இறைவன் ஒருவனே!



இறைவனை சிலர் நம்புவதே இல்லை, சிலர் அவன் ஒருவனே என்கின்றனர், சிலர் அவன் மூன்று என்கின்றனர், இன்னும் சிலர் கோடானு கோடி என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலரோ நீயும் இறைவன் நானும் இறைவன் என்று தத்துவமெல்லாம் பேசுவர்.  அவன் இப்படிப்பட்டவன், அப்படி பட்டவன் என்றும் பார்த்தது போல இறைவனின் தன்மைகளை பற்றி சொல்லுவர். இஸ்லாம் இறைவனை நம்பு வெறுமனே சொல்லாமல் எப்படி நம்ப வேண்டும் என்று இலக்கணமும் தருகிறது.

மதீனாவிலுள்ள யூதர்களும், நஜ்ரான் நாட்டு கிறித்தவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வைப்பற்றி, அவன் எப்படிப்பட்டவன்? எந்த இனத்தைச்சார்ந்தவன்? எப்பொருளால் உருவானவன்? தங்கத்தாலா? வெள்ளியாலா? செம்பாலா? பித்தளையாலா? இரும்பாலா ஆனவன்? அவனது உணவு, பானம் என்ன? யாரிடமிருந்து இவ்வுலகை வாரிசாகப் பெற்றான்? அவனுக்குப்பிறகு அவனதுவாரிசு யார்? போன்ற பல் வேறு கேள்விகள் கேட்டபோது அதற்கு விளக்மாகவும் மிகச்சுருக்கமாகவும் சூரா இக்லாஸ் அருளப்பட்டது. என இப்னு அப்பாஸ் (ரலி) போன்றார் அறிவிக்கும் செய்திகள் பைஹகீயிலும், ளஹ்ஹாக(ரஹ்), கதாதா(ரஹ்), முகாத்தில்(ரஹ்), இப்னு தைமிய்யா(ரஹ்) ஆகியோரது தப்ஸீர் விரிவுரைகளிலும் காணப்படுகிறது.


இந்த அத்தியாயம் அருளப்பட்ட காலத்தில் உலகில் கடவுள் கொள்கை பலவாறாகக் காணப்பட்டன. ஒரு சாரார் கடவுளே இல்லையென நாத்திகம் பேசினர். இன்னொரு சாரார் கடவுள் உண்டு என ஆத்திகம் பேசினர், கடவுளை நம்பிய ஆத்திகர்கள் கடவுளுக்;கு தங்களின் கற்பனைக்கு ஏற்றவாறு வடிவங்கள் கொடுக்கவும் விளக்கங்கள் கூறவும் முனைந்தனர்.

அகில உலகங்களை எல்லாம் படைத்தது வளர்த்த இறைவனை நம்பு என்று சொன்னால் சிலர் அறிவு ஜீவிகள் என தங்களை நினைத்துக் கொண்டு கேட்கிறார்கள்: "அப்படியானால் எல்லாரையும் படைத்த இறைவனை படைத்தது யார்?" என்று. நாத்திகர்கள் வழுக்கி விழுவது இந்த இடம்தான். அல்-குரான் இறைவனை பற்றி கூறும் பொது "இறைவன் என்பவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்" என்று அறிமுகம் செய்கிறது.

... (இறைவன் எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)

இறைவன் பிறந்தான் என்று சொன்னால் இறைவன் பிறப்பிற்கு முன் அவன் இல்லை என்று அர்த்தம் தரும். அதே போல இறைவன் மரித்து விட்டான் என்றால் அவன் இறைவனே இல்லை.  இது புரியாதவர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் மனிதர்கள் இறைவனுக்கு  பிறந்த தினம்  கொண்டாடவும் செய்கின்றனர். அடிப்படையில் இறைவன் ஒருவன் என்று ஒப்புக் கொள்கிறார்கள், மேலும் இறைவன் ஆதியும் அந்தமும் அற்றவன் என்று ஒப்புக் கொண்டாலும் அவனுக்கு பிள்ளைகள் உண்டு என நம்பவும் செய்கின்றனர். இது தெளிவான முரண்பாடு.  மனித குலத்திற்கு இறைவன் நேர்வழியை தர பொறுபெடுத்துக் கொண்டான். எனவே அவன் இதை தெளிவு படுத்தும் விதமாக இதற்கு அல்லாஹ் மறுமொழி தருகிறான்:

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (112:1) அவன் (எவரையும்) பெறவுமில்லை;.. (112:3)

