10. சோதனைகள் புயலாய் வீசும் போது...

வாழ்க்கையே வெறுமையாக உள்ளது, மனசு சரியில்லை, எதையோ யோசித்துக்கொண்டு ரொம்ப தூரம் போகிறேன், அங்கு சென்ற பின் ஏன் இங்கு வந்தோம் காரணம் புரியாமல் திகைக்கிறேன் என்று சொல்வதை பார்க்கிறோம். சிந்தனை ஓட்டம் முழுவதும் அவர்களுடைய பிரச்சனையை சற்றிக் கொண்டிருக்கும் போது காரணம் மனம் அவர்களிடம் இல்லை.


சிலருக்கு உடல் பாதிப்பு , சிலருக்கு குழந்த இன்மை, இன்னும் சிலருக்கோ பணப் பற்றாக்குறை என இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. பிரச்சனை இல்லாமல் வாழ்கை இல்லை என அனைவருக்கும் தெரியும்தான், அதற்காக யாருக்குதான் பிரச்சனையோடு வாழ பிடிக்கும்? உங்களுக்கு "சுகர்" என்று டாக்டர் "இனிப்பான" செய்தி சொல்லும் போது அது எவ்வளவு கசப்பாக நமக்கு தெரிகிறது?

பிரச்சனையை சரி செய்யவும் முடியாது, வசதி வாய்ப்பு இல்லவே இல்லை என்னும்போதும், இப்படியே எப்படி? அடுத்து என்ன நடக்குமோ கவலை தொண்டையை அடைக்கும் போது பலர் இடிந்துதான் போகின்றனர். நிச்சயமாக எழுத்துக்களால் விவரிக்க முடியாத வலிதான் அது.


அதீத கவலையினால் சிலருக்கு உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கோ மனநிலைகெடுகிறது. இன்னும் சிலர் கவலையை போக்க வழி தெரியாமல் மது, சிகரெட், போதை, கட்டுபாடற்ற உணவு உண்ணுதல், ஊர் சுற்றுதல் என வாழ்க்கையை தடம் புரள செய்கின்றனர்.

இன்னும் சில பெண்களோ வேலைகளை சரிவர செய்ய முடியாமலும்,   குழந்தைகளை கவனிக்க முடியாமலும்,  சண்டைகளினால் உறவுகளுக்குள் இருக்கும் இணக்கத்தையும் தொலைத்து விடுகிறார்கள். எனவே கவலையை குறைக்க வேண்டும் என்றால் அதில் சரியான அணுகுமுறை வேண்டும்.



இந்த கவலை, சோகம் எல்லாம் புரிந்து கொள்கிற வகையில் புரிந்து கொண்டால் குறையும். கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால் பிரச்சனை தீராதுதான், ஆனால் சிலருக்கு அழுவதனால் ஒரு நிம்மதி(?!) இருப்பதாக நினைத்துக் கொண்டு தனிமை கிடைக்கும் போதெல்லாம் இன்ஸ்டால்மெண்டில் அழுது கொண்டு இருப்பர். இப்படி செய்பவர்களில் பெண்களே அதிகம் என்பதை மறுக்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும் போது, கவலைகளால் அதிகம் சோர்ந்து போவது பெண்களாக இருகின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பிரச்சனையை டீல் பண்ணுகிறார்கள். பெரும்பாலும் கவலையை கண்டு ஓடுவது ஆண்களுடைய பழக்கம் என்றால், கவலை இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது என்பது போல், "அழு" சீரியல்களை இழுத்து போட்டு பார்த்துக் கொண்டு, "கவலை" அடைந்து அடைந்து "நிம்மதி" அடையும் சில பெண்களை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை.  இந்த அழுகை நிம்மதி, ஒரு தற்காலிகமானதே, ஆனால் நிரந்தரமான நிம்மதி அல்லவா நமக்கு வேண்டும்?


சிலர் ஒரு படி மேலே போய், "யா அல்லாஹ் எனக்கு ஏன் இப்படி சோதனை?" என்று சிலர் அழுது புலம்பவும் பார்க்கிறோம். உங்களுக்கு பிறந்தது முதல் இறப்பது வரை பிரச்சனையே வராது என்ற உறுதி மொழியை யாருக்கும் அல்லாஹ் தரவில்லையே.. மாறாக அவனே திருமறையில் கூறுகிறான்.


நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)



வெறுமனே சோதிப்பேன் என்று சொல்லாமல் அதற்கு தீர்வு என்ன என்பதையும் அவனே சொல்லியும் காட்டி விடுகிறான். ஆம், "பொறுமையாக" இருப்பதுதான் அது.  விரும்பிய திருமணம் எல்லோருக்குமே வாய்ப்பது கிடையாது, வளர்ந்த பின் எல்லாருக்குமே சொந்தமாக ஒருவீடு, நல்ல வேலை கிடைத்துவிடுவது இல்லை. நோயே இல்லாத நிலையில் இருந்துவிட முடியாது, எல்லாருமே ஐம்பது வயது கூட தாண்டி வாழ்ந்து விட முடியாது என ஏகப்பட்ட "முடியாதுகள்"  உள்ளன, எல்லோருக்கும் எல்லாமே கிடைத்துவிட்டாலும் மனிதனுக்கு அது நிறைவை தந்துவிடாது என்பதை இறைவன் அறிவான். எல்லோருக்கு எல்லாவற்றையும் இறைவன் கொடுத்விட்டால் உலகத்தின் அன்றாட செயல்களில் பாலன்ஸ் போய்விடும்.


பாலன்சுடன் அல்லாஹ்வால் படைக்க முடியாதா என்றால் அல்லாஹ்வால் முடியும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. இறைவன் நமக்கு கொடுத்துள்ள இந்த பூமி  இப்படிதான் இருக்கும், சுவனத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். இது சுவர்க்கமும் அல்ல, எனவே வெறுமனே அழுது புலம்புவதில் அர்த்தமே இல்லை. நேரடியாகவே சுவனத்தை மட்டும் படைத்தது எல்லா மனிதர்களையும் அங்கே போட்டிருக்கலாம், ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. மாறாக இதை நீங்கள் சம்பாதித்து வாருங்கள். பிறகு பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறான்.


சுருக்கமாக சொன்னால், "சும்மா கிடைக்காது சுவர்க்கம்" என்பதுதான இதன் அர்த்தம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)