறந்தா கண்டிப்பா சொர்கம்ன்னு அல்லாஹ் எங்கையும் கியாரண்டி கொடுக்கலயே.. அல்லாஹ்வோட இடத்துல இன்னொருத்தர வச்சா அதாவது ஷிர்க் செஞ்சா, வட்டி வாங்கினா நிரந்தர நரகமுன்னு குரான் 2:275 ல அல்லாஹ் சொல்றான்.

ஆனா எத்தனையோ பேரு தர்காவுல போய் அவ்வலியா கால்ல விழறோம், அவருகிட்ட அத கொடு, இத கொடுன்னு கேக்குறோம், அவருக்கு சந்தன கூடு எடுக்குறோம், அவருக்காக பாத்திஹா ஓதுறோம். இன்னும் லிட்டு போட்டோமுன்னா எக்க சக்கம் வரும். உயிர் போற நேரத்துல ஹராம் கூட ஹலால் ஆகும், ஆனா நாம அறியமையில வட்டி வாங்கறோம், திங்கறோம் அத பத்தி பயபடறதே இல்லை.. அது இல்லாம இருக்க முடியுமா அப்படீன்னு சப்போர்ட் வேற பண்ணறோம். இது போதாதா நாம நிரந்தரமா நரகத்துல இருக்கறதுக்கு?

"அப்ப கண்டிப்பா யாரவது முஸ்லிமா இருந்துகிட்டே இஸ்லாத்தை புறக்கணிச்சா, இல்ல இஸ்லாம் இல்லாத வேற ஒன்னுல இருந்தா அதுக்கு பொறுப்பு அவந்தான்னு சொல்லுற"

"கண்டிப்பா.. தெரியாம தப்பு பண்ணி,யாராக இருந்தாலும் அவுங்க தங்களோட தப்புக்கு பீல் பண்ணி திருத்திகிட்டு மண்ணிப்பு கேட்டா அல்லாஹ் மண்ணிச்சடறான்..
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்கவேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.(.39:53.)

நமக்கு அதிகமா கிருபை செய்யறதுக்காகவே ரமலான் மாதத்தையும் தந்து இருக்கான்.. ஆனா நாம்தான் அவன் சொல்ற எதையும் காதுல வாங்கறது இல்ல.. நம்ம வேளையிலேயே பிஸியாவே இருக்கோம்."

"அப்ப அல்லாஹ்வோட மண்ணிப்பு பக்கத்துலையே இருக்குங்கற.. அதே சமயம் டெஸ்டு இருந்துகிட்டே இருக்கும்கற.."

"ஆமா சுல்தான் பாய்..  உன்னைய அல்லாஹ்வே தொழுகைக்கு கூட்டிட்டு போயி தோழ வச்சு, உனக்கு வர்ற பணக்கஷ்டதுக்கு பிரீயாவே காசு தந்து, உனக்கு அவனே வேலை பாத்து, உன்னோட புள்ளங்கள நல்ல படியா பாத்துகிட்டு, கொஞ்சமும் கஷ்டபடாம வாழ வச்சு, நல்ல படியா அவனே கலிமா சொல்லி சாகவச்சு சுவர்க்கம் குடுகனும்கற.. தம்பி அப்படி நடந்தா அவனுக்கு நீதான் எஜமான், அவன் உனக்கு அடிமை. அப்படி செய்ய வேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை. அப்படி சில பேருக்கு மட்டும் செஞ்சானா அது பாரபட்சம் ஆகும்.  அல்லாஹ் நிச்சயமாக  யாருக்கும் ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; அதேசமயம்   அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்

ஆளானப்பட்ட நம்ம இப்ராஹிம் நபிக்கே எவ்வளவு சோதனைகள் அல்லாஹ் கொடுத்தான் தெரியுமா? அவரு ஒவ்வொன்னுலையும் பாஸ் பண்ணாரு... நபிகள் நாயகத்துக்கு வந்த சோதனைகள் நமக்கு வந்தா நம்மளால தாங்க முடியாது.. அல்லாஹ் யாரையும்அவுங்க சக்திக்கு மீறி சோதிக்கறது இல்லை, நாமதான் பல விஷயங்கள்ல தப்புன்னே தெரிஞ்சாலும் விடறது இல்ல.. பிடிவாதம் பிடிச்சு நஷ்டமாக போறோம்.."

"அல்லாஹு அக்பர்.  இன்ஷா அல்லாஹ் இனி நான் என்னுடைய இறைவனுக்கு கட்டுப்படுவேன், அவனுக்கு கட்டுப்படாமல் இருக்க எனக்கு என்ன வந்தது? " என்றான் சுல்தான் கொஞ்சம் உணர்ச்சி மேலிட"

"அல்ஹம்துலில்லாஹ்.."  என்று உரக்க சொன்னான் சுலைமான்.

"சுலைமான் பாய்.. இன்ஷா அல்லாஹ் நாளையில இருந்து நான் நோன்பு வைப்பேன்"

"அட மக்கா.. நாளைக்கு இன்ஷா அல்லாஹ் பெருநாள்டா.. ரமலான் நோன்பு ஏற்கனேவே முடிஞ்சு போயிடுச்சு.."

"அஸ்தவ்Fருல்லாஹ்.. அல்லாஹ் என்னைய மன்னிக்கட்டும். ச்சே இப்படி முழு ரம்ஜானை மிஸ் பண்ணிட்டேனே சுலைமான் பாய்"

"கவலை படாத  சுல்தான்.. இன்னைக்கு பிறை தெரியாட்டி இன்னொரு நாள் எக்ஸ்ட்ரா நோன்பு கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ். சரி ஜும்மாவுக்கு நேரமாச்சு..கிளம்பு."

"நீ கிளம்பு..  நான் ஜும்மாவுக்கு கட்டடிக்குற நம்ம சலாவுதீனை கூடீட்டு வறேன்.."

"ஓகே அஸ்ஸலாமு அலைக்கும்" என்றவாறு விடை பெற்றான் சுலைமான்.

.............................

"சலாவுதீன்.. வாடா ஜும்மாவுக்கு  நேரமாச்சு...லேட்டா போனா நன்மைகள் குறைஞ்சு போயிடும் "

"டேய் சுல்தான்..கடைசில..  நீயுமாடா..? என்று அப்பாவியாய் கேட்டான் சலாவுதீன்.

( மெல்ல புன்னகைத்தவாறு மனதுக்குள் சொல்லிக் கொண்டான் "இன்ஷா அல்லாஹ்")

(சுல்தானுக்கு கடைசி நோன்பு கிடைத்ததா?  இன்ஷா அல்லாஹ் தொடரும்)