7. அக்னி நெருப்பும் அஞ்சாத நபியும்..

சிலைகளை  உடைத்த வாலிபர் இப்ராஹிமுக்கு என்ன தண்டனை தரலாம் என ஊர் பெரியவர்கள் கூடி பேசினர், அதில் நெருப்பு குண்டத்தில் போட்டு எரித்து கொல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

நெருப்பு குண்டமும் தயார் செய்யப்பட்டு காவு வாங்குவதற்கு இப்ராஹிமிற்கு முன்பு தக தக வென்று எரிந்து கொண்டு இருந்தது. அவரை உள்ளே தள்ளிவிட்டனர். நெருப்பு அவரை சூழ்ந்து கொண்டது, ஊர் மக்கள் முகமெல்லாம் சாதித்த வெறியில் திளைத்தது..

நல்ல தலைவர்களோ, நல்ல அதிகாரிகளோ, உண்மை சொல்ல வந்த சாட்சிகளோ, உண்மையை உலகுக்கு சொல்லும் நிருபர்களும் அவ்வப்போது கொல்லப்படுவதை அன்றாடம் நாளிதழ்களில் பார்க்கிறோம். அவர்கள் எல்லாம் தாங்கள் செய்யும் வேலைகளில், போராட்டங்களில் அபாயம் உண்டு என்பதை அறியாதவர்களா? தெரிந்தும் ஏன் இறங்கி போராடுகிறார்கள்? தான் கொண்ட கொள்கைக்காக, நீதி நேர்மைக்காக, பிறருக்காக  போராடுகின்றனர், அப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நன்மைக்காக கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.


எப்படி சிலருக்கு செல்வ வளத்தை கொடுத்து சோதிக்கிறானோ அது போல சிலருக்கு துர் மரணத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலையை கொடுத்தான் சோதிக்கிறான். அல்லாஹ் நாடினால்தான் யாருக்கும் நன்மையையும் நிகழும், தீங்கும்  நடக்கும், அல்லாஹ்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவர்களுக்கு கொடுத்து சோதிக்கவும் செய்கிறான், பிறர் நம் மீது தீங்கு செய்வதையும் சோதனைக்காக அனுமதிக்கிறான்.

சரித்திரத்தில் எந்த நபியும் சாமானியமாக ஏகத்துவத்தை போதிக்க முடிந்தது இல்லை, வீட்டை விட்டு, ஊரை விட்டு துரத்தப்பட்டனர், கற்களாலும், ஆயுதங்களாலும் தாக்கப்பட்டனர், சொந்த பந்தங்களை பேணுவது அசாதாரணமான நிலை, வஞ்சகம், போர், கொலை மிரட்டல்கள்களுக்கு ஆளாவது என பல்வேறு நிலைகளைத் தாண்டிதான் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதை நிலை நிறுத்தினர். சரித்திரத்தில் இப்படி எத்தனையோ நிகழ்வுகள் அரங்கேறியது. அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

நபிகள் நாயகத்தை பல முறை கொள்வதற்கு கொலை முயற்சி நடந்த போதும், நான் அல்லாஹ்வையே நம்புகிறேன் என்னை காப்பாற்ற அவன் போதுமானவன் என்றே சொன்னார்.  அல்லாஹ் ஒவ்வொரு முறையும் காப்பாற்றினான். 
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்த இப்ராஹிம் அதற்காக படைத்தவனிடமே பாதுகாப்பு தேடினார். இறைவனும் இப்ராஹிமை காப்பற்றினான். இதை பற்றி அல்லாஹ் திருகுரானில் இவ்வாறு கூறுகிறான்:
 “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.(அல்-குரான் 21:69)


 இப்ராஹிம் நபியும், முஹம்மது நபியும் மரணத்திற்கு பயந்து அழுது புலம்பவும் இல்லை. தன்னுடைய நிலை இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொள்ளவும் இல்லை. அழுது புலம்புவது, நிராசையாகி போவது நபிக்கு அழகன்று. அப்படி இருக்கையில் இன்னொரு நபியான இயேசு மரணத்திற்கு பயந்து, அழுததாக பைபிள் கூறுவது அவரை கேவலப்படுத்துவதாகும்.  
இப்ராஹிம் நபியை மட்டுமல்ல இயேசுநபியையும் காப்பாற்றி தன்னளவில் வானத்திற்கு உயர்த்திக் கொண்டதாக இறைவன் திருகுரானில் குறிப்பிடுகிறான். ஆனால் கிறிஸ்தவர்கள் இயேசு நபி கொலை செய்யப்பட்டதாக நினைத்துக் கொண்டு இருகின்றனர். பைபிளில் மத்தேயு அதிகாரத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது பிதாவின் மீது நம்பிக்கை இழந்து அழுது புலம்பியதாக கூறுகிறது : 

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். ( 27– 46) 

அவர் கர்த்தர் மேல் நிராசையானார் என்றும் கூறுவதிலோ இருந்து இயேசு மரணிக்கவே இல்லை என்பதையும், பைபிள் கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஒன்று என்பதை தெளிவாக அறியலாம். இத்தனைக்கும், தன்னைத்தானே மாய்த்து ரத்த பலி கொடுத்து மனிதர்களுடைய  பாவங்களை போக்கி ரட்சிக்க இயேசு வந்தார் என்று கிருஸ்தவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், இயேசு தெரிந்தே மரணிக்க வந்தார் என்றாகி விடுகிறது. எனவே அவர்  சிரித்தமுகமாக மரணத்தை ஏற்றிருக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் அமைதியாவது காத்திருக்க வேண்டும். ஆனால் பைபிள் அவ்வாறெல்லாம் குறிப்பிடவில்லை.,, மாறாக  அவர் நிராசையாகி அழுது புலம்பினார் என்றும், "ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று கேட்பதும்  கர்த்தரை பார்த்து கேட்டார்  என்றும் கூறுவதில் இருந்து சிலுவையில் இறந்தது இயேசு இல்லை என்பதை தெளிவாக அறியலாம்.

சரி நமது இப்ராஹிம் கதைக்கு வருவோம். நெருப்பு இப்ராஹிமை தீண்டாததை கண்ட அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளவே இல்லை. இதை கண்ட சிறுவன் லூத், இப்ராஹிமின் மார்க்கத்தை ஏற்றார், லூத் இப்ராஹிமின் உறவினரும் ஆவார்.

அந்த ஊருக்கு அருகே வாழ்ந்து வந்த நம்ரூத் என்னும் மன்னன் , "நானே இறைவன்" என்று பிரகணப்படுத்தி இருந்தான். நெருப்பு இப்ராஹிமை தீண்டாததை கேள்வியுற்ற நம்ரூத் இப்ராஹிமை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தான். இப்ராஹிமும் அவனை சந்திக்க சென்றார், அங்கேயும் காரசாரமாக விவாதம் நடந்தது... 


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)