13. புரியாவிட்டாலும் குரானை பின்பற்ற வேண்டுமா?

நாம் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதை பற்றி முழுமையாக விசாரித்து , அது நமக்கு ஒத்துவருமா என்று ஆராய்ந்த  பின்னே முடிவு எடுக்கிறோம்.

நமது அரசாங்கம் ஏதாவது ஒரு ஆணை பிறப்பித்தால் உடனே நாம் ஏற்றுக் கொள்வது இல்லை. அதில் நமக்கு தெளிவு இல்லாவிட்டாலோ, அல்லது அதில் நமக்கு ஏதேனும் பாதகம் இருப்பதாக தெரிந்தால் நீதி மன்றத்தில் "ஸ்டே" வாங்குகிறோம், போராட்டம், ஊர்வலம் என்று நமது எதிர்ப்பை காட்டுகிறோம்.  இது சரியான அணுகுமுறைதான் என்றாலும் இதை எல்லா இடங்களிலும் நாம் சாத்தியப் படுத்த முடியுமா? என்றால் முடியாது என்றே அடித்து சொல்லலாம். ஏன் முடியாது என்று உங்களில் சிலர் ஆச்சிரியப் படலாம். ஏனென்றால் நாமே இதை பல நேரங்களில் நம்மிடம் இப்படி நடந்து கொள்வதை விரும்புவது இல்லை என்பதுதான் நிஜம்.

உதாரணத்துக்கு உங்கள் குழந்தைக்கு உணவில் பாகற்காயை சேர்த்து கொடுக்கிறீர்கள். யாருக்குதான் அந்த பாகற்காய் பிடிக்கும்? கண்டிப்பாக சாப்பிட மாட்டேன் என்பார்கள், வலுகட்டாயமாக சாப்பிடத்தான் வேண்டும் என்று நிர்பந்தித்தால், நாம் அவர்களுக்கு ஏதோ துன்பத்தை, பாதிப்பை ஏற்படுத்தியது போல அழுவார்கள்.

கொஞ்சம் பெரியவன் என்றால் அவனுக்கு அதன் நன்மைகளை எடுத்து சொல்வோம், ஆனால் அவர்கள் சாப்பிடுவார்கள் என்று கிராயாண்டி இல்லை.. சிறிய பையனாக இருந்தால், அவனிடம் "பேச்சுவார்த்தை" நடத்துவது பிரயோஜனம் இல்லாதது, வலுகட்டாயமாக அவனுக்கு ஊட்டுவோம்.

நான் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொண்ட பின் தான் செய்வேன், என்னுடைய அறிவுக்கு ஏற்புடையதாக இருந்தால்தான் செய்வேன், எனக்கு அதில் பாதிப்பு இல்லாமல் இருந்தால்தான் செய்வேன் என்று நம் பிள்ளைகள் சொன்னால் அதை நாம் ஏற்ப்பது இல்லை.

மாறாக நம்முடைய ஒவ்வொரு கருத்துக்களையும் இது போல அலசி, செய்யலாமா வேண்டாமா? இது எனக்கு பிடித்திருக்கிறதா? பாதிக்கிறதா? என்று ஆராய்ந்து கொண்டிருந்தால் நமது BP கொஞ்சம் எகிறி போய்விடுகிறது.
நான் சொல்வதை நீ செய், கேள்வி கேட்காதே! உனக்கு தெரியாதது எனக்கு தெரியும் என்றுதான் சொல்வோம் இல்லையா? எனவேதான் எல்லாவற்றிற்கும் நாம் அறிவியல் விளக்கமும், நன்மை-தீமை ஆராய்ச்சி எல்லாம் செய்து கொண்டிருக்க முடியாது.

எப்படி நம் பிள்ளைகள் அறிவிற்கு எட்டாதது என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளதோ அது போன்று நம் அறிவிற்கு எட்டாதது என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. அரசாங்கமும், சட்டங்களும் மனிதர்களால் அவர்களின் அறிவுகேற்ப உருவாகின்றவை, மனிதனுடைய அறிவு வளர வளர பழைய சட்டங்களின் மீது விமர்சனங்கள் எழுந்து புதிய சட்டங்கள் தேவை படுகின்றன. இதே அணுகு முறையை நாம் அல்லாஹ்வின் மீது காட்டலாமா? என்றால் கூடவே கூடாது என்பதே பதில். ஏன்?

நாம் நம்முடைய குறைந்த அறிவு கொண்டு அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை அலசி ஆராய்வதால் அதில் நமக்கு சில சமயம் குறைகள் இருப்பது போலவும், பாதகம் இருப்பது போலவும், காலத்திற்கு ஒவ்வாதது போலவும் தெரிகிறது. ஆனால் உலகனைத்தையும் படைத்தது வளர்த்து, பக்குவப் படுத்தும் நாயனாகிய இறைவன் பூரண ஞானம் மிக்கவன், அவனுடைய அறிவில் குறை இருப்பது சாத்தியமே இல்லை. அதற்காக அறிவியலை நாம் புறகணிக்க சொல்கிறோம் என்பது இதன் அர்த்தம் இல்லை, அல்லாஹ் படைத்ததில் எவ்வாறு புரிந்து கொண்டானோ அதுவே அறிவியல் ஆகும். ஆகவே எல்லாவற்றையும்படைத்து அதைபுரிந்து கொள்ள ஆற்றல் கொடுத்த அல்லாஹ்வை ஏற்று எக்கலாத்துக்கும் அவனுடய சட்டங்களுக்கும், வழி காட்டுதல்களும், சரியானதாகவும், மனித குலத்திற்கு நன்மை அளிக்க கூடியதாகவும் இருக்கும் என்பதை விளங்கிவிட்டால் போதும்,  நம்முடைய மனம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணியும்.

