முஸ்லிம் எவ்வாறு மத நல்லிணக்கம் பேண வேண்டும்?

இஸ்லாம் இரண்டு விஷயங்களை ஆணித்தரமாக சொல்லிவிடுகிறது.

1. படைத்த இறைவனை வழிபடுங்கள்,  அவன் அனுப்பிய இறை தூதருக்கு கட்டுப்படுங்கள்.  ஏற்பது ஏற்காதது உங்கள் மீது நிர்பந்தம் இல்லை என்று அழகிய அழைப்பை திருக்குர்ஆன் முழுவதும் விடுகிறது.

2. பாட்டன் வழி முப்பாட்டன் வழியைத்தான் பின்பற்றுவேன் என்று விதண்டாவாதம் கூறினால், "உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எங்களுக்கு" என்று விலகி செல்ல முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறது.

இதை முஸ்லிம்களும், மற்ற அணைத்து மதத்தவரும் விளங்கி கொண்டால் பிரச்சனையே இல்லை. அதாவது தத்தமது மதத்தை பின்பற்றுவதை அது அவர்கள் வழி என்று அவர்களுக்கான வழிபாட்டு உரிமையை கொடுத்துவிடுவதே மத நல்லிணக்கத்தின் அடிப்படை.மத நல்லிணக்கம் என்பது  மக்களிடையே  நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது.


என் மதத்தை மட்டுமே ஆதரிப்பேன், மற்ற மதங்களை வெறுப்பேன் என்று சொல்பவன்  வன்முறையை தன்னை அறியாமலேயே தூண்டுபவனாக அமைந்து விடுகிறான். வகுப்பு வாதத்தை தூண்டும் சிலர்,  மத நல்லிணக்கத்தை பின்பற்றாமல், மத நல்லிணக்கம் என்பது போலியானது என்ற ஒரு புதிய வாதத்தை எடுத்து வைக்கின்றனர். இந்திய அரசியல் சாசனம் தன்னுடைய மதத்தை பிறருக்கு எடுத்து வைப்பதை, பிரசாரம் செய்வததை தடுக்கவில்லை, ஆனால் வலுக்கட்டாயமாக தினிப்பதைதான் கண்டிக்கிறது. ஒரு மனிதர் தனது மதமல்லாத வேறொன்றை பின்பற்றுகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை வெறுப்பது, அவரிடம் நீதமின்றி நடந்து கொள்வது எந்த ஒரு மதத்தின் மரபுகளுக்கு எதிரானது,

பதவி வெறியும், குரூர நெஞ்சம் கொண்டோர் தத்தமது தவறாக பயன்படுத்துவதை ஏற்க்க முடியாது. இன்றும் சில முஸ்லிம் நாடுகளில் நிகழும் நிகழ்வுகள் மனவருத்தத்தை தருபவையாக உள்ளது,  இது வன்மையாக கண்டிக்க தக்கது. ஒருவர் முஸ்லிம் இல்லை என்றால் அவருக்கு மனிதர் என்கிற முறையில் தர வேண்டிய கண்ணியத்தை தராமல் போவது இஸ்லாத்திற்கு நிச்சயம் அவபெயரை பெற்றுத்தரும். இவர்கள் நபிகளாரின் வாழ்கையை நன்கு படித்து உணர வேண்டும். அதே போல முஸ்லிம் அல்லாத நாடுகளிலும் வகுப்பு வாதத்தை தூண்டும் சிலர்,  மத நல்லிணக்கத்தை பின்பற்றாமல், மத நல்லிணக்கம் என்பது போலியானது என்ற ஒரு புதிய வாதத்தை வைப்பதும் ஏற்புடையது அல்ல. நாட்டில் இதற்கு முன் நடைபெற்ற அனேக குழப்பங்களுக்கும் மத மோதல்களுக்கும் மத நல்லிணக்கத்தை பேனானதுதான் காரணம் என்பதை என்று உணரப் போகிறார்களோ தெரியவில்லை.

முஸ்லிம் எப்படி மத நல்லிணக்கம் பேண  வேண்டும்?
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நபிகளார்தான் முன் மாதிரி. நபிகளார் வாழ்ந்த காலத்திலும் அவருடய இரத்த சொந்தங்கள் அறியாமையினாலும், மனோ இச்சையினாலும் மனம் போன முறையில் பல தெய்வங்களையும், சிலைகளையும் வணங்கி வந்தனர். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கண்ணியமான முறையில் "ஒரு இறைவனை" வழிபட வேண்டிய அவசியத்தையும், அதை மறுக்கும் பட்சத்தில் மறுமையில் நடக்கும் கேடையும் எடுத்து சொன்னார்களே தவிர, நிர்பந்திக்கவோ, மிரட்டவோ இல்லை. அவரின் பெரிய தந்தை மரணப் படுக்கையில் இருக்கும் போது  கூட கெஞ்சிதான் பார்த்தார். துக்கத்தில் மிகவும் உழன்ற போது, "நபியே உன் வேலை சொல்வது மட்டும்தான்.." என எச்சரிக்கையும் விடுத்தான் என அறிகிறோம். 

