8. என் வாழ்க்கை, என் இஷ்டம்


வாலிப வேகம் என்றால் என்ன ? எப்படி இருக்க வேண்டும்? எதாவது அளவு கோள் இருக்கிறதா? வாலிப வேகத்துக்கு முன்மாதிரியாக இப்ராஹிமை முன்பு உதாரணம் கூறினோம், அப்படி என்றால் இளைஞர்கள் அனைவரும் சிலை உடைக்க கிளம்புங்கள் என்று அர்த்தமா?

இப்ராஹிம் செய்தார்  என்றால் அவர் அந்த மக்களுக்குள் ஒருவராக இருந்தார், அவர் தந்தை சிலைகள் செய்பவராக இருந்தார். படைத்த ஒரு இறைவனை வழிபடாமல் மனம் போன போக்கில் மரங்களையும், கற்களையும், முன்னோர்களையும் இறைவனுடைய ஸ்தானத்தில் வைப்பதை இப்ராஹிம் எதிர்த்தார், அவர் எதிர்த்தாலும் கூட அம்மக்கள் மீண்டும் மீண்டும்அவரை அவர்கள் தெய்வங்களை வணங்க அழைத்தனர், ஆதலால் வெகுண்டெழுந்தார்.

நம் பெற்றோர் முஸ்லிம் அதனால் நாமும் முஸ்லிம் அதனால் இப்ராஹிம், நபிகள் நாயகம் போன்றவர்களின் உண்மையான நோக்கங்களையும், போராட்ட குணங்களையும் நம்மை போன்ற தலைமுறை முஸ்லிம்களால் சரிவர  புரிந்து கொள்ள முடியவில்லை, அதனால்தான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு இருக்கும் வேகம் தலைமுறை முஸ்லிமிற்கு இருப்பது இல்லை.

நம்மவர்களில் யாராவது தொப்பி, தாடி, பள்ளிவாசல் என மாறினால், முதல் எதிர்ப்பு வீட்டிலேயே வருகிறதா? இல்லையா? ஓவராக பண்ணுகிறான் என்று லேபில் குத்துகிறார்களா இல்லையா? முதல்ல படி அப்புறம் தொழு என்றும், இப்படி இருந்தாய் என்றால் உனக்கு வேலை கிடைக்காது, பொண்ணு கிடைக்காது என்று இலவச அட்வைஸ் வேறு கிடைக்கும். 
விடாபிடியாக இஸ்லாத்தை பின்பற்றினால் அவரை கண்டு சக முஸ்லிமே "இவன் அவனாக இருப்பானோ" என ஓட்டம் பிடிப்பதை அவ்வப்போது நாம் பார்க்கிறோம். இதுதான் நம்முடைய முஸ்லிம்கள்  நிலை. அல்லாஹ்-ரசூல் சொன்ன படி வாழ்கையை அமைத்துக் கொள்ளுதலை பார்த்து சிலர் மீது சிலருக்கு வெறுப்பும், ஏளனமும் ஏன் வருகிறது? 
அதே முஸ்லிம் இளைஞன் "என் வாழ்க்கை, என் இஷ்டம்"  என்று கோஷம் போட்டுக் கொண்டு தப்பு தண்டா எதாவதுசெய்தால் சமூகம் எப்படி நடந்து கொள்கிறது?  
  • மேற்கத்திய உலகம் என்றால், "டீன் ஏஜ் நடக்குது, அப்படிதான் இருப்பார்கள்" என்று சமாளிக்கிறது.   
  • நம்ம ஊராக இருந்தால்..   "வயசு பசங்க அப்படிதான் முன்ன பின்ன இருக்கும், போக போக சரியாகிடும், ஒரு கால் கட்டு போட்டா சரியாயிடும் என்று சொல்லி சமாளிகிறது.


இந்த சமுதாயத்திற்கு உண்மையிலேயே தேவையான இளமை வேகம் எது? ஜாலியாக இருப்பது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றனவா? இல்லவே இல்லை. அநீதிகளை எதிர்ப்பதாக்கட்டும், உடல் உழைப்பாகட்டும் அதுதான் தேவையான இளமை வேகம்.    எது நல்லது எது தவறு என்பதை யார் முடிவு செய்வது?

எனக்கு எது சரி என்று படுவது என்னால் தள்ளப்பட்டு கீழே விழுந்தவனுக்கு இல்லை. எனக்கு தவறு என்று படுவது என் மகனுக்கு தவறு என்று படாது. எல்லோரையும் ஒரே முடிவுக்கு வர வைப்பது எப்படி? யார் எது சரி எது தவறு என்பதை முடிவு செய்வது? நான் அல்லது நீங்கள் முடிவு செய்தால் குழப்பம்தான், ஆனால் படைத்தவன் சொன்னால் சரியாக இருக்கும்தானே.. அதனால்தான் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டும். அதற்குதான் இப்ராஹிம், நபிகள் நாயகம் வந்தார்கள்.



