21. ஈத் முபாரக் !!

அல்லாஹு அக்பருல்லாஹு அக்பருல்லாஹு அக்பர்.
லா இலாஹா இல்லல்லாஹ் அல்லாஹு அக்பருல்லாஹு
அக்பரு-வலில்லாஹில் ஹம்த்

என தக்பீர் காதை பிளந்து கொண்டு இருந்தது அதற்க்கு

அல்லாஹ் மிக பெரியவன், அல்லாஹ் மிக பெரியவன், அல்லாஹ் மிக  பெரியவன்,  அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ் மிக பெரியவன், அல்லாஹ் மிக பெரியவன், எல்லா புகழும் அவனுக்கே என்று அர்த்தம்.

குல்துமின் வீட்டில் எல்லோரும் அறக்க பறக்க பள்ளி வாசல் செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தனர். குல்தும் நாஷ்டா வைக்க கொஞ்சம் லேட் பண்ணிவிட்டாள். குல்துமின் தம்பி முஸ்தபா அவளை அவசரப் படுத்தினான்.

"யக்கா.. லேட் ஆகிடும், சீக்கிரம்.."

"துரை எங்க போகணுமுன்னு இப்படி அவசரப்ப்படுத்துது?" என்றாள் நக்கலாக..

"பள்ளிவாசலுக்குதான்.."

"ஒஹ்.. அய்  சி." என்றாள் குல்தும்.

"டியர் தம்பி.. இந்த ரமலான் மாசம் நோன்பு வச்சவுங்களுக்கு அல்லாஹ் இன்னைக்கு கூலி தர்ற நாள்.. நீ ஏண்டா அலடிக்கற. ஹ ஹாஹ்.."என்று சிரித்தாள் குல்தும்.

"அம்மா.. பாருங்கம்மா இவள...." என்று சினுங்கினான் முஸ்தபா.

"ஏய்.. குல்தும்.. விடுடி.. பெருநாளுக்குதான் அவன் அந்த பக்கமே போறான்.. நீ அதையும் கெடுத்திடாத.." என்று உள்ளே இருந்து அதட்டினாள் பரீதா..

(இந்த உரையாடல்களை கேட்டுக் கொண்டு இருந்த சுல்தான் பாயிக்கோ மனதில்  "அஸ்தவ்Fருல்லாஹ்,  என்னாலையும் ஒரு நோன்பு கூட வைக்க முடியலையே.. நானே நோன்பாளிக்கு  கூலி தருவேன்னு அல்லாஹ் சொல்லி இருக்கும் போது அவனிடம் இருந்து பெறுவதற்கு நாம எதுவும் செய்யலியே என்று கண்களில் கலக்கம் மேலிட்டுக் கொண்டு இருந்தது.)

சுலைமான் தனது குடும்பத்து ஆண்களுடன் ஈத் பெருநாளுக்காக பள்ளிவாசல் வந்தடைந்தான். பள்ளிவாசலுக்குள் இடம் இல்லை. பள்ளிவாசல் மொட்டை மாடியில் குழந்தைகள் புது துணிமணிகளில் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டிருந்தனர்.  எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்.

எங்கே பார்த்தாலும் கூட்டம் கூட்டம். வெளியே சாலைகளை பிளாக் செய்து விரிப்புகளை விரித்து இருந்தனர். பெருநாள் தொழுகையை தொழுதனர். பின்னர் இமாம் தனது "குத்பாவை" ஆரம்பித்தார்:

"எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே.. எத்தனையோ பயான்களை, பேச்சுக்களை நாம் கேட்கிறோம் அது நம் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை. ஏற்படுத்தினாலும் வீட்டிற்கு சென்றவுடன் அவ்வளவுதான் மறந்தும் விடுகிறோம். ஆனால் சில நேரங்களில் சிலருடைய வார்த்தைகள் நம்மை கொஞ்சம் உளுக்கித்தான் விடுகிறது. ஆகவே நமது மணங்களை விளங்கி கொள்வதற்காக விசாலமாக வைப்போம், அல்லாஹ் போதுமானவன்.

