3. மீண்டும் சிலைகள்...

சில நூட்றாண்டுகளுக்கு முன்பு, "உலகம் உருண்டை" என்று சொன்னதால் கலிலியோ கொலை செய்யப்பட்டார். நீங்கள் செய்த ஒரு அறிவுபூர்வமான செயலுக்காக உங்களை ஊரில் இருந்து தள்ளி வைக்கிறோம் என்று அறிவித்தால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்? நமது "ஊர்" ஹீரோவுக்கும் இதுதான் நடந்தது.


ஏன் பாய் தாடி வைக்கல?" என்று கேட்டால், அதுவா.. ஏன் பெண்டாட்டிக்கு பிடிக்கல, என்னுடைய ஆபீசுல என்னைய ஒரு மாதிரி பாப்பாங்க, என்னோட அப்பா இது எல்லாம் ஓவர் அப்படீன்னு சொல்றார் என்று ஏகப்பட்ட சாக்கு போக்குகளை சொல்கிறோம்.  நமக்கு எல்லாம் முன்மாதிரியான நமது "ஹீரோ" என்ன செய்தார் தெரியுமா? ஒட்டு மொத்த ஊரே அவரை வெறுக்க ஆரம்பித்தது, ஏன் பெற்ற தந்தையே கொலை செய்துவிடுவதாக மிரட்டினார், ஆனாலும் சமரசம் என்ற பேச்சுக்கு அவர் யாருக்கும் இடம் கொடுக்கவே இல்லை. அப்படி என்னதான் நடந்தது அந்த ஊரில்? வாருங்கள் நாமும் சேர்ந்து கதையில் பயணிப்போம்.

நோவாவின் வெள்ளபெருக்கு முடிந்து பல காலம் கழித்து மீண்டும் இறைவன் விரும்பாத ஒரு நிகழ்வு எல்லா ஊர்களிலும் சர்வ சாதாரணமாக மீண்டும் நடக்க ஆரம்பித்தது.  ஆம்.. சுமார் 5000-6000 ஆண்டுகளுக்கு முந்தய அந்த "ஊரில்" எங்கெங்கு பார்த்தாலும் விதவிதமான சிலைகள், அதற்கு பூஜைகள், திருவிழா என பக்திமயமாக இருந்தது.

அந்த ஊரில் "ஆஜர்" என்னும் பெயருடைய ஒருவர் சிலைகளை செய்து வந்தார். விதவிதமான  சிறிய பெரிய சிலைகளை மரத்தாலும், கற்களாலும் செய்து வந்தார். அந்த ஊர் மக்கள் அதை அவரிடம் காசு கொடுத்து வாங்கி செல்வதை சிறுவர் இப்ராஹிம் ஆச்சிரியமாக கவனித்து வந்தார். இருக்காதா பின்னே? ஏனென்றால் சிலைகளை செய்வது தகப்பன் ஆயிற்றே! பொதுவாக சிறுவர்கள் என்றாலே எப்போதுமே விளையாட்டுதனமாகவே இருப்பர், ஆனால் சிறுவன்  இப்ராஹிமுக்கு அவர் மனதில்வேறு மாதிரியான ஆயிரம் கேள்விகள் ஓடின.

அட..  என்ன இது? என்னுடைய தந்தை அவரது சொந்த கையினாலேயே செய்கிறார்.. ஆனால் இந்த மக்கள் இதை கடவுள் என்கின்றனர், இந்த சிலைகளுக்கு பூஜை செய்கின்றனர், எனக்கு அது கொடு இது கொடு கேட்கின்றனர். சிறிது காலம் முன்பு வரை மரமாகவும், கல்லாக இருந்து தன்னுடைய தந்தையால்தான்  உருபெற்ற இந்தசிலைகள் எப்படி இவர்கள் தேவையை நிறைவேற்றும்? என்பதுதான் அவர் மனதில் உதித்த கேள்வி.


                          (Image courtesy: Thanks from http://blog.britishmuseum.org)
அந்த ஊர் மக்கள் செய்வது இருக்கட்டும், என்னுடைய அப்பாவே  இந்த கடவுளை படைத்தது விட்டு அதனிடமே  எனக்கு அது கொடு இது கொடு என்கிறாரே? இது ஒன்றும் அறிவான செயலாக இல்லையே! என பலவாறாக யோசிக்க ஆரம்பித்தார். காலம் செல்ல செல்ல மனதில் சிறிது தெம்பை வர வழைத்து இது பற்றி தன்னுடைய தந்தையிடமே கேட்க முடிவு செய்து அவரிடம் சென்றார்.

"அப்பா.. எனக்கு ஒரு கேள்வி வருகிறது.." என மெல்ல ஆரம்பித்தார். அவருக்கு திருப்திகரமான பதில் கிடைத்ததா?


(இன்ஷா அல்லாஹ் தொடரும்..)


Reference :

1. http://blog.britishmuseum.org/tag/ur/
2. Islamic Scriptures (Quran ஸூரத்துல் அன்ஆம்)