நபிகளார் வாழ்வில் நடந்த சில உதாரணங்கள்:

•ஒரு யூதனின் பூத உடல் அடக்கம் செய்வதற்காக வீதியில் செல்லும் போது, நபிகள் நாயகம் மரியாதைக்காக எழுந்து நின்றார் என்பது வரலாற்று பதிவு.

•கிருஸ்தவ பாதிரிமார்கள் ஒரு வேலை நிமித்தம் பள்ளி வாசலில் தங்கி இருந் போது அவர்களின் வணக்க வழிபாடுகளை செய்வதற்கு அனுமதி அளித்தார். 

•இரு சமூகத்துக்கு இடையே ஏதேனும் காரணத்துக்காக போர் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றால் அப்போதும் கூட மற்ற சமூக குருமார்களை தாக்குவதையோ, வழிபாட்டு தளங்களை இடிபதையோ நபிகளார் தடுத்திருக்கின்றார்கள். இதுவெல்லாம்தான் மத நல்லிணக்க செயல்கள். இங்கே மத துவேசம், மத வெறி போன்றவற்றிற்கு இடம் இல்லை. பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள  மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும். 

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வோம்:
ஒரு ஹிந்து நண்பரோ, பௌத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு "முன்பே" கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் விட்ட தவறென்ன? நமது கொள்கை கோட்பாடுகளை சரியாக அவர்களுக்கு புரிய வைக்காததே. இதை உணராமல் நம்மில் சிலர் இஸ்லாத்தின் மீது குறை காண்பது அறிவீனமாகும். 

இதன் படி நம் சகோதர மத காரர்களுக்கு நமது கொள்கைகளை அவர்கள் உணர்ந்து கொள்ள செய்வதன் மூலமும், அவர்களின் கொள்கைகளை அறிந்து நடப்பது மூலமாகவும் ஒருவருக்கொருவர் அன்புடன் மத நல்லிணக்கம் பேனா முடியும். வகுப்பு வாத செயல்களை தூண்டுவோர் யாராக இருந்தாலும் அதை முளையிலேயே கில்லி விடுதல் நலம். மத நல்லிணக்கத்தை பேனாதவரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை குரான் வழி காட்டி உள்ளது இதன் படி, "உங்கள் வழி உங்களுக்கு, எங்கள் வழ எங்களுக்கு" என்று சொல்லி விலகிவிடுவது நல்லது.

அல்லாஹ் தன் திருமையில் கூறுகிறான்:
இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவழிபாட்டுக்குரிய சின்னங்களை அவமதிக்காதீர்கள். சங்கைக்குரிய எந்த மாதத்தையும் போர் புரிவதற்கு அனுமதிக்கப்பட்டதாய் கொள்ளாதீர்கள்! இன்னும் குர்பானிக்குரிய பிராணிகளையும், இறைவனுக்காக நேர்ந்துவிடப்பட்டவை என்பதற்கு அறிகுறியாக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணிகளையும் துன்புறுத்தாதீர்கள்! இன்னும் தன்னுடைய இறைவனின் திருவருளையும், திருப்பொருத்தத்தையும் பெற எண்ணி புண்ணியத்தலம் (கஅபா) நோக்கிச் செல்வோரை சிரமத்திற்குள்ளாக்காதீர்கள்! ஆனால், இஹ்ராமின் நிலையிலிருந்து விலகி விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். 

மேலும் பாருங்கள்: மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்ல முடியாதவாறு உங்கள் வழியினை அடைத்துவிட்ட கூட்டத்தார் மீதுள்ள வெறுப்பு, அவர்களுக்கு எதிராக நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் அளவுக்கு உங்களைக் கொதித்தெழும்படிச் செய்துவிடக்கூடாது. எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால் எது பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும், இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது. (5:2)