நாம் அல்லாஹ்வின் கட்டளைகளை இந்த மாதம் நம்மால் முடிந்தவரை நிறைவேற்றினோம், மனிதன் என்கிற வகையில் அதில்குற்றம் குறைகள் வரத்தான் செய்யும், அல்லாஹ் மிக்க மண்ணிக்கிறவன் ஏனென்றால் நாம் பலவீனர்கள் என்பதை அல்லாஹ் அறிவான், நம்மை பலப்படுத்திக் கொள்ள இறையச்சம் பெரிதும் உதவும், ஆகவேதான் அல்லாஹ் நமக்கு நோன்பை பரிசாகஅளித்து உள்ளான்.

நீங்கள் புதிதாக வேலைக்கு போகும் பொது உங்களுக்கு டிரைனிங் கொடுக்கப்படும், பிறகுதான் உங்களுக்கு வேளையில் அமர செய்வார்கள். உதாரனமாக நீங்கள் காவல்துறையில் என்றால் உங்களுக்கு வேகமாக ஓடுவது, உயரம் தாண்டுவது, துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது?  எப்படி எதிரியிடம் சண்டை போடுவது என்று பல் விதமான பயிற்சிகள் தரப்படும். பலவித மாக்-அப்கள் நடக்கும், அதன் பின்னரே உங்களை நிஜ எதிரிகளை கையாள்வதற்காக போஸ்டிங்கில் அமர்த்துவார்கள்.

அது போலவே மனிதர்களின் மீது கருணை கொண்ட அல்லாஹ் அவனை உலக வாழ்வில் எளிதாக வெற்றி பெற தந்து இருக்கும் ஒரு மாத டிரைனிங்தான் இந்த ரமலான். பொய் சொல்லுவதில் இருந்தும், புறம் பேசுவதில் இருந்தும், வீணான காரியங்களில் இருந்து விலகி இருப்பது யார் யாருக்கு சிரமமாக இருந்ததோ அவகளுக்கு இந்த ஒரு மாத ரமலான் டிரைனிங்கில் ஒவ்வொரு நிமிடமும் அல்லாஹ் பார்கிறான் என்கிற நினைவு மேலோங்கி கொண்டே இருந்து இருக்கும். அதனால் நாம் நம்மை தூய்மை படுத்தினோம். நல்ல விஷயங்களை செய்ய எளிதாக போனது, கெட்ட விஷயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ள முடிந்தது. நமக்கு இந்த டிரைன்ங் எளிதாக அமையவே அல்லாஹ் நம் மீது ரஹம்மதை இறக்கினான், ஷைத்தானையும் விலங்கிட்டான்.  நிச்சயமாக அல்லாஹ் நம் மீது கருணை பொழிபவனாகவே இருக்கிறான்.

ரமலான் முடிந்து விட்டது, டிரைனிங் முடிந்து விட்டது. ஷைத்தான் உடைய விலங்குகள் உடைகப்பட்டுவிட்டன. ஆனாலும் கவலை படாதீர்கள்.  யார் யார் எல்லாம் இந்த மாதம் அல்லாஹ்வின் டிரைனிங்கை நல்ல படியாக எடுத்தீர்களோ அவர்கள்  டிரைனிங் முடிந்து பின்பும் கற்றவைகளை கொண்டு  அதே போல இருக்க முயல வேண்டும்.  உங்கள் மனதை அல்லாஹ் அறிபவனாக இருக்கிறான். ஆகவே அவனிடம் உதவி தேடுங்கள். அவனை விடாது தொழுபவர்களாக ஆகி விடுங்கள்.

இஸ்லாம் என்பது வெறும் தொழுகை மட்டுமல்ல.. மக்களுக்கு எது நல்லதோ அதை கட்டளைகளாக அல்லாஹ் கொடுத்துள்ளான். ஆகவே உங்கள் மனைவியிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள், உங்கள் அண்டை வீட்டாரை நேசியுங்கள், உதவி செய்யுங்கள், பிற மத சகோதரரையும் நேசியுங்கள். அரசுக்கு கட்டுப்பட்டு நல்ல குடி மகனாக திகழுங்கள். எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி நடந்து கொள்ளுங்கள், அவனிடம் உதவி இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சமீபமாகவே இருக்கிறது.

