16. இனிக்கும் தேனும், இனிக்காத இஸ்லாமும். எங்கே மனசு? - 1


(சகோதரி ருக்கையா "இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்கள்" என்கிற தலைப்பில்  தன்னுடைய சூடான பேச்சைஆரம்பித்தாள்)

"அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே..  நாம எல்லோரும் ஒவ்வொரு வேலையில பிஸியா இருந்தாலும் எல்லாத்தையும் தள்ளி வச்சுட்டு வந்துருக்க காரணம் அல்லாஹ்தான். படைச்ச அவன பத்தின சிந்தனைதான் நம்மள இங்கே ஒன்னு சேர்த்து இருக்கு. இந்த வாய்ப்பு குடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி ஆரம்பிப்போம். அவன் நாடியவர்களை கண்ணிய படுத்துகிறான். சுவனத்தை தருவதாக வாக்களித்து உள்ளான். அல்லாஹ் உண்மையானவன், அவன் வாக்குறுதி மீறமாட்டான்.

நிச்சயமாக மனிதர்களில் படைத்த அல்லாஹ்வை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ புறக்கணித்து தன்னுடைய மனோ இச்சையை அல்லாஹ்வாகி கொண்டவர் இருகின்றனர். அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் மற்றும் ரசூல் தீர்மானித்ததாக இல்லாமல் அவர்களுடைய சொந்த விருப்பு படியே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் அதிலேயே இருக்குமாறு விட்டுவிடுகிறான்.

நான் அல்லாஹ்வை மறுத்த காபிர்களை பற்றி சொல்லவில்லை.. மாறாக கலிமா சொன்ன முஸ்லிம்களையும், முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்து தன்னை முஸ்லிமாக அடையாளப் படுத்திக் கொள்ற லேபில் முஸ்லிம் பத்தி அதாவது முஸ்லிம் பெயர் தாங்கிகளை பற்றி பேசபோகிறேன்.
அல்லாஹ் கூறுகிறான்: ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (63:9. )

ஆக நம்மள்ள யாராவது உலகத்துல மூழ்கி அல்லாஹ்வ மறந்து போனங்களோ அவங்கள அல்லாஹ்வும் மறந்திடுறான். தன்னுடைய முடிவ மாத்திகிட்டு அல்லாஹ்வை யாரு அஞ்சி கொள்ளுறாங்களோ அவங்களை கண்ணியப் படுத்துறான்.

நம்மள்ள சிலர் கூட நினைக்கலாம் எவ்வளவோ வேலைகள் வெளியில இருக்கு, இந்த நேரத்துல கூட நாலு காசு பார்க்க முடியும், விஞ்ஞான அதிசயங்கள் எல்லாம் இருக்கு அத எல்லாம் படிச்சா எங்கயோ போயிடலாம், சினிமா, கிரிக்கட் அப்படீன்னு எவ்வளவோ பொழுதுபோக்கான விஷயங்கள் இருக்கு அதுல நேரத்த செலவிட்டா மனசுக்கு சந்தோஷமாவது கிடைக்கும் அத விட்டுட்டு இங்க வந்து எப்படி இஸ்லாம், அல்லாஹ், ரசூல், குரான், ஹதீஸ், நோன்பு பத்தி எல்லாம் படிக்கிறது? பயான் கேக்குறது? இன்னும் இதெல்லாம் இந்த நவீன உலகத்துக்கு இன்னுமும் அவசியம்தானா? அப்படீன்னு பல வகையில நினைக்கலாம்.

வாஸ்தவம்தான்.  நாம எல்லாரும் பணத்தோட அருமைய விளங்கி வச்சு இருக்கோம், விஞ்ஞான வளர்ச்சியோட முக்கியதுவத்த தெரிஞ்சு வச்சு இருக்கோம், ஹாப்பி கெடைக்குமுன்னா அதுக்காக ஆயிரக் கணக்கில் செலவழிக்க தயாரா இருக்கோம், அல்லாஹ் ரசூலை பத்தி விளங்கி கிட்டோமுன்னா இந்த சந்தேகம் வராது.அல்லாஹ் நமக்கு செய்த பேருபகாரத்தை பற்றி அறிந்து கொண்டால் மனங்கள் அல்லாஹ்வின் அன்பால் மூழ்கிவிடும். இதயங்கள் லேசாகிவிடும். நிம்மதியை தேடி அலையும் கூட்டங்களே.. நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூர்வதால் மட்டுமே உள்ளங்கள் அமைதி பெரும்.


* நீங்கள் விரும்பும் ஆணோ, அல்லது பெண்ணோதான் மகிழ்ச்சி என்றால் எத்தனையோ காதல் திருமணங்கள் விவாகரத்திலும், கொலையிலும் முடிவது ஏன்?

* உங்களது பிள்ளைகள்தான் மகிழ்ச்சி என்று நினைத்தால் அறிந்து கொள்ளுங்கள் பிள்ளைகளால் உதாசீனப்படுத்தபட்டோ, கருத்து வேறுபாடால் நிம்மதி இழந்து  இருபது இல்லையே  ஏன்?