எம்மதமும் சம்மதம் என்பது மத நல்லிணக்கத்தை போதிக்குமா?
மத நல்லிணக்கம் என்றால் சிலர் "எம்மதமும் சம்மதம்" என்று ஒரு கொள்கையை சொல்கின்றனர். இது இஸ்லாத்தின் நிலைப்பாடு அல்ல. படைத்த ஒரு இறைவனை மட்டுமே வனாக வேண்டும், அனவுடைய இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வழி நின்று அல்லாஹ் இறக்கிய குரானை பின்பற்றி சுவனம் செல்ல வேண்டும் என்பதுதான் பிறப்பின் நோக்கமாக முஸ்லிமால் பார்க்கப்படும் போது, அல்லாஹ் அல்லாத மற்றவை அல்லாஹ்வுடன் சமம் என்று சொல்வதும், இஸ்லாம் அல்லாத ஒரு வழி முறை எனக்கும் பின்பற்ற சம்மதம் என்று சொல்வதும் நபிகளார் போதித்த இஸ்லாத்தை கேலி கூத்தாக ஆகுவதாகும். மாறாக மற்ற சமூகத்திற்கு கொடுக்க வேண்டிய உரிமையை அவர்களுக்கு கொடுப்பதே சிறந்த செயல் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. எனவே எம்மதமும் சம்மதம் என்பது உண்மைக்கு மாறானது.  எப்படி?

சமயங்களிடையே கருத்து ஒற்றுமைகளும் உண்டு. கருத்து வேற்றுமைகளும் உண்டு , எனவே அனைத்தும் சமம் என்று சொலவது உண்மைக்கு புறம்பானது. வழிபாட்டு முறைகள், சடங்கு சம்பிரதாயங்களில் மட்டுமல்ல, அடிப்படைக் கோட்பாடு களிலே பெரும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு இறைக்கோட்பாடு பற்றிய உதாரணத்தை மட்டும் பார்ப்போம். 

1. ஒரே இறைவன், அவனுக்கு இணைதுணையில்லை, தேவையற்றவன், யாரையும் பெறவில்லை, யாராலும் பெறப் படவுமில்லை இது ஒரு மதத்தின் கருத்து. 

2. இறைவன் ஒருவன்தான், அவனுக்கு மகன் உண்டு, அந்த மக னுக்கு ஒரு தாய் உண்டு, இறைவன் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என மூன் றாகப் பிரிகிறான் என்கிறது ஒரு மதம். 

3. தெய்வம் பலப்பல உண்டு. ஆண் கடவுள், பெண் கடவுள், கல்வி செல்வம் வீரம் ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுள், நன்மைக்கு ஒரு கடவுள், தீமைக்கு ஒரு கடவுள், ஆக்க ஒரு கடவுள், காக்க ஒரு கடவுள், அழிக்க ஒரு கடவுள் இப்படிப் பேசுகிறது ஒரு மதம். 

சமயங்களுக்கிடையிலுள்ள வேறுபாடுகள் விரிந்து கொண்டே போகும். எனவே அடிப்படைக் கோட்பாடுகளிலேயே வேறுபாடு உள்ளது. ‘எல்லாம் ஒன்றே’ என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது அல்லவா? இத்தகையச் சூழலில் உண்மையைத் தேட வேண்டியது மனிதனின் பொறுப்பு. இறைவன் ஒருவன் எனில் அவன் அருளிய மதமும் ஒன்றாகத்தான் இருக்கும். பலவாக இருக்க முடியாது. அந்த மதம் எதுவென்பதை அறிந்து பின்பற்றும் போதுதான் இறைவனை நெருங்க முடியும். அல்லாஹ்வின் தூதர் தனது வாழ்நாளில் எச்சரித்த ஒரு விடயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

“நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குல் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”.அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).

இவைகளை நாம் எடுத்துச் சொல்லும்போது சிலர் இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இது இஸ்லாத்தைப் பற்றித் தவறான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர். இது இவர்களின் வெறும் ஒரு வீணாண கற்பனையைத் தவிர வேறு இல்லை. 

அல்லாஹ் தனது தூதரைப் பற்றி கூறும்போது ” மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (68:4). என்று போற்றுகிறான். அவர் பிற மதத்தவர்களிடம் நடந்து கொண்ட சில நிகழ்வுகளை முன்பே கூறினோம். வணக்க வழிபாடு மற்றும் மதம் சார்ந்த செயல்கள் என்று வரும் போது பிரிந்து நிற்க சொல்கிறார். எந்த வகையிலும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்படக்கூடாது என்பதில்தான் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள்.

ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் வரம்புகளை முரண்படாமல் நீங்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்). அல்லாஹ் கூறுகிறான்:
“அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.” (9: 62).

எனவே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், அடுத்த மத விஷயங்களுக்குள் தலையிடாமலும், இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்யாமலும் தத்தமது உரிமைகளை பேணி மனித நேயம் காப்போம், ஏனெனில் நிச்சயமாக  மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.