கஷ்டமான காலங்களை அல்லாஹ் உங்களை சோதிக்க வேண்டி ஏற்படுத்தினால் பொறுமையை கொண்டும், தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள். நம்முடைய நிஜ எதிரியான ஷைத்தானை அடித்து துவம்சம் செய்யுங்கள், நம்முடைய மனதில் பயத்தையும், பீதியையும், குழப்பங்களையும், பிரிவிணைகளையும் ஏற்படுத்துவதில் அவன் திறமைசாலி, ஆகவே அவனை இந்த வெற்றி பெற முயலுங்கள்.  உங்களுக்கு நேர் வழி காட்டவே குரானை இறக்கியுள்ளான்.ஆகவே அதை விளங்கி படியுங்கள்.

 இந்த மார்க்கத்தை அல்லாஹ் நமக்கு லேசாக்கி தந்துள்ளான். இதுவரை தொழதவர்களாக இருந்தால் இனிமேலாவது முயற்சி செய்யுங்கள், 5 வேளை தொழுவது சிரமமாக இருந்தால் குறைந்தது ஒரு வேளையாவது தொழ ஆரம்பியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை ஒரு ஜான் நெருங்கினால் அல்லாஹ் உங்களை நோக்கி ஒரு முழம் நெருங்குகிறான். நீங்கள் அவனை நோக்கி நடந்தால் அவன் உங்களை நோக்கி ஓடி வருகிறான். அவன் இந்த மார்க்கத்தை எந்த கோணலும் இன்றி அல்லாஹ் கொடுத்துள்ளான். ஆகவே அதை கெட்டியாக  பிடித்துக் கொள்ளுங்கள்.  அல்லாஹ் நமக்கு போதுமானவன்."
- என்று தனது உரையை முடித்து ஒரு சிறிய துவாவை எல்லோருக்காக கேட்க ஆரம்பித்தார்.


* யா அல்லாஹ், இந்த   உலகத்தின் மயக்கங்களிலும்,  பரபரப்பிலும்  மறந்து தங்களை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை  மறந்துவிட்டோம், ஆகவே எங்களை காப்பாற்றுவாயாக!

* யா அல்லாஹ், உன்னுடைய கட்டளைகளை மறந்து இவ்வளவு காலம் இருந்து விட்டோம்! எங்கள் மனதை இஸ்லாத்திற்காக விசாலப் படுத்துவாயாக..!

* யா அல்லாஹ் மன்னிப்பாயாக! மன்னிப்பை விரும்புவனே! அறியாமையினால் இருந்துவிட்ட எங்களை மன்னித்து பொருந்திக் கொள்வாயாக!

* யா அல்லாஹ், நல்லவர்களுடன் சேர்த்து வைப்பாயாக! கபருடைய வேதனையை நீக்கி, நரகம் செல்லாமல் சுவனம் போகும் பாக்கியத்தை பெற அருள் செய்வாயாக..!

* யா அல்லாஹ், நீ மிக பெரியவன், யா அல்லாஹ் நீ  மிக பெரியவன், யா அல்லாஹ் நீ மிக  பெரியவன், உன்னை தவிர வேறு இறைவன் இல்லை.  எல்லா புகழும் உனக்கே! எங்களை உன்னுடைய அடியார்களாக ஆக்கி வைப்பாயாக!

அல்லாஹ் நிச்சயம் மன்னிகறவன்! கிருபை செய்கிறவன்! யா அல்லாஹ் உன்னிடம் இருந்தே வந்துள்ளோம், உன்னிடமே திரும்ப மீளுபவர்களாக இருக்கிறோம். நீ எங்களுக்கு கிருபை புரிவாக!  ஆமீன். - என்று சொல்லி முடித்தார் இமாம்.

சுலைமானும் மனதுக்குள் ஆமீன் என்று சொல்லிக் கொண்டான், அவனுடைய முகம் மகிழ்ந்திருந்தது!  கனத்த அவனது இதயம் லேசாகி இருந்தது!


**முற்றும், அல்ஹம்து லில்லாஹ்!**