ஒன்றே தேவன் ஒருவே தேவன் கூறும் இஸ்லாம்


"கடவுள் இல்லை, கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை.  கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளை பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி இவற்றால் பலன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்" - இது தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள். 
இன்னும் இறைமறுப்பாளர்கள் கேட்கிறார்கள்:
  • "இயற்கை சீற்றம், வெடிகுண்டு,  கொலை கொள்ளை எல்லாம் உலகில் ஏன் அன்றாடம்  நடக்கிறது?" 
  • "இறை ஆலயத்தை தரிசிக்க செல்லும் மக்களும் கூட ஏன் விபத்தில் சாகிறார்கள்? 
  • உலகம் முழுவது சண்டை சச்சரவுகளும், குழப்பங்களும் ஏன் மலிந்து கிடக்கிறது? கடவுள் ஒருவன் இருந்தால் இப்படி நடக்குமா? அதனால் கடவுள் இல்லை. 
  • சாதியின் பெயரால் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிக்கப்படுகின்றான், மதந்தின் பெயரால் கலவரங்கள் நடக்கின்றன, எனவே கடவுள் இல்லவே இல்லை என்று சொல்கின்றதை பார்க்கிறோம். 



இந்த மாதிரி முடிவுகளை ஏன் எடுத்தீர்கள்? 

அறிவுபூர்வமாக யோசித்துதான் இந்த முடிவை எடுத்தார்களா என்றால், இல்லை இல்லவே இல்லை என்று சொல்லலாம். இந்த உலகம் ஒன்றும் அமைதி பூங்காவாக இல்லை. நமது வாழ்கையும் ஒரே சீராக இல்லை. மேடு பள்ளங்களும், நோயும், அவ்வபோது வறுமையும், பதட்டமும் வந்து போகிறது, சில நேரங்களில் துர் மரணம் கூட சந்திக்க நேருகிறது என்றாலும் இந்த துன்ப நிலையில்தான் எப்போதுமே உள்ளோமா என்றால் இல்லவே இல்லை. நமது வாழ்வில் துன்பமும் இன்பமும் மாறி மாறி வருகிறது. சொல்லப் போனால் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் எதை பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை, மாறாக துன்பம் வந்தால் ஐயோ என அழுது புலம்புகிறோம். சிலருக்கு ஏதேனும் சோதனை வந்தால்தான்  கடவுள் நினைப்பு வரும் சிலருக்கோ ஏதேனும் சோதனைவந்தால் நாம் முன்பு கூறியது போல கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என குரல் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் வேதத்தை படிக்க வேண்டிய முறை படி படிக்காததும், புரிந்து கொள்ள வேண்டிய முறைப்படி புரிந்து கொள்ளாததும்தான். ஏன் பிறந்தோம், எதற்காக இந்த உலகம் என்று யோசிக்காமல் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தால் இந்த உலகத்தில் நம்மை சுற்றி நடக்கும் அனேக விஷயங்களை புரிந்து கொள்ளமுடியாமல் போகும். 

சற்று அமைதியாக ஆழ்ந்து யோசித்தால் இந்த பூமியில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது. நிலவு 15 நாளுக்கு ஒரு முறை தேய்கிறது, பிறகு 15 நாளுக்கு ஒரு முறை வளருகிறது. பூமி 365 1/4 நாளுக்கு ஒரு முறை சூரியன சுற்றி வந்து கொண்டே இருக்கிறது, இன்ன பிற கோள்களும் சூரியனை வரையறுக்கப் பட்ட காலத்தில் சுற்றிவருகிறது, இவை எல்லாம் தாமே நடந்து கொண்டு இருக்கிறது, நாம் எதையும் செய்வது இல்லை. அதுவும் நம்மிடம் எதுவும் கேட்பது இல்லை. மரஞ்ச்செடி கொடிகள் நமக்கு வேண்டிய உணவை தருகிறது, மேகங்களும் தவறாமல்  மழையை தந்துவிட்டு போகிறது. ஆக நம்மை சுற்றி உள்ள ஒவ்வொன்றும் எதோ ஒழுங்கமைப்புடன், கட்டுபாடோடு நடக்கும் போது, நாம் மட்டும் என்ற்ஹா வித கட்டுப்பாடன்றி மனம் போன மாதிரி திரிவது ஏன்? இப்படி யோசித்தால் ஏதோ ஒன்றாய் நாம் தவறுகிறோம் என்று விளங்கும். அது என்ன? நமக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லையா? இல்லை வானம் பூமி, மற்றும் இன்ன பிற கோள்கள் எல்லாம் வீணுக்காக ஒழுங்கமைப்புடன் செயல்படுகின்றனவா? இல்லை இதன் பின்னால் எதோ ஒரு பெரிய திட்டம் உள்ளது, அதில் நாம் உள்ளது வீணுக்காக இல்லை என்பது புரியும்.  இதையே அல்லாஹ் கேட்கிறான்:
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.(44:38) 
 “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.) (23:115) 
 இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். (20:131)