* நீங்கள் பணம்தான் மகிழ்ச்சி என்று நினைத்தால் அறிந்து கொள்ளுங்கள் பணக்காரன் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது இல்லையே ..ஏன்?

* கல்விதான் மகிழ்ச்சி அதுவே அறிவு தரும் என்றால் படித்த வர்கத்தினர் இடையே மூடப் பழக்கங்கள் ஏன் குறையவில்லை? பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனபாங்கு இல்லாமல் அதிகம் தற்கொலை செய்யும் சமுதாயமாக இருப்பது ஏன்?

* உங்களுடைய வேலை மகிழ்ச்சியும், கண்ணியமும் தரும் என்றால் மெத்த படித்தவர்களிலும்,வேலை பழுவினால் உடல் நலம் கெட்டு அதிகமாக மருந்துகளை வாங்குவது ஏன்? குடியிலும்,  கேளிக்கையிலும் அதிகமாக அகபடுவது ஏன்? இது எந்தவகை கண்ணியமான வாழ்க்கை?

* உயர் பதவிகள் மகிழ்ச்சி தரும் என்றால், அந்த இடங்களில்  கொலையும், கொள்ளையும், லஞ்ச லாவண்யங்கள் சர்வ சாதரணமாக  நிகழ்வது ஏன்? வஞ்சகமும், துரோகமும் கட்டவிழ்ந்து இருபது ஏன்?

* மனது சொல்படி நடப்பதுதான் மகிழ்ச்சி என்றால், மன நோய் மருத்துவ மணைகளில் கூட்டம் அலை மோதுவதை அந்த மனசு ஏன் தடுக்கவில்லை?   அநேகர்களின் பாலியல்  குற்றங்களை அதை செய்வதற்கு முன்னரே ஏன் தடுக்கவில்லை?  டாஸ்மாக் கடைகளை நோக்கி செல்ல வைப்பது மனசு உயர்ந்ததா?

நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள் உங்களை பெற்ற பிள்ளைக்கு என்ன உணவு தர வேண்டும் என்பதை நீங்கள் எவ்வாறு அறிவீர்களோ, அது போலவே மனித- ஜின் இனத்திற்கு எது நல்லது? எது கேட்டது என்பதை நம்மை படைத்த அல்லாஹ் நன்கு அறிவான்.

அவனுடைய நன்மாராயங்கள் நம்முடைய நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அவனுடைய எச்சரிக்கைகள் நம்முடைய நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அவன் வணக்கத்தை கடமையாக்கி இருப்பதும் நம்முடைய நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை. அவனுடைய கட்டளைகளுக்கு அடிபணிந்து ஹலால்-ஹராம் படி வாழ்கையை அமைத்துக் கொண்டால் உலகத்தில் குழப்பங்கள் இருக்காது. எனவே அவனுடைய கட்டளைகளும் நம்முடைய நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் இல்லை.

நாம் அவனை வணங்குவதால் அவனுடைய கண்ணியம் உயர்வது இல்லை, நாம் அவனை புறக்கணிப்பதால் அவனுடைய கண்ணியம் குறைந்து விடுவதும் இல்லை. அவனுக்கு நம்முடைய வணக்க வழிபாடுகளுடைய தேவை இல்லை, எனினும்  நம்முடைய நம்முடைய  நன்மைக்காகவே அன்றி வேறு எதற்கும் அதை கடமையாக்க வில்லை. நிச்சயமாக இறைவன் ஞானம் மிக்கவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன். தக்க காரணம் இன்றி எதையும் அவன் செய்வது இல்லை. மார்க்கத்தின் சிறப்புகளை, முக்கியதுவத்தை தெரிந்து கொள்ளுங்கள், புறக்கணிக்கும் அறியாமை சமூகத்தில் ஒருவராக ஆகிவிடாதீர்கள்.


யார் யார் எல்லாம் முஸ்லிமாக இருந்து கொண்டே யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அல்லாஹ் கொடுத்த மார்கத்தையும் கேலியாக, கிண்டலாக கருதுகிறார்களோ அதை எல்லாம் அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.  அவர்களை பற்றி குரானின் ஆரம்ப அத்தியாயமான சூரதுல் பகராவிலேயே எச்சரித்துவிட்டான்.

மூமீன்களை பற்றி (2:3-5) என மூன்று  வசனங்களையும், காபிர்களை பற்றி  (2:6,7) என இரண்டு வசனங்களையும் கொடுத்த அல்லாஹ் இரண்டும் இல்லாத மக்களை நயவஞ்சகர்கள் என்று என்று அடையாளப்படுத்தி (2:8-20) என 13 வசனங்கள் கொடுத்துள்ளான். நம்மை அல்லாஹ் முதல் கூட்டத்தில் மட்டுமே வைக்க பிராத்தனை செய்வோம்.


(இன்ஷா அல்லாஹ் ருகையா தொடருவாள்)