ஒரு இளைஞன் இஸ்லாத்தை பின்பற்றுகிறான் என்றால்....

அவன் உலகத்தை விட்டுவிட்டு பள்ளிவாசலிலேயே இருந்து விடபோவதும் இல்லை. குரானிலேயேஎல்லா நேரத்தையும் இழந்துவிடப் போவதும் இல்லை.  பயங்கரவாத செயல்களை செய்யப் போவதும் இல்லை. இஸ்லாத்தைதை புரிந்து கொள்ளாமையால் வரும் அறியாமை இது. சைத்தான் அப்படிப்பட்ட தோற்றத்தை, படபடப்பை ஏற்படுத்துகிறான்.

நேரம் எப்படியும் கழியக் கூடியது, சும்மா அமர்ந்து இருந்தால் கூட கழிந்து விடும். ஒருவன் இளைஞன் தீன் படி நடக்கிறான் என்றால்  அவன் நண்பர்களுடன் அரட்டை, டீவியில் நேரம் போவதற்கு பதில் தொழுகையில் நேரம் செலவழிக்கப்படும். குமுதம், ஆனந்த விகடன் படிப்தற்கு பதில் குரான் படிக்கப்படும். அதற்காக செய்தித்தாளை பார்க்காமல், கல்வி கற்காமல், வேலை வெட்டி செய்யாமல், குழந்தை குட்டிகளை கவனிக்காமல் இருந்துவிடப் போவது இல்லை.

இன்னும் சொல்ல போனால் மானக்கேடான செய்திகளை படிப்பதில் இருந்து இஸ்லாம் அவனை தடுக்கும், படிப்புநன்றாக வரும் பட்சத்தில் நன்றாக படித்து நல்ல ஹலாலான வழியில் சம்பாதிக்க இஸ்லாம் தூண்டும், சினிமா, மது, சீட்டில் பணம் செலவழியாமல் ஸதகா, ஜகாத், பிறருக்கு உதவுவது என இஸ்லாம் செய்ய வைக்கும். சமுதாயமும் உயரும், நாடும் உயரும். இல்லாவிட்டால் முஸ்லிமுக்கு 2.5% இட ஒதுக்கீடு வேண்டும் என இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னும் நம்மவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்து கொண்டு இருப்பர்.


நாம் சொல்ல வருவது என்ன?  

எல்லா ஜீவராசிக்களும்தன் பிறக்கின்றன, அடுத்த தலைமுறைக்கு வித்திடுகின்றன, இறுதியில் இறந்து போகின்றன. நம்முடை பிறப்பின் நோக்கம் நாம் டாக்டராகவோ, இஞ்சினியராகவோ, பிசினஸ்மேன்னாகவோ இருப்பதற்காக இல்லை, கல்யாணம் செய்வது குழந்தை குட்டி பெறுவது இல்லை. வீடு வாசல், கார், வேலை, கல்யாணம், குழந்தைகள் எல்லாம் தேவை. அவற்றை தேட ஓடி உழைக்க வேண்டும், இஸ்லாம் தடுக்க வில்லையே, அதே சமயம் அல்லாஹ்வை வணங்குவது கடமை. ஆகவே உலக தேவைகளுக்கே முன் உதாரணம் கொடுத்து நாம் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற தவறினால் மறுமை வாழ்வு கேள்விக்குறிதான். முஸ்லிம்கள் இஸ்லாத்தை முறைப்படி பின்பற்றினால் முஸ்லிம் சமுதாயத்துக்கும் சரி, நாட்டுக்கும் நன்மையே. எப்படி?

அல்லாஹ்வுக்கு பயப்படுவதால்...

  • லஞ்சம் வாங்காதவனாக, லஞ்சம்  கொடுக்காதவனாக, 
  • கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்யாதவனாக, 
  • அண்டை வீட்டு பெண்ணை நோக்காதவனாக,
  • அண்டை வீட்டாருக்கு உதவுபவனாக, 
  • வயோதிக பெற்றோரை கவனிப்பவனாக, 
  • மனைவியை மட்டும் நேசிப்பவனாக, 
  • ஒழுங்காக வருமான வரி ஒழுங்காக செலுத்துபவனாக, 
  • இஸ்லாம் பெயரில் தவறுகள் நடப்பதை களைபவனாக,
  • நாட்டை உண்மையாக நேசிப்பவனாக 

முஸ்லிம் இளைஞன் இருப்பான். அப்படிதான் இருந்தார் வாலிபர் இப்ராஹிம்.

அல்லாஹ் - ரசூல் எவ்வாறு தேவைகளை நிறைவேற்ற கற்று கொடுத்து இருகிறார்களோ அவ்வாறு தேவைகளை நிறைவேற்றும் போது அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும், நம் செயல்களில் பரக்கத்தும் கிடைக்கும். நிறைய கதை பேசிவிட்டோம், சரி இனி மீண்டும் இப்ராஹிம் கதைக்குள் நுழைவோம்..


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)