ஆக இந்த உலகம் ஒரு பரீட்சை களம் என்பது தெளிவாக விளங்குகிறது. இது பரீட்சை காலமாக இருப்பதால் துன்பமும் இன்பமும் மாறி மாறி வருகிறது. இது சுவனமாக இருந்தால் மட்டுமே துன்பம் இல்லாதொரு நிலையை நாம் அனுபவிக்க முடியும். இறைவன் நினைத்திருந்தால் எல்லோரையும் படைத்தது சுவனதிழ்க் போடிருக்க முடியும் ஆனால் அப்படி செய்யாமல் சுவனத்தை சம்பாதித்து வருமாறு கூறுகிறான். இந்த உலகத்திலும் நமக்கு சும்மா ஒரு பொருளை தந்தால் அதை வாங்க மாட்டோம், வாங்கினாலும் அதை நமது திறமையால் ஏதேனும் வென்றால் மிக்க மகிழ்ச்சி இருக்காது. இறைவன் மிக அறிந்தவன், ஆகவே சுவனத்தை சம்பாதிக்க வேண்டி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சோதனைகளை தருகிறான். வெறும் சோதனை தருவதோடு இல்லாமல் அதில் வெற்றி பெற வேண்டிய அறிவையும், உதவிகளையும் செய்ய செய்கிறான். பெரும்பாலனவர்கள் இதை புரிந்து கொள்வதும் இல்லை, இறைவனிடம் கேட்பதுவும் இல்லை.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)  
இறைவன் கூறுகின்றான்: (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.(11:115) 

இன்னும் மனிதர்களில் சிலர் இருகிறார்கள், அவர்கள் இறைவனை மறுத்தே ஆக வேண்டும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். இந்த உலகம் படைக்கப்படவே இல்லை, முன்பு இருந்தே உள்ளது இது இன்னும் இருக்கவே செய்யும் என்றெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வாழ்ந்த தத்துவ மேதைகள் இறை மறுப்பு கொள்கையை வாதிட்டார்கள். இதற்கெல்லாம் மரண அடியாக இருபதாம் நூற்றாண்டில் திருக்குரானை நிரூபிக்கும் விதமாக இந்த பிரபஞ்சம் எல்லாம் ஒரு புள்ளியில் இருந்து படைக்கப்பட்டது என்பதை கூறும் "பெருவெடிப்பு கொள்கை" அமைந்தது. 

எல்லாவற்றையும் “குன்” - ஆகுக என்று கூறி படைத்தது விட்டேன் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று வெறுமனே சொல்லாமல் கருணையே நிரம்பிய இறைவன் தன் வேதத்தில் ஆங்காங்கே மனிதர்களுக்கு பல விஷயங்களை பல உதாரணங்களுடன் விளக்கி கூறுகின்றான். தனது படைபற்றலை விளங்க முடியாத மனிதர்களுக்கு சிந்தித்து உணரும் பொருட்டு, இறைவன் அழகாக குரான் முழுவதும்  வானம், பூமி மற்றும் அனேக படைப்புகளின் ஆரம்ப, இடை மற்றும் இறுதி நிலைகளையும் விவரித்தும் கூறுகின்றான்.  சிந்தித்து அறிவு பெறுவோர் உண்டா என்று கேள்வியும் கேட்கிறான்.  