இப்படி பிள்ளைகள் உண்டு என்று சொன்னால் ஒரு கடவுள் கொள்கையும் தகர்க்கப்பட்டு போகிறது. இராவணப் பிள்ளை சக்தியற்றவனாக இருக்க முடியுமா? எனவே இறைவனின் பிள்ளைக்கும் இறைவன் ஸ்தானம் தரப்படுவதால் அதுவும் கடவுள் என பாவிக்கப்படுகிறது. இது இறைவனுக்கு பிறப்பு இறப்பு இல்லை என்கிற உண்மைக்கும் மாற்றமாக உள்ளதை உணர மறுக்கிறார்கள் என்பது கண்கூடு. இதை அல்லாஹ் விமர்சித்து ஒரு கேள்வியையும் எழுப்புகின்றான்.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:2) 

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6:101)

அதனாலேயே என்னவோ இறைவனுக்கு சிலர் துணையையும் ஏற்படுத்திவிட்டனர். இப்படியாக தேவைகள் அற்ற இறைவனுக்கு  சில சமூகங்களில் இறைவனுக்கு ஒன்றோ அல்லது பல மனைவிகள் இருப்பதாகவும் சொல்லப்படுவதும் உண்டு. இவ்வாறே அந்த துணைவிக்கும் இறைவனின் அந்தஸ்து கிடைக்கப் படுகிறது. இப்படியாக மறுபடியும் ஒரு கடவுள் கொள்கை பல கடவுள் கொள்கையாக நியாயப்படுத்தவும் படுகிறது. இதற்கும் இறைவன் பதிலை தருகிறான்:

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)

இப்படியாக சில கடவுள்கள் வானத்தில் படைக்கபட்டர்கள் என்றால் இன்னும் சிலர் இறைவன் மனிதனாகவும் பிறந்ததாகவும் பல சமூக நம்பிக்கைகள் உள்ளது. அதனால் பிறப்பு இறப்பற்ற இறைவனுக்கு பிறந்த தினம், இறந்த தினம், மீண்டும் உயிர்த்தெழுந்த தினம் எல்லாம் கொண்டாடப் படுகிறது.



படைப்புகள் இறைவனுக்கு இணையாக ஆக  முடியுமா? 

முஷ்ரிகீன்கள், ஸாபியீன்கள், மஜூஸிகள், யஹூதி , நஸாராக்கள் கிறித்தவர்கள்: இவர்களில் முஷ்ரிகீன்கள் என்னும் சிலை வணக்கம் புரியும் இணைவைப்போர் கடவுள் உண்டு என்று நம்பினாலும் கடவுள் கொள்கையை போதித்த இறைதூதர்கள், பெரியார்களுக்கு கல்லுருவங்களை செய்து இவர்கள் ஆக்கவும் அழிக்கவும் சக்திபெற்றவர்கள், இறையருளைப் பெற்றுத்தரும் ஆற்றல் பெற்ற தெய்வங்கள், இறைவனின் அவதாரங்கள் என்று கூறினர். aது மட்டுமன்றி கடவுளுக்கு மனைவி மக்கள் என குடும்பங்களையும் கற்பித்தனர். இவர்களில் இன்னொரு பிரிவினர் கடவுளின் படைப்புகளான சூரியன், சந்திரன், மாடு பாம்பு, மரம், பறவைகளையும் வணங்கி வழிபட்டனர். 

மற்றொரு பிரிவான ஸாபியீன்கள் என்போர் நட்சத்திரங்களை வணங்கி வந்தனர். பிறிதொரு பிரிவான மஜூஸிகள் என்போர் நெருப்பை வணங்கி வந்தனர். அஹ்லுல் கிதாப் என்னும் வேதம் கொடுக்கப்பட்டோரில் யூதர்கள் கடவுளுக்கு மகனாக உஸைரை நம்பினர். கிறித்தவர்கள் கடவுளை நம்பினாலும் ஈஸா நபியை (ஈயேசு கிறிஸ்துவை) மகன் எனக்கூறி பிதா, மகன், பரிசுத்த ஆவி என திரித்துவ கொள்கையைக்கூறி இறைத்தன்மையில் பங்கு போட்டனர். இறைவனுக்கு தாயுமிருந்தார் எனவும் கூறினர். இவ்வாறு பல் வேறு கொள்கைகள் மக்களிடையே நிலவி வந்ததால் தான் இறைவனைப்பற்றிய பல் வேறு வித கேள்விகளும் எழுந்தன.எனவே நான்கே வசனங்களில் நாத்திகர்கள், இணைவைப்பவர்கள், யூத, கிறித்தலர்கள், இந்திய மதத்தவர் இவர்களுக்கு மறுப்பாக பின்வருமாறு அருளப்பட்டன.

