அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!
திருநெல்வேலி
மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300
குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம்
மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி,
ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, 'இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை
பற்றிக்கொண்டது பரபரப்பு!
அப்போது
மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி.
'சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’
எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக
மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும்
மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும்
இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய
மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். 'மீண்டும் இந்து
மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய்.
ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத்
தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!
இப்போதும்
அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு 'மீனாட்சிபுரம்’
என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர்.
பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு
இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை
உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!
மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?
67
வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த
மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்...
''நாங்க
ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு
கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள்
மட்டுமே. 'ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு
எடுத்துட்டாங்களே’னு பரபரப்பா யிருச்சு. 'ஏன் மாறுனீங்க, வளைகுடாவில்
இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க. நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு
மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை.
நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான்
கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி
உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு
தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை;
சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ
குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா,
எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. 'ஏன் இப்படி?’னு
எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட
வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு
உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான்
மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!'' - தோள்
துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.
''நாமதான்
நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் 'பள்ளப் பய,
அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு
நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு
எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் 'இந்து மதத்தின்
'பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம்
மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம்.
'மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. 'மதம் மாறி என்னத்தைக்
கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற
உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை
கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்... ஆனா
'ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, 'வாங்க பாய்... உக்காருங்க’னு சொல்றான்.
மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என்
சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம்
தெரியாது. பார்த்தீங்கன்னா... எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா
இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை
இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும்
உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!'' - அப்போது
எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில்
வெளிப்படுத்துகிறார் உமர்.
மீனாட்சிபுரம்
மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல
கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும்
காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில்
கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை
அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள,
காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப்
பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச்
சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட
மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.
மீனாட்சிபுரத்தில்
பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும்,
ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது!
அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.
''அப்போ
தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து
பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ, பெரிய
பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, 'நீங்க
முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு
சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை
'யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப்
பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம்
மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம்
கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து
தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே
மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு
போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும்
அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். 'தாழ்த்தப்பட்டவன் இந்த
வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான்
உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான்
மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத்
தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய்
பதிவு பண்ணோம். அவங்க 'கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில்
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க...
அவ்வளவுதான்!''
தலித்களாக
இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை
அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை,
அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து
மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது.
1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என
மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத்
திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை
இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.
''நான்
மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்... ரெண்டு பேரும்
சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி
அவங்களா விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு,
ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான்.
சில வருஷம் முன்னாடி, 'நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன்.
அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. 'உன்னை
ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா,
இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம்
பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி
திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு
சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக
இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான
போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில்,
தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா
மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல
தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம்
உணர்ந்த நான், 'ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு
மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத்
திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம்
மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!'' என்கிறார் ஆறுமுகச் சாமி.
மீனாட்சிபுரம்
கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி
விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை
மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட
பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.
'பட்டியல்
சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம்
மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு
பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக
அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம்
அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!