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (2:164) 

சூரிய ஒளி கடலுக்குள் எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு தூரமே உயிரினங்கள் வசிக்க முடியும் என்பதும், பூமி பந்துக்கு வெளியே வெற்றிடம் மட்டுமே உள்ளது என்பது போன  நூறாண்டு அறிவியல் ஆனால் இப்போது சூரிய ஒளி புகாத காரிருள் கடலுக்குள் சில நுண்ணுயிரிகள் வாழ்வதாக கண்டுபிடித்துள்ளனர்,  அண்டம் முழுவதும் விளங்க முடியாத "பிளாக் மேட்டர்" உள்ளது என விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். இப்படி பல உதாரணங்களை கொடுக்க முடியும். ஆகவே  நம்பிக்கை தொடர்பான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது அறிவியலுக்கு ஒத்துப் போனால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்று வாழ்ந்தவர்கள் நிச்சயமாக நஷ்டத்தை சந்திப்பார் என்பது தெளிவு. இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானது அல்ல, ஆனால் நாம் இறைவனின் படைப்பை புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொள்ளாமல் மரணித்துவிட்டால் இறைவனை மறுத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்)  திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.(7:35) 

இறைவனுடைய படைப்புகளில் மனிதன் எதை புரிந்து கொண்டானோ அதை அறிவியல் என்கிறான். இன்னும் அவனுக்கு விளங்காத, தெரியவே தெரியாத பல உள்ளன. ஆனாலும் பெரும்பாலனவர்கள் மமதையின் காரணமாகவும், பொறமை காரணமாகவும் இறைவனை மறுத்தார்கள், மறுத்துக் கொண்டிருகிறார்கள். இவ்வாறு ஆத்திகர்கள் மெல்ல மெல்ல இறைவனை ஏற்று நல்வாழ்க்கையில் முன்னேறும் முன்  ஏதாவது ஒரு குழப்பம் மூலம் சைத்தான் மனித குலத்தை சறுக்கச் செய்து கொண்டே இருக்கிறான்.

இப்லீஸ் அல்லாஹ்வுடன் கூறினான்: “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்” . (7:17)
இறைவனை சந்தேகம் கொள்பவர் குழம்பிக் கொண்டே இருகின்றனர். இறைவன் மனிதனை சோதிக்கிறான், அந்த சோதனையில் அவன் வெற்றி பெற வேண்டி வழிகாட்டுதல்களையும்தருகிறான்.
சிந்திக்க சில திருமறை குர்ஆன் வசனங்கள்:

 உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை. (3:140)
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (2:214)
 “நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28.)

64:15உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.

விசுவாசிகள்  ஒருவருக்கொருவர் உபதேசித்து சுவனத்தை நோக்கி  இழுகின்றனர், ஆனால் இறை சிந்தனை அற்றவர்களோ பூமியில் குழப்பம் உண்டாக்கி  மனிதர்களை நரக குழிக்கு இழுகின்றனர், இந்நிலையில் இறைவனால் விரட்டப்பட்ட மனித குல எதிரியான ஷைத்தானோ இவர்களுடன் துணை நின்று வீண் சந்தேகங்களை உண்டாக்கி  குழப்பிக் கொண்டே இருக்கிறான். இந்த மாதிரி வீண் சந்தேகம் உருவாக்குபவர்களிடம் இருந்து விலகி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பது மனிதர்களுக்கு உகந்தது. வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன். அத்தகைய பயபக்தி உடையவர்களின் நம்பிக்கையை அல்லாஹ் வீணாகுவதில்லை என்று அல்லாஹ் உறுதி கூறுகின்றான். அவன் இறைவனிடம் மனித குலத்தை வழிகேடுப்பேன் என்று சவால் விட்டதை இறைவன் அல்-குரானிலே சுட்டிக் காட்டுகின்றான். எனவே வீண் சந்தேகங்களில் இருந்து  அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பவரை அல்லாஹ் கைவிடுவதில்லை.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (2:153)