எனவேதான் நாம் தினமும் "நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக, (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல." என்று தொழுகையில் பிராத்தனை செய்கிறோம். இதன் மூலம் நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படக் கூடியவர்களாக ஆகக் கூடும். நமக்கும், முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் முன் மாதிரியான இப்ராஹிம் நபி இதை நன்றாக விளங்கி இருந்ததனால்தான் அல்லாஹ்விடம் எந்த நிலையிலும் குறுக்கு கேள்வியும், வாக்குவாதமும் செய்ய வில்லை.  எத்தகைய அழகிய முன்மாதிரி இது. அல்ஹம்துலில்லாஹ்!



உங்கள் குழந்தையை முதல் நாள் பள்ளியில் விட்டுவிட்டு வந்த போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது? நம்மை காணாது அவன் அழுவானா? அழுதால் எப்படி சமாளிப்பார்கள்? என்றெல்லாம் மனதுக்குள் எவ்வளவு யோசித்திருப்போம்.

ஒவ்வொருமுறையும் தொட்டில் கட்டும் போது அது ஸ்டிராங்காக இருக்கிறதா இல்லையா என்பதை எத்தனை முறை சரி பார்த்து இருப்பீர்கள்? உணவு போஷாக்காக இருக்கிறதா என்று எத்தனை ஆராய்ந்து இருப்பீர்கள்? இப்படி குழந்தையின் மீதுள்ள பாசத்தினால் அக்கறை காட்டுகிறோம்.

ஆனால் இப்ராஹிம் நபிக்கு "மக்காவுக்கு" கிளம்பு என்று அல்லாஹ்வின் கட்டளை  வந்தாகிவிட்டது. கிளம்பிவிட்டார். நட்ட நடு பாலைவனத்திற்கு சிறு கைக்குழந்தையோடு சென்று என்ன செய்ய போகிறேன்? அவனுக்கு கஷ்டமாக இருக்குமே, அவர் குழந்தை மேல் அக்கறை காட்டவில்லையா? இது எப்படி சாத்தியம் என்று யாரும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ் எதை சொன்னாலும் அது சரியாகவே இருக்கும், அது என்னுடைய மகன் இஸ்மாயிலுக்கும் சரியானதாகவே இருக்கும் என்று கட்டுப்பட்டார். ஆம்,கட்டுப்படுதலைதான்(submission)  இஸ்லாம் என்கிறோம், கட்டுப்படுபவரைதான் முஸ்லிம் என்கிறோம். நாம் எந்த அளவு இஸ்லாத்தில் இருக்கிறோம் என்பற்கான அளவுகோல் என்னவென்றால், "நாம் எந்த அளவுக்கு அவனுக்கு கட்டுப்படுகிறோம்" என்பதே!

இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம், அதே வேளையில் பூமியில் யாரேனும் குழப்பம் செய்தால், அவர்கள் அதை விட்டு நீங்கும் வரை போர் செய்ய அறிவுறுத்துகிறது. ஒரு கட்டத்தில் அல்லாஹ் குர்ஆனில் ஏன் போர் செய்யப்படவேண்டும் என்று குறித்து இறக்கிய வசனம் எல்லா இடங்களுக்கும் பொருந்தும். இங்கே பலருடைய எண்ண ஓட்டம் எல்லாம் எப்படி 1400 வருடங்களுக்கு முந்தயஅல்லாஹ்வின் வேதம் எல்லா காலத்துக்கும் சரியாக இருக்கும் என்று இருந்தால் கீழே உள்ள வசனம்தான் அதற்கான பதில்.

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (2:216)

அல்லாஹ் ஒன்றை செய்யுமாறு கட்டளை இட்டுவிட்டால், does it  make any sense!(அது சரியாக இருக்குமா? இருக்காதா?) எப்படி சாத்தியப்படும்? என்று எதிர் கேள்வி கேட்பதும், வாதிடுவதும் ஷைத்தானின் குணம்.அவன் அவ்வாறு செய்ததனால்தான் அவனை அல்லாஹ் வெளியேற்றினான். இப்ராஹிம் நபி கட்டுப்பட்டார், அல்லாஹ் அவருக்கு "இறைவனின் தோழன்" என்னும் உயர் பதவியை அளித்தான்!

இப்ராஹிம் நபி அவர்கள் மேலே நம்மை போல யோசிக்க ஆரம்பித்து இருந்தால், ஷைத்தான் இடையில் புகுந்து குழப்பி இருப்பான், ஆனால் கேள்வி கேட்காது கட்டுப்படக் கூடிய இப்ராஹிம் அவர்கள் எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்று அன்னை ஹாஜர் அவர்களையும், குழந்தை இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு மக்காவுக்கு கிளம்பி விட்டார்கள். வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம்..


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)