அல்லாஹு அஹத்:  இறைவன் இல்லை எனச் சொல்லும் நாத்திகர்களுக்கும் பல கடவுள் சித்தாந்தம் உடையோருக்கும் மறுப்பாகும். 
அல்லாஹுஸ்ஸமத்:  ஊண் உறக்கம் மனைவி மக்கள் காணிக்கை தேவை எனக்கூறும் இந்து மதத்திற்கு மறுப்பாகும். 
லம்யலித் வலம்யூலத்: கடவுளுக்கு மகனையும் பெற்றோரையும் கற்பிக்கும் யூத கிறித்தவர் களுக்கு மறுப்பு.
வலம் யகுன் லஹு குஃவன் அஹத் : இணை வைக்கும் முஷ்ரிகீன்கள், ஸாபியீன்கள், மஜூஸிகளுக்கு மறுப்பு


தவ்ஹீத் என்னும் ஒரே கடவுள் நம்பிக்கையே இஸ்லாத்தின் ஆணிவேர். ஓரே கடவுள் வணக்கத்தை நிலை நாட்டி மனிதனுக்கு நேர்வழி காட்டவே அல்-குர்ஆன் அருளப்பட்டது. ஏகத்துவக் கொள்கையை முஸ்லிம்களின் உள்ளத்தில் பதியச் செய்யவும், பரவச்செய்யவும் வேண்டுமென்பதற்காக நபி(ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை அதிகமதிகமாக ஓதி வரவேண்டுமென ஊக்கப்படுத்தினார்கள். பல் வேறு சந்தர்பங்களில் இந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றிலொரு பங்குக்கு சமமானது என்றுகூறி இருக்கிறார்கள் . (நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூ தாவூது,நஸயீ, திர்மிதி) 

இந்த அத்தியாயத்தை ஓதியவர் தீருக்குர்ஆனில் மூன்றில் ஒருபகுதியை ஓதியவராவார் என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்கள்: அஹ்மது, நஸாயீ) இதற்கு விளக்கமளித்த குர்ஆன் விரிவுரையாளர்கள் குர்ஆனின் போதனைகள் யாவும் மூன்று அடிப்படைகளைக் கொண்டது. என பின்வருமாறு விரித்துரைத்தார்கள்:

1) இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவ நெறியை நிலை நாட்டுவது.
2) மறுமையை நினைவூட்டி மனிதனை நெறிப்படுத்துவது.
3) இறைதூதர் வரலாற்றைக்கூறி வாழ்வை சீர்படுத்துவது

இவற்றுள் ஏகத்துவ நெறியை இவ்வத்தியாயத்தில் எடுத்துரைப்பதால் தான் பெருமானார்(ஸல்) அவர்கள் இதனை குர்ஆனின் மூன்றிலொரு பகுதிக்கு சமமானது எனக் கூறினார்கள்.

அத்தியாயத்தின் நோக்கம், "இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கையான ஒரே இறைக்கொள்கையை உலகுக்கு பிரகடனப்-படுத்துவதாகும்."

சொற் பொருள்:
بسم الله الرحمن الرحيم
1. )நபியே!( சொல் வீராக ! قل 2. அவன் அல்லாஹ் ஒருவன் . هو الله أحــد 3. அல்லாஹ் தேவையற்றவன். الله الـصـمــد 4. (யாரையும்); அவன் பெறவில்லை.
5. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
6. (பிள்ளைகளோ பெற்றோரோ கிடையாது) لم يلـد ولم يولـد 7. அவனுக்கு நிகராக எவருமே இல்லை. ولم يكن له كـفـوا أحــد

மனத்தூய்மை உணர்த்தும்  பாடம் : 
மனிதன் கடவுளைப்பற்றி மனதிற் தோன்றியவாறெல்லாம் கற்பனை செய்து கொள்கிறான். இறைவன் மனிதக் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன்! பரிசுத்தமானவன்! சகல வல்லமையும் பொருந்தியவன். மனிதனின் வெற்றி தோல்வி என்பது மனிதன் இறைவன் மீது கொள்ளும் அசைக்க முடியாத (ஈமான்) நம்பிக்கையைப் பொறுத்தது. மறைவான வெளிப்படையான யாவற்றையும் அறியும் மகா ஆற்றல் பெற்றவன் அந்த அல்லாஹ்! மனிதன் செய்யும் நன்மை தீமைக்குரிய கூலியை அவன் வழங்கவே செய்வான். அவனிடமிருந்து யாரும் எங்கும் தப்ப முடியாது என்ற எண்ணம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டுவிட்டால் அவன் பாவமே செய்யமாட்டான். அவன் சொர்க்கப் பெருவாழ்வைப் பெறுவான். அவ்வித எண்ணமும் நம்பிக்கையும் இல்லாதவன் மனம் விரும்பியவாறு வாழ்ந்து பாவம் செய்து அழிந்து பாழ்நரகிற்குச் செல்வான்.

(reference: http://albaqavi.com/?p=1262)